சாதிவாரி கணக்கெடுப்பு: மோதி தயங்குவது ஏன்? ஸ்டாலின் முன் உள்ள தடைகள் என்ன? - 6 கேள்வி பதில்கள்

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

’’இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்."

"எனவே, 2021ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்’’ என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன? மாநில அரசால் இந்தக் கணக்கெடுப்பை நடத்த முடியாதா? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

மக்களுக்குக் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் எனக் கருதப்படுகிறது.

சாதி ரீதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதால் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி.

"இட ஒதுக்கீடு அளிக்கச் சரியான தரவுகள் தேவை. அடுத்தபடியாக, பல நலத் திட்டங்களை அரசு மேற்கொள்கிறது. அப்போது ஒவ்வொரு சமூகத்தின் சமூக - பொருளாதார பின்னணி தெரிய வேண்டும். அடுத்ததாக, பல்வேறு சாதிகள் தங்கள் எண்ணிக்கை சார்ந்து பல கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் சரியா என்பதை அறிய இந்தக் கணக்கெடுப்பு உதவும்" என்கிறார் அவர்.

இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் நீண்ட காலமாக இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி வருகின்றன. ஆனால், இந்த நடைமுறையில் நீதிமன்றங்கள் பல முறை குறுக்கிட்டுள்ளன.

"இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்கிறது. பரந்துபட்ட மக்கள் எல்லா அதிகாரங்களையும் பெற சாதிவாரி கணக்கெடுப்பு தேவை" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து.ரவிக்குமார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது?

கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசால் மேற்கொள்ள முடியுமா?

சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், "புள்ளிவிவர சட்டம் 2008இன் படி சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் மாநில அரசுகள் மக்களின் சமூக, பொருளாதார புள்ளி விவரங்களைச் சேகரிக்க மட்டுமே வழிவகை செய்யப்பட்டுள்ளது."

"இந்தச் சட்டத்தின் பிரிவு 3இல் உள்ள உட்பிறவு ஆ-வின் படி, இந்திய அரசமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க இயலாது. அதாவது 7வது அட்டவணையில் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 69வது இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.

மேலும், "இச்சட்டத்தின் பிரிவு 32இன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948இன் கீழ் மக்கள் தொகை தொடர்பான புள்ளிவிவரங்களை (census data) மாநில அரசால் சேகரிக்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,’’ என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தால் என்ன பிரச்னை?

பாமக கெளரவ தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே மணி, "மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு காத்திருக்க வேண்டாம். பிகார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ள நிலையில், தமிழக அரசு ஏன் நடத்தவில்லை?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே மேற்கொள்வதில் உள்ள சிக்கல் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், "அரசமைப்பு சட்டம் 246இன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. சட்டப்படியாக நிலைக்கக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு என்றால், அது மத்திய அரசு பட்டியலில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் மூலமே மேற்கொள்ள முடியும்."

"மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு, கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் பணிகளுக்குத்தான் சட்டப்படியான பாதுகாப்புகள் இருக்கும். இதைத் தவிர்த்து, அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ளும் சர்வே மூலம் புள்ளிவிவரங்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றினால் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன," என்று தெரிவித்தார்.

2011 கணக்கெடுப்பு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை?

கடந்த 2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஆனால், முடிவுகள் வெளியிடப்படவில்லை.

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மோதி தலைமையிலான அரசும் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடவில்லை. இந்தக் கணக்கெடுப்பு பல குறைபாடுகள் கொண்டது என்றும், நம்பகத்தன்மையற்றது என்றும், இட ஒதுக்கீடு மற்றும் கொள்கையின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாதது என்றும் அரசு கூறியது.

தரவுகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக, நிதி ஆயோக்கின் அப்போதைய துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைக்க அரசு முடிவு செய்தது. ஆனால் கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் பெயர் அறிவிக்கப்படாததால், அந்தக் குழு ஒருபோதும் மக்களைச் சந்திக்கவில்லை. இதன் விளைவாக, மூலத் தரவுகளைத் தொகுத்து, வெளியிடக்கூடிய கணக்கெடுப்பாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

கடந்த 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கு மத்திய அரசு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தது. அதில், சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை நடத்துவது நிர்வாக ரீதியாகக் கடினமானது மற்றும் சிக்கலானது எனக் கூறியது.

மேலும் தனது பதிலில், "வெவ்வேறு பட்டியல்களின்படி சாதி வகைகளில் உள்ள வேறுபாட்டை மத்திய அரசு சுட்டிக்காட்டாது. மத்திய பட்டியலில் 2,479 பிற்படுத்தப்பட்ட சாதிகள் உள்ளன, ​​அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்களின்படி 3,150 சாதிகள் உள்ளன" என்று மத்திய அரசு கூறியது.

மேலும், "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி தொடர்பான கேள்வியைக் கேட்டால், அதற்குப் பல ஆயிரம் சாதிப் பெயர்கள் பதிலாக வரும். ஏனெனில், சாதி குறித்துக் கேட்கும்போது மக்கள் தங்கள் குலம், கோத்ரம், துணை சாதி என ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் பயன்படுத்துவதால் கணக்கெடுப்பு தரவுகளில் குழப்பம் ஏற்படும்" என்று தனது பதிலில் மத்திய அரசு கூறியுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)