You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாணவர்களை 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடச் செய்த ஆளுநர் - மதுரை தனியார் கல்லூரியில் என்ன நடந்தது?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என மாணவர்களை கோஷமிடச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்பர் குறித்த பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் உரை நிகழ்த்திய ஆளுநர், தனது உரையின் முடிவில் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷங்களை எழுப்பி, மாணவர்களையும் அந்தக் கோஷங்களை எழுப்பும்படி கூறினார். பங்கேற்பாளர்களும் திரும்பவும் அந்த கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அது சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
விழாவின் பின்னணி
'கல்விக் கூடங்களில் கம்பர்' என்ற பெயரில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகள் நடந்துவந்தன.
எட்டாவது முதல் பன்னிரண்டாவது வரை படிக்கும் மாணவர்களுக்கு 'நடையில் நின்றுயர் நாயகன்: கம்பர் காட்டும் அன்பும் அறனும்' என்ற பெயரிலும் கல்லூரி மாணவர்களுக்கு 'கம்பர் காட்டும் ராமன்: கம்பர் வழியில் அறம் நிலைநிறுத்தல்' என்ற பெயரிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளுக்கு பல பல்கலைக்கழகங்கள் ஆதரவளித்தன. இதன் கௌரவ புரவலராக ஆளுநர் ஆர்.என். ரவி இருந்தார்.
இந்தப் பேச்சுப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரையில் உள்ள தியாகராசர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
அவர் தனது உரையில், "ராமாயணம் வடமாநிலங்களில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கிறது. ஆனால் துளசிதாசரைவிட புலமைமிக்க கம்பர் எழுதிய கம்பராமாயணம் தமிழ்நாட்டில் எங்கும் காணப்படவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. மேலும் தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பருக்கு ஏதாவது இருக்கை இருக்கிறதா எனத் தேடியபோது அப்படி ஏதும் கிடைக்கவில்லை.
இது எனக்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. சில தினங்களுக்குமுன் ஆளுங்கட்சியைச சேர்ந்த ஒரு நபர் பெண்களை மிகக் தரக்குறைவாக பேசியிருந்தார். அப்படிப்பட்ட நபரை நான் கனவான் என கூப்பிடும் கட்டாயத்தில் இருக்கிறேன்.
அப்படிப் பேசியவர் பெண்களை மட்டும் அவமதிக்கவில்லை, சிவன், விஷ்ணுவை வழிபடுவோரையும் அவர்களது பக்தியையும், அவர்களது உள்ளத்தின் உணர்வுகளையும் காலில் போட்டு மிதித்துள்ளார். அப்படிப் பேசியவர் தனி நபர் அல்ல, தமிழகத்தில் சுமார் 75 ஆண்டுகளாக நிலவிவரும் சூழலின் ஒரு புள்ளி அவர்.
அந்த அமைப்பினரால் தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு - மலேரியாவுக்கு ஒப்பீடு செய்வது போன்ற செயல்கள் நடந்துவருகின்றன.
நாம் என்ன செய்யு முடியும், நம்மால் என்ன செய்ய முடியும் என்றிருக்கக்கூடாது. இதற்கு பள்ளிகளில் இருந்து பொறுப்பை தொடங்க வேண்டும். பள்ளிகளில் கம்பரை பற்றிய குழுக்கள் ஏற்படுத்த வேண்டும், கம்பனையும் கம்பராமாயணத்தையும் கற்பிக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
பேசி முடித்ததும் 'ஜெய் ஸ்ரீராம்' என மூன்று முறை ஆளுநர் கோஷமிட்டார். மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களும் திரும்பிக் கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதும் இது சர்ச்சையாக உருவெடுத்தது.
பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், "பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார் ஆளுநர்." என குற்றம்சாட்டினார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சில பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் கூட்டமைப்புகளும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து, அவர் பதவி விலக வேண்டுமெனக் கோரியுள்ளன.
பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பும் இதனைக் கடுமையாக கண்டித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "கல்லூரி விழாவில் உரையாற்றிய ஆர். என். ரவி ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரித்து அதையே மூன்று முறை உச்சரிக்குமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரை கோஷமிட்டதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து அவர் தவறிவிட்டார். ஆகவே அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதாக தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறி அவர் செயல்படுவதால், பதவியிலிருந்து அவர் விலகிக்கொள்ள வேண்டும் என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பி.பி. பிரின்ஸ் கஜேந்திரபாபு.
"அவர் ஒரு மத போதகரைப் போல நடந்துகொள்கிறார். எந்த ஒரு நபரும் கல்வி நிலையங்களில் இதுபோல மதப் பிரசாரங்களைச் செய்ய முடியாது. ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதாக எடுத்த உறுதிமொழியெல்லாம் ஒன்றுமில்லையென நினைக்கிறாரா? அப்படியானால், அதுபோன்ற பதவியேற்கும் விழாவையெல்லாம் நடத்தி எதற்காக செலவு செய்ய வேண்டும்? அவர் தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறியதால் எங்களைப் பொறுத்தவரை அவர் இனி ஆளுநரே இல்லை. ஒற்றுமையாக இருக்கும் மாணவர்களிடம் ஏன் இதுபோல மதவாத விஷத்தை அவர் பரப்ப நினைக்கிறார்?" எனக் கேள்வியெழுப்புகிறார் பி.பி. பிரின்ஸ் கஜேந்திரபாபு.
மேலும் கம்ப ராமாயணம் தமிழ்நாட்டில் மறக்கப்பட்டுவிட்டதாக ஆளுநர் கூறுவதையும் மறுக்கிறார் பிரின்ஸ்.
"தமிழ்நாட்டில் எங்கும் கம்பன் காணப்படவில்லை என்கிறார். தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் பல வகுப்புகளிலும் கல்லூரிகளும் கம்ப ராமாயணம் இப்போதும் கற்பிக்கப்படுகிறது. இது எதையும் அறியாமல் அவர் தொடர்ந்து பேசிவருகிறார்." என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
மதுரை கம்பன் கழக அறக்கட்டளையைச் சேர்ந்த சீதாராமனிடம் இது குறித்துக் கேட்டபோது, "நான் காசியில் இருக்கிறேன். தவிர, சனிக்கிழமை நடந்த அந்த விழாவில் எங்கள் கழகத்தைச் சேர்ந்த யாரும் செல்லவில்லை. அதனால் அது குறித்துத் தெரியாது" என்று தெரிவித்தார்.
இந்தப் பேச்சுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தியவர்களில் முக்கிய பிரமுகர்கள் யாரும் இது குறித்து விரிவாக பேச மறுத்துவிட்டனர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய சிலர் "இது ஆளுநர் கலந்துகொண்ட விழா. ஆளுநரும் சர்ச்சைக்குரிய வகையில் எதையும் தெரிவிக்கவில்லை. இதைப் பற்றி நாங்கள் ஏதும் சொல்ல விரும்பவில்லை" என்று கூறிவிட்டனர்.
மேலும், '' இதில் கலந்துகொண்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், பரிசு பெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர், கம்ப ராமாயணம் மீது ஈடுபாடு கொண்டவர்கள்தான். இதற்கும் விழா நடந்த கல்லூரிக்கும் தொடர்பில்லை'' என்றும் தெரிவித்தனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு