ஜார்ஜ் சோரோஸ்: காங்கிரஸ், சோனியா காந்திக்கு எதிராக பாஜக பயன்படுத்தும் இவர் யார்?

இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவி வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக, அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸை தொடர்புபடுத்தி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

திங்களன்று, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதன்ஷு திரிவேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு, ஆசிய பசிபிக் ஜனநாயக தலைவர்களுக்கான மன்றத்துடன் (Forum for Democratic Leaders of Asia Pacific) தொடர்பு உள்ளது என்று செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார்.

இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்த மன்றத்தில் பேசப்படுவதாக, பாஜக குற்றம் சாட்டுகிறது.

மேலும், இந்த மன்றத்திற்கு ஜார்ஜ் சோரோஸின் அறக்கட்டளை நிதியுதவி செய்வதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற பல எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளன.

பாஜகவின் குற்றச்சாட்டு என்ன?

பிரெஞ்சு வெளியீடான ஓசிசிஆர்பி (ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் திட்டம்), இந்தத் திட்டத்திற்கு வெளிநாட்டு நிதியுதவி உள்ளதாகவும், அதன் கவனம் இந்தியாவிலும் இருப்பதாகவும் சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளதாக, பாஜக தலைவர் சுதன்ஷு திரிவேதி நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், "வெளிநாட்டு நிதியுதவி தவிர, இந்த அறிக்கை ஜார்ஜ் சோரோஸுடனும் தொடர்புடையதாக உள்ளது" என்றார் சுதன்ஷு திரிவேதி.

இந்தியாவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதெல்லாம், பெகாசஸ் அறிக்கை, விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் வன்முறை, ஹிண்டன்பெர்க் அறிக்கை போன்ற சம்பவங்கள் நடப்பது, கடந்த மூன்று ஆண்டுகளாக தற்செயலாக நடக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதே போன்று, நடப்பு அமர்வுக்கு முன், கோவிட்-19 தடுப்பூசி பற்றிய அறிக்கைகளையும், இந்திய வணிக நிறுவனம் தொடர்பாக அமெரிக்க வழக்கறிஞர் ஒருவரின் சமீபத்திய அறிக்கையையும் திரிவேதி குறிப்பிடுகிறார்.

நவம்பர் இறுதியில், அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீதான குற்றப்பத்திரிகை வெளிவந்தது.

கௌதம் அதானி தனது நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், அந்த விஷயத்தை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்பிறகு, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜகவைத் தாக்கி வருகிறது. மேலும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் முயற்சிக்கிறது.

இந்தப் பிரச்னை குறித்து, நாடாளுமன்றம் கூட்டுக் குழு விசாரணை (ஜேபிசி) நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

இவை அனைத்தும் வேண்டுமென்றே நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என சுதன்ஷு திரிவேதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு முன்னதாக, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் சோரோஸ் அறக்கட்டளையில் பணிபுரிபவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

வியாழக்கிழமை, நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்னையை எழுப்பினார். மேலும், இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஊடகங்களிடம் பேசினார்.

இருப்பினும், நிஷிகாந்த் துபேயின் குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கு எதிரானது என, காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு எந்த நோட்டீஸும் வழங்காமல், நாடாளுமன்ற விதிகளுக்கு எதிராக நிஷிகாந்த் துபே பேச அனுமதிக்கப்பட்டதாக சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்பும் இலக்கான சோரோஸ்

அதேசமயம் , சில விஷயங்களை அரசியல் கண்ணோட்டத்தைக் கடந்து பார்க்க வேண்டும் என்றும், தேச விரோத சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் பாஜக எம்பி கிரண் ரிஜிஜு கூறுகிறார்.

"ஜார்ஜ் சோரோஸ் அறக்கட்டளையுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக பல சக்திகள் செயல்படுகின்றன," என்று ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாகவும் அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் விவகாரத்தில் பாஜக கடுமையாக நடந்து கொண்டது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில், ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் பிரதமர் நரேந்திர மோதி ஜனநாயகத் தன்மையோடு இல்லை" என்றும், "மோதி பெரிய தலைவராக வேகமாக வளர முக்கிய காரணம், இந்திய முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையே" என்றும் ஜார்ஜ் சோரோஸ் கூறியிருந்தார்.

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானியையும் குறிப்பிட்டு, "மோதிக்கும் தொழிலபதிபர் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இருவரின் எதிர்காலமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது. அதானி பங்குகளை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மோதி இந்த விஷயத்தில் அமைதியாக உள்ளார். ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் அவர் பதில் சொல்ல வேண்டும்" என்றும் அவர் குறிப்பிவிட்டார்.

சோரோஸின் இந்த கருத்தைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர் சந்திப்பு நடத்தி, அவருடைய கருத்து இந்தியாவின் ஜனநாயக செயல்முறையை சீரழிக்கும் நடவடிக்கை என்று கூறினார்.

சோரோஸின் கருத்துக்கள் வழக்கமான, "யூரோ அட்லாண்டிக் கண்ணோட்டத்தில் உள்ளது" (யூரோ அட்லாண்டிக் என்பது நேட்டோ மற்றும் யூரோ-அட்லாண்டிக் கூட்டமைவை மையமாகக் கொண்ட பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்டமைப்பைக் குறிக்கிறது) என்று சோரோஸின் அறிக்கை குறித்து, இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

ஜெய்சங்கர், "ஒரு வயதான, பணக்கார, பிடிவாதமான மனிதரான சோரோஸ், நியூயார்க்கில் அமர்ந்து தனது யோசனைகள் முழு உலகத்தின் வேகத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறார்." எனக் கூறினார்.

முன்னதாக, 2020 ஜனவரியில் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் நிகழ்ச்சியில், இந்தியா ஒரு இந்து தேசியவாத நாடாக ஆக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோதியைக் குறிவைத்து சோரோஸ் கூறியிருந்தார்.

ஜார்ஜ் சோரோஸ் யார்?

ஜார்ஜ் சோரோஸ் ஒரு பிரபலமான அமெரிக்க பெரும் கோடீஸ்வரர் மற்றும் முதலீட்டாளர். பிரிட்டனில், 1992 இல் 'ஷார்ட் செல்லிங்' மூலமாக, கிட்டத்தட்ட பிரிட்டன் வங்கியின் சரிவுக்குக் காரணமான நபர் என்று அவர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்.

ஷார்ட் செல்லிங் என்பது, பங்குகளை கடனாக பெற்று, பின் அதை விற்று லாபம் ஈட்டும் யுத்தி.

சோரோஸ் ஹங்கேரியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஜெர்மனியில், ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் கொல்லப்பட்டபோது, ​​அவர் எப்படியோ பத்திரமாக தப்பினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஹங்கேரி கம்யூனிச நாடாக மாறியது. பின்னர், அந்நாட்டை விட்டு வெளியேறி மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்.

பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்த சோரோஸ், பங்குச் சந்தையில் இருந்து சுமார் 44 பில்லியன் டாலர்கள் சம்பாதித்தார்.

இந்தப் பணத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கட்டினார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளுக்கு சோரோஸ் உதவினார்.

சோரோஸ் 1979 இல், ஓபன் சொசைட்டி எனும் அறக்கட்டளையை நிறுவினார்.

இந்த அறக்கட்டளை, இப்போது சுமார் 120 நாடுகளில் செயல்படுகிறது. அவரது பணிகளின் காரணமாக, அவர் எப்போதும் வலதுசாரி ஆதரவாளர்களின் இலக்காகவே இருக்கிறார்.

2003 இராக் போரை, சோரோஸ் விமர்சித்தார். மேலும், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சிக்கு லட்சக்கணக்கான டாலர்களை நன்கொடையாக வழங்கினார். இதற்குப் பிறகு, அவர் மீதான அமெரிக்க வலதுசாரிகளின் தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கின.

கடந்த 2019 ஆம் ஆண்டில், ஹொண்டுராஸில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு அமெரிக்க எல்லையை கடக்க சோரோஸ் பணம் கொடுத்ததாக கூறிய காணொளியை டிரம்ப் பகிர்ந்தார்.

இதன் பின்னணியில் சோரோஸ் இருக்கிறாரா என்று டிரம்ப் கேட்டதற்கு, "பலர் அப்படித்தான் சொல்கிறார்கள், அப்படியே இருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்று டிரம்ப் கூறினார்.

சோரோஸ் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும், டிரம்ப் பகிர்ந்த வீடியோவும் போலியானது என்றும் பின்னர் தெரியவந்தது.

சோரஸுக்கு எதிராக பல நாடுகள்

கடந்த 2018 ஆம் ஆண்டில், ராபர்ட் போவர்ஸ் என்ற வெள்ளையின மேலாதிக்கவாதி ஒருவர், அமெரிக்காவில் உள்ள ஆலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 11 யூதர்களைக் கொன்றார்.

ராபர்ட் போவர்ஸின் சமூக வலைதளப் பதிவுகள் பல தகவல்களை வெளிப்படுத்தியது. அதில், ராபர்ட் போவர்ஸ், தன்னைப் போன்ற வெள்ளையின மேலாதிக்கவாதிகள் இனப்படுகொலைக்கு இலக்காகிறார்கள் என்ற சதி கோட்பாட்டை நம்பினார் எனத் தெரிய வந்தது.

இதன் பின்னணியில் ஜார்ஜ் சோரோஸ் இருப்பதாக அவர் நினைத்தார்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸிலும் ஜார்ஜ் சோரோஸுக்கு எதிரான பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன.

" ஒரு யூத சதியின் மையத்தில் சோரோஸ் இருக்கிறார். அந்த சதி, துருக்கியை பிரித்து, அழிக்க நினைக்கிறது" என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் கூறியிருந்தார்.

பிரிட்டனின் பிரெக்சிட் கட்சியின் நைஜல் ஃபரேஜ், ஐரோப்பா முழுவதும் அகதிகள் பரவுவதை சோரோஸ் ஊக்குவிப்பதாகக் கூறுகிறார். முழு மேற்கத்திய உலகுக்கும் சோரோஸ் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் கூறுகின்றார்.

சோரோஸின் பிறப்பிடமான ஹங்கேரியின் அரசாங்கமும் அவரை தனது எதிரியாகக் கருதுகிறது. 2018 தேர்தல் பிரசாரத்தின் போது, ​​ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், சோரோஸை அதிகம் குறிவைத்தார்.

ஓர்பன் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேலும் சோரோஸ்-ஆதரவு நிறுவனங்கள் மீதான அரசாங்கத் தாக்குதல்கள் அதிகரித்ததால், சோரோஸின் அமைப்பு ஹங்கேரியில் பணிபுரிவதை நிறுத்தியது.

அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் மற்றும் நாடுகளின் இலக்காக இருந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)