பிகாரில் பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு - குழந்தைகளுக்கு ஆபத்தா?

நிறுவன கண்காணிப்பாளர் எல்.பி. சிங், இயக்குநர் மனிஷா சிங் மற்றும் ஆராய்ச்சித் தலைவர் அசோக் குமார் கோஷ் (வலதுபுறம்)
படக்குறிப்பு, நிறுவன கண்காணிப்பாளர் எல்.பி. சிங், இயக்குநர் மனிஷா சிங் மற்றும் ஆராய்ச்சித் தலைவர் அசோக் குமார் கோஷ் (வலதுபுறம்) ஆய்வு தொடர்பான தகவல்களை வழங்குகிறார்கள்.
    • எழுதியவர், சீது திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிகாரின் ஆறு மாவட்டங்களில், பாலூட்டும் தாய்மார்களின் பாலில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 40 பெண்களின் பாலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. யுரேனியம் என்பது கதிர்வீச்சுத் தன்மை கொண்ட ஓர் உலோகம். 'U' என்பது இதன் வேதியியல் குறியீடு.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தரநிலைகள்படி, தண்ணீரில் அதிகபட்ச யுரேனியம் செறிவு லிட்டருக்கு 30 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டும். இதைவிட அதிகமாக இருந்தால், சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்த ஆராய்ச்சி பாட்னாவை சேர்ந்த மகாவீர் புற்றுநோய் நிறுவனம், டெல்லி எய்ம்ஸ், தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER, வைஷாலி) உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் 2021 முதல் ஜூலை 2024 வரை நடைபெற்ற இந்த ஆய்வில், பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து நேரடியாக எடுத்த தாய்ப்பால் மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, முன்கூட்டியே சேமித்த பாலை இதில் பயன்படுத்தவில்லை.

மகாவீர் புற்றுநோய் நிறுவனம்
படக்குறிப்பு, பாட்னாவின் புகழ்பெற்ற மகாவீர் புற்றுநோய் நிறுவனம்

ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது எப்படி ?

இந்த ஆய்வு பிகாரின் போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, கதிஹார், நாளந்தா ஆகிய ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஒவ்வொரு குழுவிலும் ஒரு பெண் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம், குழுவினர் பெண்களிடம் இருந்து நேரடியாக தாய்ப்பால் மாதிரிகளைச் சேகரித்தனர்.

பெண்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகள் வைஷாலியில் உள்ள என்ஐபிஈஆர் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. LC-ICP-MS எனப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த இயந்திரம் திரவங்களில் உள்ள கன உலோகங்களை மிகத் துல்லியமாகக் கண்டறியக் கூடியது.

இந்த ஆய்வில், பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியத்தின் அளவு ஒரு லிட்டருக்கு 0 முதல் 5.25 மைக்ரோகிராம் வரை இருப்பது கண்டறியப்பட்டது.

கதிஹார் மாவட்ட பெண்களிடம் அதிகபட்சமாக 5.25 மைக்ரோகிராம் அளவு யுரேனியம் இருந்தது ஆய்வில் தெரிய வந்தது. போஜ்பூர் மாவட்ட பெண்களிடம் மிகக் குறைந்த அளவு கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு, நாளந்தாவை சேர்ந்த பெண்களின் தாய்ப்பாலில் சராசரி அளவு 2.35 மைக்ரோ கிராமாகவும், ககாரியாவை சேர்ந்த பெண்களிடம் 4.035 மைக்ரோ கிராம் என்ற அளவிலும் யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வில் தாய்ப்பால் குடிக்கும் 35 குழந்தைகளிடம் இருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் 70% குழந்தைகளின் ரத்தத்தில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த யுரேனியம் அளவு குழந்தைகளுக்கு புற்றுநோய் அல்லாத (Non-carcinogenic) உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

புற்றுநோய் ஆபத்து இல்லாத யுரேனியம், உடலின் முக்கிய பாகங்களான சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

இந்த யுரேனியம் அளவு குழந்தைகளுக்கு புற்றுநோய் அல்லாத (Non-carcinogenic) உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகாரின் பல பகுதிகளில், நிலத்தடி நீரில் யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தாய்ப்பாலுக்கு தரநிலைகள் உள்ளதா?

மகாவீர் புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநரும், புற்றுநோயியல் துறையின் மருத்துவத் தலைவருமான மனிஷா சிங், பிபிசியிடம் பேசுகையில், "முதலில், இதுகுறித்துப் பீதியடையத் தேவையில்லை. தாய்ப்பால் குழந்தைக்குச் சிறந்தது. எனவே தாய்மார்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்" என்றார்.

"யுரேனியத்தை பொறுத்தவரை, தண்ணீரில் யுரேனியத்தின் அளவுகளுக்கு அதிகபட்ச தரநிலைகள் உள்ளன. ஆனால் தாய்ப்பாலுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பு என எதுவும் இல்லை. இருப்பினும், தாய்ப் பாலில் யுரேனியம் இருந்தால், அது கவலைக்குரிய விஷயம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, இந்த ஆறு மாவட்டங்களிலும் உள்ள தண்ணீரில் யுரேனியம் அளவைக் கண்டறிய புற்றுநோய் நிறுவனம் இப்போது குடிநீர் சோதனைகளையும் நடத்தி வருகிறது.

