You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ் சினிமாவில் டிரெண்டாகும் பார்ட்-2 படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றனவா?
- எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த சில மாதங்களாகவே தமிழில் நிறைய ‘பார்ட்-2’ திரைப்படங்களை வெளிவருகின்றன.
அண்மையில் பொன்னியின் செல்வன் – 2, பிச்சைக்காரன் – 2 என அடுத்தடுத்தடுத்து சீக்குவல் திரைப்படங்கள் வெளியாகின. அந்த வரிசையில் தற்போது, திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்டின் அடுத்த சீக்குவல் திரைப்படமான பீட்சா- 3 விரைவில் வெளிவரவிருக்கிறது.
சுமார் 20 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா மக்களின் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்தது. அவர்களின் ஒரே பொழுது போக்கு சினிமா மட்டுமே. திருவிழா, வீட்டில் விசேஷம் என்றால் ‘சினிமாவுக்குப் போகலாம்’ என்ற அவர்களின் முடிவே கொண்டாட்ட மனநிலையை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
இன்று, 2000களுக்குப் பின் பிறந்த தலைமுறை டிஜிட்டல் யுகத்திற்கு பழக்கப்பட்டிருப்பதாலும், செல்ஃபோன் தலைமுறையாகிப் போனதாலும் இவர்களின் பொழுதுபோக்கும், கொண்டாட்ட மனநிலையும் முற்றிலும் மாறிவிட்டன. ஆனாலும் கூட, சினிமாவின் தாக்கமென்பது துளியும் குறையவில்லை. என்ன தான் தலைமுறைகள் மாறினாலும், இந்த நொடியும் கல்லூரி மாணவர்கள் வகுப்பினை கட் அடித்து விட்டு அனிச்சை செயலாய் சென்று நிற்குமிடம் சினிமா தியேட்டர்கள் தான்.
பார்ட்-2 படங்கள் தமிழ் சினிமாவுக்கு புதுமையா?
அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான ட்ரெண்ட், ‘பார்ட்-2’ படங்கள் எடுப்பது.
கொஞ்சம் பின்னோக்கி சென்று தமிழில் இந்த பார்ட்- 2 கலாசாரம் எப்பொழுது வந்தது எனப் பார்த்தால், 1979-இல் கல்யாணராமன் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழின் முதல் இரண்டாம் பாகமாக வந்த திரைப்படம் ‘ஜப்பானில் கல்யாணராமன்’.
ஒரு காலகட்டத்தில் தமிழில் சீக்குவல் திரைப்படங்கள் சரமாரியாக எடுக்கப்பட்டன. சென்னை- 28, சிங்கம், வேலையில்லா பட்டாதரி, ரோபோ உள்ளிட்ட திரைப்படங்களின் பார்ட்-2 எடுக்கப்பட்டு பெரும் வெற்றியடைந்தன.
இதில் குறிப்பாக, பேய், ஆவியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் பார்ட்-2 திரைப்படங்களாக வெளி வந்து சக்கைபோடு போட்டன. காஞ்சனா, அரண்மனை, பீட்சா உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த வரிசையைச் சேர்ந்தவையே. இத்திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் மாறியிருக்கும், அதனால் முதல் பாகத்தின் தொடர்ச்சி என இவற்றைக் கூற முடியாது.
‘பார்ட்-2 டிரெண்டிற்கு பாகுபலி வெற்றியே மூல காரணம்’
இது குறித்து திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆலோசகர் கருந்தேள் ராஜேஷிடம் கேட்டபோது, “ஹாலிவுட்டில் சீக்குவல்கள் எடுப்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது. தமிழில் சீக்குவல் கலாசாரம் பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் ஆரம்பமாகியிருக்கிறது என நினைக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இங்கு சீக்குவல் திரைப்படங்கள் எடுக்கும் கலாசாரம் இல்லவே இல்லை. மலையாளத்தில் சீக்குவல் திரைப்படங்கள் அடிக்கடி வெளிவருவதுண்டு. இப்பொழுதுள்ள தமிழ் சினிமா கருத்துகளைக் கொட்டுவதாக (agenda-driven) இருக்கிறது. ஜனரஞ்சகமாக மக்களை மகிழ்விக்கும் திரைப்படங்களில் இயக்குநர்கள் கவனம் செலுத்துவதில்லை.
ஹாலிவுட்டில் Back to the future, Mummy, Terminator போன்ற திரைப்படங்கள் சீக்குவலாக எடுக்கப்பட்டபோது உலகளவில் பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியது. அதுபோல இங்குள்ள சீக்குவல் திரைப்படங்கள் முறைப்படுத்தப்பட்டு தரப்படுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் தாண்டி, ஒரு தயாரிப்பாளர் இங்கு சீக்குவல் திரைப்படம் எடுக்கிறார் என்றால் அதில் தயாரிப்பு செலவு, முதலீடு, மற்றும் வியாபாரம் இதையெல்லாம் தான் கருத்தில் கொண்டு தான் எடுக்கிறார்,” என்று பதிலளித்தார்.
‘எங்களுக்கு பிராண்ட், புதிய இயக்குநர்களுக்கு வாழ்க்கை’
சீக்குவல் திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைகிறதா? தொடர்ந்து சீக்குவல் திரைப்படங்கள் எடுக்கப்படுவது பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறதா? என தொடர்ந்து பீட்சா 2, பீட்சா 3 , சூது கவ்வும் 2 உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரிக்கும், தமிழ் சினிமாவின் வரலாற்றை தனது வித்தியாசமான கதைக் களங்களால் புரட்டிப் போட்ட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சி வி குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
தமிழ் சினிமாவின் சீக்குவல் திரைப்படங்களைப் பற்றி இவர் கூறும்போது, “நாங்கள் பீட்சா, இன்று நேற்று நாளை, தெகிடி என எங்கள் அத்தனை படங்களின் கிளைமேக்ஸ்களையும் ஓபன் எண்ட் ஆகவே விட்டு விட்டோம். ஏனென்றால், எங்களுக்கு அத்திரைப்படங்களை உருவாக்கும்போதே அதனை இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் இருந்தது. உதாரணமாக, பீட்சா திரைப்படத்தைத் தொடர்ந்து பீட்சா 2 திரைப்படத்தைத் தயாரித்தேன். அதன் வெற்றியைத் தொடர்ந்து பீட்சா 3 திரைப்படத்தை தயாரித்து, ரிலீசுக்காகக் காத்திருக்கிறோம்,” என்றார்.
எந்த பின்புலமும் இல்லாமல் தாம் திரைத்துறைக்குள் நுழைந்து ஒவ்வொரு படத்தைத் தயாரித்தபோதும் தமது முதல் படத்திற்குச் செய்த அளவு முயற்சிகள் செய்ய வேண்டியிருந்ததாகக் கூறுகிறார் குமார்.
அதனால் அவர்கள் தயாரித்து, வெற்றி பெற்ற திரைப்படத்தை தங்களது ‘Brand Extension’ ஆக உபயோகிப்பதாகவும், அதில் எந்த தவறும் இல்லை எனவும் கூறுகிறார்.
“இப்போது நாங்கள் தயாரித்துள்ள பீட்சா 3 திரைப்படத்தின் இயக்குநர் மோகன் கோவிந்துக்கு இது முதல் படம். பீட்சாவின் உரிமையையும், அதன் வெற்றிப் பிம்பத்தையும் வைத்து தகுதியான நபரும், தரமான கதையும் வரும்போது அது ஒரு இயக்குநரின் வாழ்க்கையை ஆரம்பிக்க உபயோகப்படுத்துகிறோம்,” என்றார்.
வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகம்
தமிழ் ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்த பீட்சா திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தினை இயக்கியுள்ள மோகன் கோவிந்திடம் இது போன்ற சீக்குவல் திரைப்படத்தை அவர் இயக்கியபோது அவருக்கிருந்த சிக்கல்களையும், ஏற்கனவே பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் தலைப்பை பெற்ற போது என்ன உணர்ந்தீர்கள் எனக் கேட்டதற்கு அவர், “பீட்சா திரைப்படத்தின் தலைப்பை பெற்றபோது முதலில் பயமாக இருந்தது, பின்னர் அவ்வளவு பெரிய ஹிட் திரைப்படத்தின் சீக்குவலை இயக்க வேண்டும் என்பதை நினைத்தபோது மிகவும் பொறுப்பான இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு படத்தை முடித்துக் கொடுத்தேன்,” என்றார்.
சீக்குவல்கள் ரசிகனைத் திருப்திப்படுத்துகிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பெரும்பாலான சினிமா ரசிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் பதில் – “இப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததாலேயே துணிந்து அவற்றின் சீக்குவல்களை எடுக்கின்றனர். சில சமயங்களில் அவை ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் செய்கின்றன. அதனால் சீக்குவல் படங்களை முதல் பாகத்டோடு ஒப்பிட்டு விமர்சன ரீதியாக மட்டுமே அணுகாமல், சாதாரண ரசிக மனநிலையிலிருந்தும் பார்க்க வேண்டும்.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்