பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் இதுவரை நடந்தது என்ன? எளிய விளக்கம்

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், இந்தியா பதில் தாக்குதல்- தற்போது வரை நடந்தது என்ன?
"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியா அறிவித்துள்ளது. மேலும், புதன்கிழமை அதிகாலை ஒன்பது வெவ்வேறு இடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் பஹாவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதியில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள மௌலானா மசூதி அசார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசு இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்திய நேரப்படி 01:05 முதல் 01:30 வரை 25 நிமிடங்களுக்கு மேல் இந்த தாக்குதல்கள் நடந்தன.
இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஐந்து இந்திய விமானங்களையும் ஒரு ட்ரோனையும் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தக் கூற்றுகளை இந்தியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலில் இந்திய பொதுமக்களில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் 32 பேர் காயமடைந்ததாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
"எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தப் போர்ச் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
"பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக திட்டமிட்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் எனும் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளோம்" என்று இந்தியா கூறுகிறது.
"பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. நமது ராணுவத்துடன், நமது தேசத்துக்காக தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது" என்று தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"கடந்த கால அனுபவங்களால், ஏதோ நடக்கப்போகிறது என மக்கள் அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக, பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். இது விரைவில் முடிவுக்கு வருமென நம்புகிறேன்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது. தற்போதைய சூழ்நிலை பற்றி நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மனதில் வைத்து இரு தரப்பும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்க்க வேண்டும்" என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
"இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்றும் வரும் தாக்குதலால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்புக்காகவும் விரைவில் அமைதி திரும்பவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று இரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு