அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 11 பேர் பலி – என்ன நடந்தது?

- எழுதியவர், மாயகிருஷ்ணன். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பட்டாசு வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 16 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பட்டாசுக்கடை உரிமையாளரும், பட்டாசு ஆலை உரிமம் உள்ள அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது இவ்விபத்தில்?

காலை உணவின் போது நடந்த விபத்து
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திலுள்ள விரகாலூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் கடந்த 16 ஆண்டுகளாக ‘யாழ் ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில் ஒரு பட்டாசுத் தயாரிப்பு ஆலையை தனது உறவினர் அருணுடன் இணைந்து நடத்திவருகிறார்.
இந்த ஆலையில் சிவகாசியைச் சேர்ந்த 11 தொழிலாளர்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
திங்கள்கிழமை (அக்டோபர் 9) காலை வழக்கம் பட்டாசு தயாரிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது காலை உணவு உண்பதற்காக அருகில் உள்ள உணவகத்திற்கு ஏழு பணியாளர்கள் சென்றுள்ளனர். சிலர் ஆலையின் பெட்டக அறையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அங்கிருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்கத் துவங்கின. அங்கிருந்த ஊழியர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் தப்ப முடியாத அளவுக்கு புகை மண்டலம் சூழ்ந்தது.
இந்த வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

சிதறிய உடல்களை அடையளம் காண்பதில் சிக்கல்
காலை 9.30 மணிக்கு வெடிக்க தொடங்கிய பட்டாசுகள், தொடர்ந்து 4 மணி நேரமாக வெடித்து கொண்டே இருந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த அரியலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி சொர்ணா மேரி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தார்.
பட்டாசு வெடிக்கும் சத்தம் சுற்றியிருந்த கிராமங்கள் முழுதும் கேட்டதாகவும், அதனால் மக்கள் அதிர்ந்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
பத்துக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களும் இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், மீட்புப் பணி மதியம் இரண்டு வரை மணி வரை நீடித்தது. விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பட்டாசு ஆலைக்கு அருகிலேயே பள்ளி
இந்த விபத்து குறித்து மீட்பு பணியில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் பாலாஜியிடம் பேசினோம்.
அவர் கூறுகையில், திங்கட்கிழமை காலை 9:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தின் வெடிச்சத்தம், விரகாலூர் கிராமத்தைச் சுறியுள்ள சாத்தமங்கலம், வெற்றியூர், கல்லூர், வண்ணம்புத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் கேட்டதாகவும், அங்கிருந்த மக்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், “பட்டாசு குடோன் இருக்கும் இடத்திலிருந்து 500மீ தொலைவில் ஒரு தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. வெடிச்சத்தம் கேட்டதும் அங்கிருந்த குழந்தைகள் பயந்து அழுத்துவங்கியதாகத் தெரிவித்தனர். பள்ளி தாளாளரும் ஆசிரியர்களும் இரண்டு வாகனங்களில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள தனியார் மண்டபத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்,” என்றார். தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, பெற்றோருடன் பாதுகாப்பாக வீட்டிற்கும் அனுப்பி வைத்தனர், என்றார்.

‘சாப்பிட வெளியே சென்றிருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம்’
மேலும் பேசிய பாலாஜி, வெடி விபத்தில் சிக்கிய சிலரது கை, கால்கள், மற்றும் பிற உடல் பாகங்கள் சுற்றுப்புறங்களில் சிதறிக் கிடந்தன என்றார்.
“பட்டாசு தொழிற்சாலைக்குப் பணிக்கு வந்தவர்களில் ஏழு பேர் காலை உணவுக்காக அருகில் இருந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சாப்பிட்டு முடித்து தொழிற்சாலையில் இருந்த அவர்களது நண்பர்களுக்கு பார்சல் வாங்கிக் கொண்டு திரும்பும் போது இந்தச் சம்பவம் நடந்ததால் அவர்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர்,” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய சமூக ஆர்வலர் திருமானூர் பாஸ்கர், பட்டாசு வெடிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர், என்றார். “ஒருபுறம் அவர்கள் தீயை அணைக்க அணைக்க மறுபுறம் பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தன. பலமணி நேரம் போராடி தான் அவர்கள் தீயை அணைத்தனர். இருந்தும் மாலை வரை தொழிற்சாலை இருந்த ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பட்டாசு புகைநாற்றம் நீங்கவே இல்லை,” என்றார்.
மேலும் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் அந்த பட்டாசு ஆலை இயங்கி வந்ததாகவும், இந்த விபத்தில் அது தரைமட்டமாகிவிட்டதாகவும் கூறினார். அரசு அனுமதியுடன் தொழிற்சாலை இயங்கி வந்திருந்தாலும், அவ்வப்பொழுது அதிகாரிகள் பாதுகாப்பினை உறுதி செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்றார்.

11 பேர் பலி, 16 பேருக்கு சிகிச்சை
இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 10 பேர் இறந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் அளித்த தகவலின்படி: விருதுநகர் மாவட்டம் திருத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சீனு, கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், பிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார், தட்சிணாமுறிச்சி குமுளூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன். அரியலூர் மாவட்டம் விரகலூர் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா, ராசாத்தி, சிவகாமி, ரவி மற்றும் அடையாளம் தெரியாத.
மேலும் திருமானூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 16 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

‘விதிகளைக் கடைபிடிக்காத பட்டாசு நிறுவனங்கள் மீது நடவடிக்கை’
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மூன்று லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ் .சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
சி வெ கணேசன் இருவரும், நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீயணைப்பு அலுவலர், வெடிமருந்து பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, பட்டாசுத் தொழிற்சலைகள் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். “தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்காத பட்டாசு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












