"பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை

பட மூலாதாரம், Arranged
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார்.
வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.
"திருமணம் முடிந்து அவன் சுவிட்சர்லாந்து போக ஆசைப்பட்டார். ஆனால் விசா கிடைக்காததால் காஷ்மீருக்குச் சென்றார்" என வினயின் தாத்தா ஹவா சிங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த நர்வால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கடற்படையில் சேர்ந்துள்ளார்.
நர்வால் தற்போது கொச்சியில் பணியில் உள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பி.டெக் பட்டப்படிப்பை முடித்த பிறகு நர்வால் இந்தியக் கடற்படையில் சேர்ந்துள்ளார்.
"பஹல்காமில் நடைபெற்ற இந்தக் கோழைத்தனமான தாக்குதலில் லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தது, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் த்ரிபாதி மற்றும் அனைத்து கடற்படை வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என அவரின் இறப்பு தொடர்பாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
'தேனிலவு கொண்டாட சென்றவர்'

பட மூலாதாரம், IndianNavy
வினய் நர்வால் அவரின் பெற்றோருக்கு ஒரே மகன். அவரின் இளைய சகோதரி குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
காஷ்மீரின் குட்டி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமின் பைசரான் பள்ளத்தாக்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வினய் நர்வால் தன் மனைவியுடன் தேனிலவைக் கொண்டாட ஏப்ரல் 21ஆம் தேதி காஷ்மீர் சென்றதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு பெண், இறந்த உடலுடன் அமைதியாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வினய் நர்வால் மற்றும் அவருடைய மனைவி ஹிமான்ஷியின் புகைப்படம் தான் அது.
வினய் நர்வாலின் தாத்தா ஹவா சிங் நர்வால் புதன்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த செயலைச் செய்தவன் பிடிக்கப்பட்டு அவனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், "அவன் சுடப்படவில்லை என்றால் இரண்டு அல்லது நான்கு தீவிரவாதிகளையாவது கொன்றிருப்பான், அவனின் இறப்பு பழிதீர்க்கப்பட வேண்டும். இந்தக் கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்." என்றார்.
சோகத்தில் கர்னல் மக்கள்

பட மூலாதாரம், Kamal Saini
புதன்கிழமை காலையில் இருந்தே வினய் நர்வாலின் வீட்டிற்கு மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அவரின் இறப்பு செய்தியால் கர்னல் மக்கள் சோகத்தில் உள்ளனர்.
உள்ளூர் எம்.எல்.ஏ ஜக்மோகன் ஆனந்த் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் அவரின் குடும்பத்தைச் சந்திக்க வந்திருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜக்மோகன் ஆனந்த், "தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதால் ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. இத்தகைய தீவிரவாதிகள் ஒவ்வொருவராக குறிவைக்கப்பட்டு, பழிதீர்க்கப்படும். பிரதமர் மோதி சௌதி பயணத்தைப் பாதியில் முடித்துவிட்டு நாட்டிற்குத் திரும்பியுள்ளார். அவரும் ஸ்ரீநகருக்குச் செல்கிறார்." என்றார்.
"எங்கள் மனதில் உள்ள வலியை எங்களால் வெளிப்படுத்த முடியாது. எதிர்காலத்தில் தீவிரவாதிகளை அனுப்புவதைப் பற்றி நினைக்கக்கூட முடியாத அளவிற்கு பாகிஸ்தானிற்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும்." என அவரின் பக்கத்து வீட்டுக்காரரான பீர் சிங் கூறியுள்ளார்.

குர்கிராமைச் சேர்ந்த நர்வாலின் மனைவி ஹிமான்ஷி தற்போது முனைவர் பட்டம் படித்து வருகிறார். அவரின் தந்தை ஜிஎஸ்டி துறையில் கண்காணிப்பாளராக உள்ளார் மற்றும் அவரின் தாத்தா ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆவார்.
திருமணத்துக்கு முன்பே தேனிலவுக்கு ஜம்மு காஷ்மீருக்குச் செல்ல வேண்டும் என நர்வால் முடிவெடுத்திருந்ததாக அவரின் குடும்ப நண்பர் ஒருவர் உள்ளூர் ஊடகங்களுக்குக் கொடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மே 1 தான் நர்வாலின் பிறந்தநாள். தேனிலவிலிருந்து திரும்பிய பிறகு தன் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட நர்வால் திட்டமிட்டிருந்ததாக அவரின் நண்பர் கூறுகிறார்.
சம்பவம் நடந்த உடனே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் வினய் நர்வாலின் மனைவி அந்த இடத்திற்கு வந்தவர்களிடம், "நான் இங்கு தான் பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் கணவர் அந்தப் பக்கம் இருந்தார். ஒரு நபர் வந்து அவரைச் சுட்டுவிட்டார்," எனக் கூறுவது பதிவாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தத் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி சௌதி அரேபியப் பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள மோதி இதற்குக் காரணமாவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்தச் சம்பவத்தை சமீப ஆண்டுகளில் பொதுமக்களைக் குறிவைத்த மிகப்பெரிய தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தவிர்த்து பலரும் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