மேலும், மகாவீர் புற்றுநோய் நிறுவனம் இப்போது இந்த ஆராய்ச்சியை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

"இந்த விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்காக முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டேவை சந்திக்க விரும்புகிறோம். ஏனெனில் தற்போதைய விசாரணையின் மாதிரி அளவு மிகவும் சிறியது. புற்றுநோய் நிறுவனத்தை நடத்துவதில் எங்களுக்குக் கிடைத்த அனுபவம் கூறுவது என்னவெனில், எந்த நோயும் விரைவில் கண்டறியப்படுவது முக்கியம். அதுதான் சிறந்தது" என்கிறார் நிறுவன இயக்குநர் எல்.பி. சிங்.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆறு மாவட்டங்களிலும் உள்ள தண்ணீரில் யுரேனியம் அளவைக் கண்டறிய புற்றுநோய் நிறுவனம் இப்போது குடிநீர் சோதனைகளையும் நடத்தி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகாரின் ஏராளமான மக்கள் அசுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பிகாரின் 11 மாவட்டங்களிலும், நாட்டில் 151 மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ள யுரேனியம்

பிகாரில் உள்ள கோபால்கஞ்ச், சிவன், சரண், கிழக்கு சம்பாரன், பாட்னா, வைஷாலி, நவாடா, நாளந்தா, சுபால், கதிஹார், பாகல்பூர் ஆகிய 11 மாவட்டங்களின் நிலத்தடி நீரில் யுரேனியம் இருப்பதாக தனித்தனி ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, கதிஹார் மற்றும் நாளந்தா மாவட்டங்களில் தாய்ப்பால் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மகாவீர் புற்றுநோய் நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சித் தலைவரும் நீண்ட கால நீரியல் ஆராய்ச்சியாளருமான அசோக் குமார் கோஷ் பிபிசியிடம் பேசியபோது, "பிகாரில் தண்ணீர் குறித்த ஆராய்ச்சியில் ஆர்சனிக், ஃப்ளோரைடு, மாங்கனீசு, குரோமியம், பாதரசம், யுரேனியம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இதில் அதிக அளவு ஆர்சனிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏராளமான நீர் வளங்கள் உள்ளன. ஆனால் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது ஒரு சவாலாக உள்ளது," என்றார்.

தாய்ப்பாலில் யுரேனியம் எங்கிருந்து வந்திருக்கலாம் என்ற கேள்விக்குப் பதிலளித்த அசோக் குமார் கோஷ், "குடிநீரில் இருந்தோ அல்லது அந்த மாவட்டத்தில் விளையும் உணவு தானியங்களில் இருந்தோ வந்திருக்கலாம். அதாவது உணவுச் சங்கிலி வாயிலாக வந்திருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

"புற்றுநோயை உண்டாக்காதது மற்றும் புற்றுநோயை உண்டாக்கக் கூடியது என யுரேனியம் இரு வகையான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். புற்றுநோயை உண்டாக்காத யுரேனியம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல நோய்களையும், புற்றுநோயை உண்டாக்கும் யுரேனியம் புற்றுநோய்க்கும் வழிவகுக்கலாம்" என்று அவர் விளக்கினார்.

தாய்ப்பாலில் யுரேனியம் எங்கிருந்து வந்திருக்கலாம் என்ற கேள்விக்கு அசோக் குமார் கோஷ் பதில் அளிக்கையில், "குடிநீரிலிருந்தோ அல்லது அந்த மாவட்டத்தில் விளையும் உணவு தானியங்களிலிருந்தோ, அதாவது உணவுச் சங்கிலி வழியாக வந்திருக்கலாம்"எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகாரில் உள்ள மக்கள் ஏற்கெனவே நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் ஃப்ளோரைடு கலப்பது தொடர்பான பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.

நிலத்தடி நீர் தரநிலை அறிக்கை - 2024

மார்ச் 2025இல், மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர், நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, பிகாரில் ஒரே ஒரு மாவட்டத்தின் நீர் மட்டுமே யுரேனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

அவர் அளித்த பதிலின் அடிப்படையில், நிலத்தடி நீர் தரநிலை அறிக்கை 2024ஐ மேற்கோள் காட்டி, பிகாரில் நைட்ரேட் சோதனைக்காக 808 மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவற்றில், 2.35 சதவிகித மாதிரிகளில் லிட்டருக்கு 45 மில்லிகிராமுக்கு மேல் நைட்ரேட் அளவு இருந்தது. இது மாநிலத்தின் 15 மாவட்டங்களை பாதித்திருந்தது.

இதேபோல், ஃப்ளோரைடு சோதனைக்காக 808 மாதிரிகள் எடுக்கப்பட்டன. 4.58 சதவிகித மாதிரிகளில் ஃப்ளோரைடு அளவு லிட்டருக்கு 1.5 மில்லிகிராமுக்கு மேல் இருந்தது. அதில் ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

ஆர்சனிக்கை எடுத்துக்கொண்டால், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 607 மாதிரிகளில், 11.9 சதவிகிதத்தில் 10 பிபிபி-க்கும் (parts per billion) அதிகமான ஆர்சனிக் இருந்தது. இந்த பாதிப்பை 20 மாவட்டங்கள் சந்தித்திருந்தன.

அதே போல, யுரேனியத்தின் அளவைத் தெரிந்துகொள்ள 752 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 0.1 சதவிகிதம் மட்டுமே 30 பிபிபி-க்கு மேலான யுரேனியம் அளவைக் கொண்டிருந்தது. அதோடு, ஒரு மாவட்டம் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்ததாகத் தெரிய வந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு