You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்லாந்து பெண் உலக அழகியாக கிரீடம் சூட காரணமான கேள்வியும் அசத்தல் பதிலும்
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவின் ஹைதராபாத்தில் மே 31ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டி பிரமிக்க வைக்கும் வகையில் நடைபெற்றது. தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுஷாதா சௌசி உலக அழகிப் பட்டத்தை வென்றார். மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் தாய்லாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய உலக அழகிப் போட்டியில், போட்டியிட்ட 108 பேரும் மேடையில் ஒன்றாகத் தோன்றினார்கள்.
அமெரிக்காஸ் கரீபியன், ஆப்ரிக்கா, ஐரோப்பியா, ஆசியா-ஓசினியா என நான்கு கண்டங்களாகப் பிரித்து ரேம்ப் வாக் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கடந்த 20 நாட்களில் உலக அழகி போட்டியாளர்களின் மேற்கொண்ட பயணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தெலங்கானா சுற்றுலாவை ஊக்குவிக்கும் காணொளிகள் பதிவேற்றப்பட்டன.
உலக அழகி போட்டியின் நடுவர்கள் யார்?
இந்த அழகிப்போட்டியில் மொத்தம் 9 நடுவர்கள் அழகிகளை தேர்ந்தெடுத்தனர்.
மிஸ் வேர்ல்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா மோர்லி, நடிகர் சோனு சூட், MEIL நிறுவனத்தின் இயக்குனர் சுதா ரெட்டி, நடிகர் ராணா டகுபதி, தெலங்கானா அரசு அதிகாரி ஜெயேஷ் ரஞ்சன், 2017 மிஸ் வேர்ல்ட் மனுஷி சில்லர், மகேஷ் பாபுவின் மனைவியும் முன்னாள் மிஸ் இந்தியாவுமான நம்ரதா ஷிரோத்கர், 2014 மிஸ் இங்கிலாந்து கரினா டர்ரெல் மற்றும் 72வது உலக அழகி போட்டிக்கான அதிகாரப்பூர்வ மேடை இயக்குனர் டோனா வால்ஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த ஆண்டிற்கான உலக அழகியைத் தேர்ந்தெடுத்தனர்.
உலக அழகியை தேர்ந்தெடுத்த முறை
மிஸ் இந்தியா 2025 நந்தினி குப்தா உட்பட 108 நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்கள் 'உலக அழகி' போட்டியில் பங்கேற்றனர்.
முதற்கட்டப் போட்டிகளுக்குப் பிறகு, காலிறுதிப் போட்டிக்கு மொத்தம் 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நான்கு கண்டங்களில் இருந்தும் தலா 10 நபர்கள் என மொத்தம் 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலிறுதிக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்கள் இரண்டாம் சுற்றுக்கு அனுப்பப்பட்டனர்.
அதன்பிறகு இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட இரு அழகிகள் அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், கண்டத்திற்கு ஒருவர் என நால்வர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியா சார்பில் பங்கேற்ற போட்டியாளர் நந்தினி குப்தா, முதல் 20 இடங்களில் இடம் பிடித்திருந்தார். ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவில் முதல் 5 இடங்களுக்குள் இடம் பிடித்தபோதிலும் இறுதிச்சுற்றுக்கு அவர் தேர்வாகவில்லை.
முன்னர் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், நடுவர்களால் அந்த இடத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இந்தச் சுற்றில் இடம் பெற்றனர்.
முதல் 8 இடங்களுக்குள் யார் வந்தார்கள்?
- பிரேசில்
- மார்டினிக்
- எத்தியோப்பியா
- நமீபியா
- போலந்து
- உக்ரைன்
- பிலிப்பைன்ஸ்
- தாய்லாந்து
இந்த எட்டு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி தான் மிஸ் வோர்ல்ட் உலக அழகியை தேர்ந்தெடுக்கும் வினாக்களில் முக்கியமானதாக இருந்தது. அந்தக் கேள்வி, "நீங்கள் ஏன் உலக அழகி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?"
இந்தக் கேள்விக்கு 45 வினாடிகளில் பதிலளிக்கும்படி போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. இந்த சுற்றில் மார்டினிக், எத்தியோப்பியா, போலந்து மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த அழகிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இறுதிச் சுற்றில் அழகி போட்டியாளர்களிடம் நடுவர்கள் கேள்விகளைக் கேட்டனர்.
நம்ரதா ஶ்ரீரோத்கர், போலந்தின் லாஜாவிடம் கேள்வி எழுப்பினார். டகுபதி ராணா எத்தியோப்பிய போட்டியாளரிடமும், முன்னாள் உலக அழகிப் பட்டம் பெற்ற இந்தியாவின் மானுஷி சில்லார் மார்டினிக் போட்டியாளரிடமும், தாய்லாந்து போட்டியாளரிடம் சோனு சூட் கேள்விகள் கேட்டனர்.
இந்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையிலேயே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.
சோனு சூட் கேள்விக்கு பதிலளித்த தாய்லாந்து அழகி ஒபல் சுசாதா வெற்றி பெற்றார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹாசெட் டெரெஜே அட்மாசு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். போலந்தைச் சேர்ந்த மஜா கிளாஜ்டா மூன்றாவது இடத்தையும், மார்டினிக்கைச் சேர்ந்த ஆரேலி ஜோச்சிம் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
கிரீடம் சூட்டிய அசத்தல் பதில்
2025 அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற ஒபல் சுஷாதா சௌசியிடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன?
"இந்தப் பயணம் உங்களுக்கு உண்மை மற்றும் தனிப்பட்ட பொறுப்பு பற்றி என்ன கற்றுக் கொடுத்தது?" என்று சோனு சூட், மிஸ் தாய்லாந்திடம் கேள்வி எழுப்பினார்.
"இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. மிஸ் வேர்ல்ட் போட்டியில் இருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் உண்மையை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதுதான். எனக்காகவும், பிற பெண்களுக்காகவும், இந்த அரங்கில் உள்ள அனைவருக்கும் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய விஷயம், நம் வாழ்வில் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதுதான்.
ஏனென்றால் யாராக இருந்தாலும், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், வாழ்க்கையில் உங்கள் நிலை என்னவாக இருந்தாலும், உங்கள் அருகில் ஒருவர் இருக்கிறார். அது ஒரு குழந்தையாகவோ, பெரியவராக இருக்கலாம் அல்லது உங்கள் பெற்றோராக இருக்கலாம், அவர்கள் உங்களை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். மற்றவர்களை வழிநடத்த சிறந்த வழி, கருணையுடன் அவர்களை அணுகுவதாகும். அதுதான் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உலகிற்கும் நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம்," என்று ஒபல் சுஷாதா சௌசி பதிலளித்தார்.
இறுதிச் சுற்றில் இருந்த போட்டியாளர்களில் யார் வெற்றியாளர்கள் என்பதை நடுவர்கள் அறிவிக்கும் போது, மிஸ் வேர்ல்ட் 2024 கிறிஸ்டினா பிஸ்கோவா மேடையில் பேசினார்.
மிஸ் வேர்ல்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா மோர்லி மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்.
இரண்டாம் இடத்தைப் பிடித்த போட்டியாளருக்கு சிறிய கிரீடம் வழங்கப்பட்டது. உலக அழகியாக தேர்வான ஒபல் சுசாதா சௌசி அரியணையில் அமர வைக்கப்பட்டதும், மிஸ் வேர்ல்ட் 2024 கிறிஸ்டினா பிஸ்கோவா அவருக்கு அழகி கிரீடத்தை சூட்டினார்.
அழகி கீரிடம் சூட்டப்பட்ட பிறகு, அனைத்து போட்டியாளர்களும் மேடையில் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். பார்வையாளர்களும் மேடைக்குச் சென்று புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.
உலக அழகி போட்டியைக் காண, முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர்கள் சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா உட்பட பிற பிரபலங்கள் வந்திருந்தனர்.
2016ஆம் ஆண்டு உலக அழகி ஸ்டெஃபனி டெல் வாலே மற்றும் இந்திய தொகுப்பாளர் சச்சின் கும்பர் இணைந்து உலக அழகிப் போட்டியை தொகுத்து வழங்கினார்கள்.
பாலிவுட் நட்சத்திரங்கள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் இஷான் கட்டர் ஆகியோர் மேடையில் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
நடிகர் டகுபதி ராணா, நடிகரும் கொடையாளருமான சோனு சூட்டுக்கு 72வது உலக அழகி போட்டியின் மனிதாபிமான விருதை வழங்கினார். கோவிட்-19 காலத்தில் செய்த தொண்டுக்காக இந்த விருதை சோனு சூட் பெற்றார்.
"என் வாழ்க்கையில் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கும் தெலுங்கு திரையுலகிற்கு நன்றி," என்று தெரிவித்துக் கொண்ட சோனு சூட், "பொம்மலி" என்ற பிரபல வசனத்தை பேசினார்.
சுதா ரெட்டி, உலக அழகி போட்டிக்கான உலகளாவிய தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். "எனது சொந்த நகரமான ஹைதராபாத்தில் மிஸ் வேர்ல்ட் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று சுதா ரெட்டி கூறினார்.
உலகம் முழுவதும் வந்திருந்த ரசிகர்கள், ஆரவார முழக்கங்களை எழுப்பி, போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். பல நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள், போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் பிற ஊழியர்கள் இந்த போட்டியை மேலும் சிறப்பாக்கினார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.