ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரம்: பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா மீது வழக்கு பதிவு - டாப் 5 செய்திகள்

பட மூலாதாரம், Vijay Deverakonda/Twitter
இன்றைய (21/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கு பார்க்கலாம்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காகவும், அவற்றில் முதலீடு செய்ய மக்களைத் தூண்டியதற்காகவும் திரைப்பட நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பலர் மீதும் தெலங்கானா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தெலங்கானாவில், சூதாட்டத்தால் ஏற்படும் நிதி இழப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், 2017 முதல் ஆன்லைன் சூதாட்டம் சட்டவிரோதமானதாக உள்ளது.
இதுகுறித்துப் பேசிய சைபராபாத் காவல் ஆணையர் அவினாஷ் மொஹந்தி, "இந்த செயலிகள் எவ்வாறு செயல்படுகின்றன, நடிகர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களின் பங்கு என்ன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவர்களை அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது" என்று கூறினார்.
"ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மக்களைக் கவர்ந்திழுப்பதற்காகத் தொடர்ந்து பிரபலங்கள் மூலமாக விளம்பரம் செய்வதாக பனீந்தர் ஷர்மா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், "இதற்கு பதிலளித்துள்ள நடிகர் ராணா, ஒரு ஆன்லைன் கேமிங் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தம் 2017இல் முடிவடைந்ததாகத் தெரிவித்துள்ளார். அதேபோல நடிகர் பிரகாஷ் ராஜும், 'பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆன்லைன் கேமிங் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்" என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி கூறுகிறது.

டாஸ்மாக் வழக்கு - மார்ச் 25 வரை அமலாக்கத்துறை நடவடிக்கைக்குத் தடை
டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25 வரை எந்த மேல் நடவடிக்கையும் கூடாது என அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் "சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை மார்ச் 6 முதல் 8ஆம் தேதி வரை நடத்திய இந்தத் தொடர் சோதனை மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள், வாக்குமூலங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது, செல்லாது என அறிவிக்கக் கோரியும், தமிழக அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்தச் சோதனை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்" என்று தினமணி செய்தி கூறுகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சௌத்ரி, ''அமலாக்கத் துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் 3 நாட்கள் சோதனை நடத்தியுள்ளனர். 60 மணிநேரத்துக்கும் மேலாக பெண் அதிகாரிகளைக்கூட விடுவிக்காமல் நள்ளிரவிலும் சோதனை நடத்தியிருப்பது தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது. அதிகாரிகளை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர்'' என்று கூறியதாகவும் அந்தச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
மேலும், அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர், ''இரவில் எந்தச் சோதனையும் நடத்தப்படவில்லை. அனைத்து ஊழியர்களும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்'' என்று தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் ''பொய் சொல்லாதீர்கள், நடந்தவை குறித்து நாளிதழ்களில் விரிவாக செய்தி வெளியாகியுள்ளது. அமலாக்கத் துறையின் சோதனையை குறைகூறவில்லை, அமலாக்கத்துறை தனது அதிகாரத்தைச் செயல்படுத்திய விதம் குறித்துதான் கேள்வி எழுப்புகிறோம்" என்று கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, தமிழக அரசின் இந்த மனுவுக்கு, எதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து மார்ச் 25ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையைத் தள்ளி வைத்துள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது.
இன்ஸ்டாவில் பழகி, இளைஞர்களை கஞ்சா விற்கத் தூண்டிய பெண் கைது

பட மூலாதாரம், Getty Images
இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழகி, இளைஞர்களை கஞ்சா வியாபாரிகளாக மாற்றிய திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள திரிசூலம் ரெயில்வே கேட் அருகே பல்லாவரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் கையில் பெரிய பையுடன் இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை நிறுத்தி அவரது பையைச் சோதனையிட்டனர்.
அதில் 3 கிலோ கஞ்சா இருந்துள்ளது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அந்த இளம்பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
விசாரணையில் அவர் திரிபுரா மாநிலம், உதய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த பாயல் தாஸ் (வயது 25) என்றும் அவருக்குத் திருமணமாகி கணவர் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது என்று தெரிய வந்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
அதோடு, "பாயல் தாஸ் திரிபுராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி, ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.
காவல்துறைக்கு பாயல் அளித்த வாக்குமூலத்தின்படி, அவர் இதற்காக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றைத் தனது பெயரில் ஆரம்பித்தார். அதில் தனது புகைப்படங்களைப் பதிவிட்டு, தான் திருமணம் ஆகாத இளம்பெண் என்றும், கல்லூரியில் படித்து வருவதாகவும் பதிவு செய்தார். அதைப் பார்த்த பல வாலிபர்கள் இன்ஸ்டாகிராமில் அவரிடம் பழகினர்.
அவர்களிடம் செல்போன் எண்ணை கேட்டு வாங்கி, நண்பர் போலப் பழகி தனது கஞ்சா விற்பனைக்கு பாயல் தாஸ் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்" என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பாயல் தாஸ் ஒரு முறைகூட போலீசில் சிக்கவில்லை என்றும், அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் என்றும் தினத்தந்தி செய்தி கூறுகிறது.
மேலும் அவரிடம் கஞ்சா வாங்கி விற்ற வாலிபர்களையும் போலீசார் தேடி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
'வீடுகளில் கோலம் போடும் காலம் மாறி, கொலை நடைபெறுகிறது' - ஆர்.பி. உதய்குமார்

பட மூலாதாரம், @Udhayakumar_RB
"ஒவ்வொரு வீட்டின் வாசலிலே கோலம் போடும் காலம் மாறி, இன்று கொலை நடைபெறும் காலமாக தமிழகம் மாறி கொண்டிருக்கிறது," என்று அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழகத்தில் ரூ.1,000 கோடி ஊழலில் தொடங்கி, ரூ.40,000 கோடி வரை மதுபான ஊழலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வாக்காளர்கள் தயாராகி விட்டனர்.
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கோலம் போடும் காலம் மாறி கொலை நடக்கும் காலமாக மாறிவிட்டது. காவல்துறை, முதல்வரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா? காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது?" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "ஆட்சியை நிர்வாகத் திறன் மிக்கதாக நடத்தாமல், விளம்பர வெளிச்சத்தில் நடத்துகின்ற காரணத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஊழல் பிரச்னை, விலைவாசி உயர்வு, போதைப் பொருள் புழக்கம் போன்றவை அதிகளவில் நடக்கின்றன" என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை: 'கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு நீதி வேண்டும்'

பட மூலாதாரம், Getty Images
'பட்டலந்த சித்திரவதை முகாமில் நடந்ததைப் போன்று வடக்கு மற்றும் கிழக்கில் பல முகாம்களில் சித்திரவதைகள் நடந்துள்ளன. அந்த முகாம்களில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் வலியுறுத்தியுள்ளதாக வீரகேசரி இணையதள செய்தி கூறுகிறது.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. மனித உரிமைகளை மீறியவர்கள், மனிதர்களைக் கடத்தியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றேன்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், "அங்கு நடந்ததைப் போன்று வடக்கு மற்றும் கிழக்கில் பல முகாம்களில் சித்திரவதைகள் நடந்துள்ளன. அங்கு நடந்தவை தொடர்பான காணொளிகளைப் பார்க்கும்போது தலைகீழாகக் கட்டி அடிப்பது, அமில திரவங்களில் அமிழ்த்திக் கொலை செய்வது போன்ற சித்திரவதைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது என்றால் அதை அனுபவித்தவர்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. உள்நாட்டு பொறிமுறைகளில் எந்தவொரு பிரச்னைகளும் கடந்த 77 ஆண்டுகளில் தீர்க்கப்படவில்லை. இந்தப் பொறிமுறை சக்தியிழந்த ஒரு இனத்திற்குரிய பொறிமுறையாகவே உள்ளன. இதனால் சர்வதேச பொறிமுறைகள் ஊடாகத் தீர்வுகளைக் காண வேண்டிய அவசியம் உள்ளது" என்று அவர் தெரிவித்ததாக வீரகேசரியின் செய்தி கூறுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, "எனக்கு பட்டலந்த குறித்துப் பேசுவதில் தற்போது ஆர்வம் இல்லை. சர்வதேச விவகாரங்கள் பட்டலந்தையைவிட சுவாரஸ்யமாக உள்ளன" என்று தெரிவித்துள்ளதாக வீரகேசரியில் வெளியான மற்றொரு செய்தி கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












