விசா பெற புதிய நிபந்தனை: அமெரிக்கா செல்ல இந்திய மாணவர் என்ன செய்ய வேண்டும்?

அமெரிக்க விசா, அமெரிக்கா, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

விசா விதிகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களுடைய சமூக ஊடக கணக்குகள் பற்றிய தகவல்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் பயன்படுத்திய அனைத்து சமூக ஊடக கணக்குகளின் பயனர் பெயர் (username) உள்ளிட்ட தகவல்களை தரும்படி விண்ணப்பதாரர்களை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விதி பின்பற்றப்படாவிட்டால், அவர்களுடைய விசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை, இந்திய குடிமக்களின் நலன்களை பாதுகாக்க அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தது.

விசா விண்ணப்பங்கள் மீதான முடிவுகள் அவற்றின் தகுதிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் என அரசு கூறுகிறது.

விசா விண்ணப்பங்களை சரிபார்க்க கடந்த ஐந்து வருடங்களில் பயன்படுத்திய சமூக ஊடக கணக்குகளின் பயனர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அளிக்கவேண்டும் என விசாவுக்கு விண்ணப்பித்தவர்களிடம் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.

இந்த வழிகாட்டுதல் கண்டுகொள்ளப்படாவிட்டால் தற்போதைய விண்ணப்பம் மட்டுமல்லாது எதிர்கால விசா விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படலாம் என அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விசா, அமெரிக்கா, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், @USAndIndia

படக்குறிப்பு, புதிய விசா விதிகள் குறித்து இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் சொன்னது என்ன?

விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய பயனர் பெயர்களையும், கணக்குகளையும் டிஎஸ்-160 விசா விண்ணப்ப படிவத்தில் எழுதவேண்டும் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அதன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. தாங்கள் அளித்த தகவல் சரியானது தான் என்பதையும் அவர்கள் உறுதி செய்யவேண்டும்.

விசா நடைமுறையின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையின் அடிப்படையில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முன்னதாக திங்கள்கிழமை, மாணவர் விசா நடைமுறையை அமெரிக்க வெளியுறவுத்துறை மீண்டும் தொடங்கியபோது, விண்ணப்பதாரர்களின் பின்புலம் பற்றிய சோதனைகளை நடத்த வசதியாக அவர்கள் அனைவரும் தங்களது சமூக ஊடக கணக்குகளை 'பொது' (Public) கணக்குகளாக மாற்றவேண்டும் என தூதரகம் கேட்டுக்கொண்டது.

"எஃப், எம், மற்றும் ஜே பிரிவு விசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள், அவர்களது அடையாளம் மற்றும் அமெரிக்காவில் நுழைவதற்கான அவர்களது தகுதியை உறுதிசெய்ய, அவர்களது சமூக ஊடக கணக்கு தனியுரிமையை(privacy settings) பொது(public) என மாற்றவேண்டும்." என தூதரகம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மாணவர்களுக்கான விசா வழங்கும் நேர்காணல்களை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

பைடன் நிர்வாகத்தின் கீழ் விசாரணை நடைமுறை மிகவும் தளர்வாக இருந்ததாகவும் ஏற்கனவே அமலில் இருந்த நடைமுறையில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இனி அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகளின் சமூக ஊடக கணக்குகள் தீவிரமாக ஆய்வுசெய்யப்படும். அமெரிக்க குடிமக்கள், நெறிகள், அமைப்புகள், பண்பாடுகள் அல்லது நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான உள்ளடக்கங்களை கண்டறிய விண்ணப்பதாரரின் ஆன்லைன் நடவடிக்கைகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

அமெரிக்க விசா, அமெரிக்கா, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வானதற்கு பிறகு, அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன

சமூக ஊடக பரிசோதனை (social media vetting) என்றால் என்ன?

விசாவுக்காக விண்ணப்பிப்பவர் அமெரிக்காவில் நுழைவதற்கு தகுதியுடையவர்தானா என்பதை முடிவு செய்ய அவரது ஆன்லைன் நடவடிக்கைகளை ஆழமாக ஆய்வு செய்வதுதான் சோசியல் மீடியா வெட்டிங் அல்லது சமூக ஊடக பரிசோதனை எனப்படுகிறது.

சமூக ஊடகம் என்பதில் ஃபேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன் மற்றும் டிக்டாக் உள்ளிட்டவை அடங்கும்

வெளிநாட்டு மாணவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டை இறுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பாலத்தீன ஆதரவு போராட்டங்கள் அதிகரித்த பின்னர் டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.

அமெரிக்க விசா, அமெரிக்கா, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பாலத்தீன ஆதரவு போராட்டங்கள் அதிகரித்த பின்னர் டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது

எத்தனை வகையான விசாக்கள் உள்ளன?

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்காக குறிப்பாக வழங்கப்படுவது F விசா.

தொழில்நுட்பம் அல்லது தொழிற்பயிற்சி பள்ளிகளில் பயிலும் கல்வி சாரா (Non academic) மாணவர்களுக்காக வழங்கப்படுவது M விசா

அங்கீகரிக்கப்பட்ட கலாசார அல்லது கல்வி நிறுவனங்களில் பரிமாற்ற திட்டங்களின் கீழ் பங்கேற்கும் விருந்தினர்களுக்காக வழங்கப்படுவது ஜே விசா.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சமூக ஊடகங்களில் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த முடிவுக்கு சமூக ஊடகங்களில் பல எதிர்வினைகள் இருந்துள்ளன.

அரசியல் விஞ்ஞானியும் எழுத்தாளருமான இயன் பிரம்மர் "அமெரிக்காவில் விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் (F,M மற்றும் J பிரிவு) தற்போது தங்களது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் பொதுவாக்க வேண்டியுள்ளது," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது விசா ஆய்வு செயல்முறையின் முக்கியமான ஒரு பகுதி என்றும், இது அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய விண்ணப்பதாரர்களை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

"அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக சமூக ஊடக பதிவுகள் ஆய்வு செய்யப்படும். இந்த விதி விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கும் அமலாகும் என்று நம்பப்படுகிறது. எனவே, இனி நான் அமெரிக்காவிற்கு பயணிக்க முடியாது போலிருக்கிறது," என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். .

மற்றொரு பயனர், "அமெரிக்க விசா விண்ணப்பமாக இருந்தாலும் சரி, உலகளாவிய வாய்ப்பாக இருந்தாலும் சரி, உங்கள் சமூக ஊடகம் இப்போது உங்கள் டிஜிட்டல் சுயவிவரக் குறிப்பாக (CV) மாறிவிட்டது. ஒரே தேடலில், நீங்கள் ஆன்லைனில் பதிவிடும் எதுவும் உங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது. எனவே, உங்கள் சுயவிவரத்தை எதிர்காலத்தில் தடையாக மாறாதவாறு உருவாக்குங்கள்," என எழுதினார்.

"அமெரிக்க விசா செயல்முறையில் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்வது உண்மையில் பாதுகாப்பு காரணங்களுக்காகவா, அல்லது இது தரவு சேகரிப்பிற்கான ஒரு வழிமுறையா?" என மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த அமைப்புமே வெறுமனே தரவு சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு கருவியாக மாறிவிட்டதா? என்றும் அப்பதிவில் கேள்வி எழுப்பப்பட்டது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு