மகிந்த ராஜபக்ஸவின் மகன் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு சவால் விடுவாரா?

பட மூலாதாரம், PMD SRI LANKA, NAMAL RAJAPAKSHA
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையைக் கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகளிலேயே, மிகவும் இளம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை களமிறக்கியுள்ளது.
இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஏற்பட்ட பாரிய சர்ச்சைகளுக்கு பின்னர், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஸவை இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக அந்த கட்சி களமிறக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களுடன் இலங்கையின் மிகவும் பெரிய கட்சியாக காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இரண்டு பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுந்த பிரச்னை காரணமாகக், கட்சியின் மிக முக்கிய உறுப்பினர்கள் அடங்கலாக சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்தனர்.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறான சவால்களை சந்திக்கவுள்ளது?

பட மூலாதாரம், NAMAL RAJAPAKSHA
யார் இந்த நாமல் ராஜபக்ஸ?
இலங்கையின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த மகன் தான் நாமல் ராஜபக்ஸ.
1986-ஆம் ஆண்டு பிறந்த நாமல் ராஜபக்ஸ, வழக்கறிஞராவார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2010-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற பிரவேசத்தைப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.
2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாமல் ராஜபக்ஸவின் தந்தை மஹிந்த ராஜபக்ஸ தோல்வி அடைந்ததையடுத்து, அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபித்தார்.
இதன்படி, 2020-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி சார்பாக வெற்றி பெற்ற நாமல் ராஜபக்ஸ, அமைச்சராக செயற்பட்டார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய போராட்டம் காரணமாக, 2022-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி அமைச்சரவை கலைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நாமல் ராஜபக்ஸ களமிறங்க என்ன காரணம்?
பொருளாதார நெருக்கடியினால் வெடித்த மக்கள் போராட்டம் காரணமாக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகியதையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடி பிரச்னையை எதிர்கொண்டு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் நிலைமையை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு ரணில் விக்ரமசிங்க வசமானது.

பட மூலாதாரம், NAMAL RAJAPAKSHA
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்தநிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சின்னத்தின் கீழ் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் உயர் மட்டம் தீர்மானித்தது.
எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கத் தீர்மானித்திருந்தார்.
இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க தன்னைச் சுயாதீன வேட்பாளர் என அறிவித்ததையடுத்து, தமது வேட்பாளர் ஒருவரை தனியே களமிறக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்தது.
இந்தநிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இலங்கையில் பிரபல தொழிலதிபரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க கட்சிக்குள் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
இவ்வாறான பின்னணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவதாக அறிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்க பக்கம் வருகை தந்த நிலையில், அந்தக் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்குத் தமது ஆதரவை வெளியிட்டனர்.
இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய சவாலை எதிர்நோக்கியிருந்தனர்.
ஜனாதிபதி வேட்பாளராகத் தம்மிக்க பெரேராவை களமிறக்கப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இறுதித் தருணத்தில் தனிப்பட்ட காரணங்களினால் ஜனாதிபதித் தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாது என தம்மிக்க பெரேரா அறிவித்திருந்தார்.
இதையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், PMD SRI LANKA
ரணிலுக்கு சவாலாக அமைவாரா நாமல்?
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்ஸ பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வெளியிட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஸவால் ரணில் விக்ரமசிங்கவிற்கு எப்படி சவால் அளிக்க முடியும் என்ற எதிர்பார்த்து இலங்கையில் நிலவுகிறது.
தான் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
"நிச்சயமாக நான் சவாலை ஏற்றுக்கொள்கின்றேன். நாங்கள் ஆதரவாளர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எமது கொள்கை மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பெற்றோர் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற நாம் செயற்படுவோம். நாங்கள் ஒன்றாக இருந்தவர்கள். மனக்கசப்புக்கள் இருந்திருக்கலாம். அனைவரிடமும் குறைப்பாடுகள் இருந்திருக்கலாம். நாம் அதனைச் சரி செய்து முன்னோக்கி பயணிப்போம். கட்சியை விட்டு சென்ற அனைவருக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்," என நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ஸவுக்குச் சவாலாக அமைவாரா என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“சவாலா...." என சிரித்துக்கொண்டு அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதை அவர் தவிர்த்துவிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டமை குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார்.
"போட்டி எவ்வாறு இருக்கும் என எனக்குத் தெரியாது. நாம் சண்டை போட வரவில்லை. எனது கொள்கையைக் கூறி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் ஒரே வழி இதுவென கூறுகின்றேன். இதை மாத்திரமே நான் கூறுகின்றறேன். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், எனக்கு வாக்களியுங்கள் என்றே நான் கூறுகின்றேன்," என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்.

தமிழ் கட்சிகள் யார் பக்கம்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த தமிழ் கட்சிகள் அனைத்தும், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றன.
இதன்படி, செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் பொது வேட்பாளராகவும் அறிவித்து உள்ளனர்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவும் நிலையில், எந்த அணிக்கு இது சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.

பட மூலாதாரம், SIVARAJA
ரணில் vs நாமல்
கடந்த காலங்களில் ஒரே அணியிலிருந்த ரணில், நாமல் ராஜபக்ஸ ஆகியோர் இடையே நடக்கும் நேரடி போட்டி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஸ, எந்தவிதத்திலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு சவாலாக அமைய மாட்டார் என தெரிவிக்கின்றார்.
"நாமல், ரணிலுக்கு சவாலாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் ரணிலுடன் தான் இருக்கின்றார்கள். பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வாக்குகளை சேர்க்க போகும் போது மாவட்ட ரீதியில் பிரசாரங்கள் நடத்தப்படும். இந்த பிரச்சாரத்தின் போது மாவட்ட மக்கள், மாவட்ட தலைவர்கள் கூறுவதையே கேட்பார்கள்,” என்கிறார்.
நாமல் சொல்வதைக் காட்டிலும், மாவட்ட தலைவர்களின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக ரோஹித்த அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராட்ச்சி, மஹிந்தானந்த அளுத்கமகே போன்ற சிங்கள வாக்குகளை அதிகம் கவரக்கூடிய மாவட்ட தலைவர்கள், ரணில் விக்ரமசிங்க பக்கமே இருக்கின்றார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார் சிவராஜா.
"ராஜபக்ஸ குடும்பத்தினாலேயே நாட்டில் பொருளாதார பிரச்னை ஏற்பட்டது என ரணில் பக்கம் உள்ள பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பிரசாரத்தின் போது தெரிவிப்பார்கள். அப்படிச் சொல்லும் போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். இந்தப் பிரசாரம் நாமலுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்," என அவர் கூறுகின்றார்.
பல முக்கியக் கட்சிகளின் ஆதரவு தொடர்பில் இன்னும் முடிவுகள் வரவில்லை என்பதை மேற்கோள் காட்டிப் பேசிய சிவராஜா, "தமிழரசுக் கட்சி யாருக்கு ஆதரவு என இன்னும் அறிவிக்கவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு என இன்னும் அறிவிக்கவில்லை. இந்த அறிவிப்புக்கள் வெளியானதன் பின்னரே சரியான முடிவைக் கூறலாம். பிரதான அரசியல் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைய வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கும் போதே சரியான முடிவைச் சொல்ல முடியும்,” என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












