மோதி முதல் ஒபாமா வரை, தலைவர்கள் பொதுவெளியில் அழுவது மக்களிடையே என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது?

    • எழுதியவர், நிக்கோலா பிரையன்
    • பதவி, பிபிசி நியூஸ்

ஆண்கள் பொதுவெளியில் அழுவதில்லை என்ற கூற்று இப்போது வழக்கொழிந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் அழும்போது, அதை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்?

இந்த மாதத்தின் தொடக்கத்தில், வேல்ஸ் நாட்டின் முதல் மந்திரி வாகன் கெதிங் (Vaughan Gething), வேல்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடங்குவதற்கு முன் அழுது கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவர் தோல்வியும் அடைந்தார்.

இப்படியாக, வின்ஸ்டன் சர்ச்சில் முதல் ஒபாமா, நரேந்திர மோதி வரை, பொதுவெளியில் அழுத்த உலகத் தலைவர்களின் பட்டியலில் வாகன் கெதிங் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இப்படி பொது இடங்களில் அழும் தலைவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்களாக அல்லது உண்மையானவர்களாகக் கருதப்படுகிறார்களா அல்லது அவர்களின் பலவீனத்தின் அடையாளமாக இது பார்க்கப்படுகிறதா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'மக்கள் தலைவர்களை பலவீனமாகப் பார்க்க விரும்பவில்லை'

குடோ ஹாரி, பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றியவர். முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் காலத்தில் அவர் அங்கு வேலை செய்தார்.

"ஒரு தலைவர் என்பவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராகவும், அதே நேரத்தில் உணர்வுபூர்வமான நுண்ணறிவு கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்," என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆனால், தலைவர்கள் பலவீனமாக இருப்பதை மக்கள் விரும்புவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நீங்கள் எவ்வளவு இரக்க மனம் கொண்டவராக இருந்தாலும், உங்கள் அறையில் நீங்கள் அழுவதை யாரேனும் கண்டால், உங்களுக்கு மனவலிமை குறைவு என்று தான் கருதுவார்கள்," என்கிறார்.

எந்தவொரு அரசியல் தலைவரும் நம்பத்தகுந்தவராகவும் அதிகாரம் மிக்கவராகவும் இருப்பது தான் முக்கியம் என்றும் ஹாரி கூறுகிறார்.

"இயல்பான ஈர்ப்புத்தன்மை இல்லாதவர்களை புன்னகைக்கச் சொன்னால், அது விசித்திரமாகத் தோன்றலாம். உதாரணமாக, கார்டன் பிரவுன், தெரசா மே போன்ற தலைவர்கள் சிரிப்பதை பார்க்க அப்படித் தோன்றலாம்," என்கிறார் அவர்.

"தலைவர்கள் தங்களது இயல்பை மீறி செயற்கையாக நடந்துகொள்ளும் போது, அது அவர்களுக்கே சிக்கலாக மாறிவிடுகிறது," என்று ஹாரி கூறுகிறார்.

பொதுவெளியில் அழுத உலகத் தலைவர்கள்

அரசியலிலும், அதற்கு அப்பாற்பட்டும் எத்தனையோ தலைவர்கள் கேமரா முன் அழுவதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில், பொது இடங்களில் அழுவதற்குப் பெயர் பெற்றவர்.

1997-இல் தனது விருப்பமான படகு ஒன்று அரசு சேவையிலிருந்து அகற்றப்பட்டபோது, மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் எல்லோர் முன்னிலையில் அழுதார். அதேபோல 2019-இல் கூட, போர் வீரர்களின் நினைவு நாளின் போது கூட அவர் அழுவதைக் காண முடிந்தது.

2013-ஆம் ஆண்டு மார்கரெட் தாட்சரின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அதிபர் ஜார்ஜ் ஆஸ்போர்னின் கண்களிலும் கண்ணீர் காணப்பட்டது.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவிக் காலத்தின் போது, பல விஷயங்களைப் பற்றி பொதுவெளியில் பேசும்போது அழுதுள்ளார்.

2012-இல் சாண்டி ஹூக் படுகொலையின் போதும், 2015-இல் அரேதா ஃபிராங்க்ளின் எனும் பாடகியின் இசை நிகழ்ச்சியின் போதும் அவர் அழுதார்.

2019-ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்த போது, தெரசா மே கதறி அழுதார்.

வேல்ஸ் முதல் மந்திரி கெதிங் அழுதது மற்றும் வேல்ஸ் அரசாங்கத்தின் தலைமை அதிகாரி விப் ஜேன் ஹட் அவரை சமாதானப்படுத்த முயன்றது, ஆகியவை சமூக ஊடகங்களில் வைரலானது. அந்தக் காணொளியில் டிஸ்யூ பேப்பரால் கண்ணீரைத் துடைத்தபடி கெதிங் காணப்பட்டார்.

"கேமராவின் முன் அவர் கண்ணீர் சிந்துவதைப் பார்த்ததால், மக்கள் அதை முதலைக் கண்ணீர் என்று அழைத்தனர். எனக்கே சங்கடமாக இருந்தது. சிலர் அவரை 'ஒரு சிறுமியைப் போல் அழுகிறார்' என்று பாலின ரீதியாகக் கூட விமர்சித்தனர்," என்று கூறுகிறார் ஹாரி.

கெதிங்கின் கண்ணீர் உண்மையானது என்று ஹாரி நம்புகிறார். இதுபோன்ற சமயங்களில் அரசியல் தலைவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்கிறார்.

"முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் பதவியை இழந்தபோது நான் அருகில் தான் இருந்தேன். அவர் மிகவும் கலங்கியிருந்தார். அது மிகவும் கொடுமையானதும் கூட. அவருடைய தன்னம்பிக்கை இழந்த தருணங்களை நான் கண்டேன். ஆனால் இவை அனைத்தும் பொதுவாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் தான் நடக்கும்," என்று கூறுகிறார் ஹாரி.

வரலாறு நெடுக அழுத தலைவர்கள்

பொது இடங்களில் அழுவது எப்போதுமே ஆபத்தானது என்று ஹாரி கூறுகிறார்.

"ஏனென்றால் உங்கள் கண்ணீர் போலியானது என்று மக்கள் நினைப்பார்கள். நீங்கள் மக்களின் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறீர்கள் என்றும் நினைக்கக்கூடும். அரசியலிலோ அல்லது வாழ்க்கையின் வேறு எந்தத் துறையிலோ பல சமயங்களில், நீங்கள் விரக்தியிலும், அமைதியின்மையிலும் சில நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள்,” என்கிறார்.

"உதாரணத்திற்கு, உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை விட்டுப் பிரிந்துவிட்டால், மக்கள் உங்கள் மீது பரிதாபப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். என்னால் முடிந்ததைச் செய்து தோற்றுவிட்டேன் என்பதை வெளிப்படுத்தி, அனுதாபம் கிடைக்கும் என நினைக்கிறீர்கள். ஆனால் அது பெரிதாக வேலை செய்வதில்லை," என்கிறார் ஹாரி.

வார்விக் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரும், பிரிட்டிஷ் அகாடமியின் உறுப்பினருமான பெர்னார்ட் கேப் கூறுகையில், பொது இடங்களில் அழுவதைப் பற்றிய மக்களின் கருத்து வரலாறு முழுவதும் பலமுறை மாறியுள்ளது என்கிறார்.

"இது ஒரு ஊசல் போன்றது. பண்டைய கிரீஸ், ரோம் அல்லது இடைக்கால இங்கிலாந்தின் பல காலகட்டங்களில், ஆண்கள் தங்கள் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தினர். இதில் அழுகையும் அடங்கும். கோபமும் ஆத்திரமும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது,” என்கிறார்.

ஆனால் மறுமலர்ச்சி காலம் போன்ற பிற காலகட்டங்களில், அதாவது 18-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பொதுவெளியில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது தான் சரியானதாகக் கருதப்பட்டது," என்று கூறுகிறார் பெர்னார்ட் கேப்.

இன்றைய காலகட்டத்தில் அரசியல், விளையாட்டு போன்ற துறைகளில் மக்கள் தங்கள் உணர்வுகளை தயங்காமல் வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.

"தொழில்துறையில், ஒரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஒரு பெரிய தொழிலதிபர் கதறி அழுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது,” என்கிறார்.

"ஆனால் அரசியலில், தாட்சர் மற்றும் தெரசா மே இருவரும் பதவியை விட்டு வெளியேறும்போது அழுதனர். இதேபோல், வின்ஸ்டன் சர்ச்சிலும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அழுதார். இரண்டாம் உலகப் போரின் போது பிளிட்ஸ் நகரத்தில் குண்டுவீசப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட போது கூட அவர் அழுதார்," என்று கூறுகிறார் பெர்னார்ட்.

'கண்ணீரை மறைக்கத் தேவையில்லை'

மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே இருவரும், பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகு பெரும் சங்கடத்துக்கு ஆளாகி, அழுததைக் காண முடிந்தது.

அதேசமயம் டேவிட் கேமரூன் ராஜினாமா செய்யும் போது முனுமுனுத்தவாறு காணப்பட்டார். இதைச் செய்வதன் மூலம், அவர் தனது உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்ட விரும்பினார்.

பொது இடங்களில் அழுகை எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதுதான் இங்கு கேள்வி.

“வேல்ஸ் முதல் மந்திரி வாகன் கெதிங் சம்பவம் என்பது தீவிர சுய பரிதாபம் தொடர்பானது. அதை ஏற்க முடியாது. பல டி-டே (D-Day) வீரர்களின் கண்களில் கண்ணீர் காணப்பட்டது. ஆனால் அவர்கள் சங்கடத்தில் அழவில்லை. வீரமரணம் அடைந்த தனது தோழர்களை நினைத்து அழுது கொண்டிருந்தனர்" என்கிறார் பெர்னார்ட்.

மார்க் போர்கோவ்ஸ்கி, ஒரு நெருக்கடி நிலை ஆலோசகர் (Crisis PR consultant), அவர் பல சர்வதேச பிரபலங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்காக பணிபுரிகிறார்.

"பொது இடத்தில் அழுத கெதிங்கிற்கு அறிவுரை கூற வேண்டும் என்றால், கண்ணீரை ஒருபோதும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருப்பேன். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அதை அதிகமாகச் சார்ந்து இருக்க வேண்டாம். உங்கள் நம்பகத்தன்மையை நிரூபிக்க நீங்கள் வேறு சில முறைகளையும் பயன்படுத்தலாம்," என்கிறார் மார்க்.

'மனிதன் பலவீனமானவன்'

பிரிட்டன் பொதுமக்கள், இப்போது அரசியல்வாதிகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதை ஏற்கத் தொடங்கியுள்ளனர் என்று மார்க் கூறுகிறார்.

"ஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் என்றால், தங்கள் பலத்தை மட்டுமே காட்ட வேண்டும், பலவீனத்தை மறைக்க வேண்டும் என இருந்தது. ஆனால் நாம் எல்லோரும் மனிதர்கள், நமக்கு பலவீனம் உண்டு, தவறுகள் செய்வோம். இங்கு எதுவுமே பரிபூரணமானது இல்லை, ஆனால் நேர்மை இன்னும் உள்ளது என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளும்," என்கிறார் மார்க்.

பொதுவெளியில் உணர்ச்சிவசப்பட்டு விட்டால், அதிலிருந்து வெளியே வருவது தான் பிரச்னை என்றும், ஆனால் நெருக்கடியான நிலையில் கூட எப்போதும் ஒரு வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார் மார்க்.

இந்தியத் தலைவர்களின் கண்ணீர்

இந்திய அரசியல் வரலாற்றிலும் இதற்கு சில உதாரணங்கள் உள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பொது வெளிகளில் அழுவதை முற்றிலும் விரும்பாதவர்.

அவரது இளைய மகன் சஞ்சய் காந்தியின் மறைவுக்கு, அவரது நண்பர்கள் இரங்கல் தெரிவிக்கச் சென்றபோது, ​​இவ்வளவு பெரிய துக்க நிகழ்வுக்கு பிறகும் அவரது கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

தன் மகனின் இறுதி ஊர்வலத்தின் போது கூட, ​​கண்களில் கண்ணீர் இருந்தாலும், மனித உணர்வுகள் அவரையும் பாதிக்கும் என்பதை நாட்டு மக்கள் பார்க்க முடியாதபடி, ஒரு கருப்பு கண்ணாடி அணிந்திருந்த காட்சியை இந்திய மக்கள் மறக்கவில்லை.

பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி பல சந்தர்ப்பங்களில் பொதுவெளியில் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதியும் கூட பல தொலைக்காட்சி நேர்காணல்களின் போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசியுள்ளார். தேர்தல் கூட்டங்களில் அவர் பலமுறை கனத்த குரலில், உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றுவதைக் காண முடிந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)