ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வாழும் மக்கள் - ஏன் தெரியுமா?

நிலத்தடியில் நகரம்
    • எழுதியவர், கிளேர் ரிச்சர்ட்சன்
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்
    • எழுதியவர், ஹென்னிங் கோல்
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

கூபர் பெடி, ஆஸ்திரேலியாவின் ஒபல்(Opal) எனப்படும் தாதுக்கல் சுரங்கத் தொழிலின் மையமாக உள்ளது. இப்போது, அங்கு வசிப்பவர்களில் 60% பேர் நிலத்துக்கு அடியில் தான் வாழ்கின்றனர்.

மேலும், இந்த நகரம் வளம்குன்றா வாழ்க்கையைப் பொறுத்தவரை முன்னணியில் உள்ளது. கொப்புளிக்கும் வெப்பநிலையோடு, நாட்டின் தொலைதூரத்தில், எளிதில் அணுகமுடியாத வகையில் அமைந்துள்ளது.

வழக்கமாக உள்ளூர் ஒபல் தாதுக்கல் சுரங்கங்களில் இருந்து மெல்லிய சிவப்பு தூசியால் இந்த நகரம் மூடப்பட்டிருக்கும்.

அங்கு வசிக்கும் மக்கள் படைப்பாற்றல் கொண்டவர்கள். ஆனால், குளிர்ச்சியான, மிகவும் இணக்கமான காலநிலைக்குச் செல்வதைவிட, அங்கு வசிக்கும் மக்கள் நிலத்தடி சமூகத்தை உருவாக்கி, தோண்டப்பட்ட குழிக்குள் வீடுகள் முதல் தேவாலயங்கள் வரை அனைத்தையும் உருவாக்கினார்கள்.

இன்று, கூபர் பெடியில் வாழும் 3,500 உள்ளூர் மக்களில் 60% பேர் நிலத்தடியில் வாழ்கின்றனர்.

ஜான் டன்ஸ்டன்
படக்குறிப்பு, 53 ஆண்டுகளாக சிவதாதுக்கல் சுரங்கத் தொழிலில் இருந்து வருகிறார் ஜான் டன்ஸ்டன்

"கூபர் பெடியில் 60 சதவீதம் மக்கள் நிலத்திற்கு அடியில் தான் வாழ்கின்றனர். அவர்கள் அறிவாளிகள். நான் 53 ஆண்டுகளாக தாதுக்கல் சுரங்கத் தொழிலில் இருக்கிறேன். இன்னமும் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். நிலத்தடியில் வாழத் தொடங்கிவிட்டால், நீங்கள் மீண்டும் மேற்பரப்பில் ஒரு வீட்டில் வாழ முன்வரவே மாட்டீர்கள். வெப்பம், குளிர்ச்சிக்கான கருவிகள் தேவைப்படாது, இது மிகவும் அமைதி நிறைந்தது. 2018ஆம் ஆண்டு கோடையில் நாங்கள் 53 செல்ஷியஸ் வெப்பநிலையை எதிர்கொண்டோம்," என்கிறார் ஜான் டன்ஸ்டன்.

கூபர் பெடி நகரத்தின் தோற்றுவாயும் நிலத்தடியில் தான் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு வாலிபர் அந்தப் பகுதியில் ஒபல் எனப்படும் தாதுக்கல் துண்டு ஒன்றைக் கண்டுபிடித்தார்.

கூபர் பெடி, ஆஸ்திரேலியா

அப்போதிருந்து, சுரங்கத் தொழில் செய்பவர்கள் இந்தப் பகுதிக்கு வரத் தொடங்கினார்கள். விரைவில், அந்தப் பகுதி சிவதாதுக்கற்களுக்கான உலகின் மிகப்பெரிய ஆதாரமாக உருவெடுத்து, கூபர் பெடி நகரம் பிறந்தது.

1970 மற்றும் 80களில் அதன் உச்சத்தில் இருந்த இந்நகரம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுரங்கங்களைக் கொண்டிருந்தது. இன்று சுமார் 100 மட்டுமே உள்ளன.

"கடுமையான வெப்பம் நிலவியது. வடக்கில் இருந்து காற்று வீசும்போது உலைக்களத்தைப் போல் இருக்கும். என் வீடு நான்கு பெட்ரூம்களை கொண்டது. முன்னர் பயன்படுத்திய சுரங்கத்தில் இருந்து இதை உருவாக்கினோம்," என்கிறார் கூபர் பெடியின் குடியிருப்பாளர்களில் ஒருவரான ஜேசன் ரைட்.

நிலத்தடியில் நகரம்

2017ஆம் ஆண்டு கூபர் பெடி புதிய ஹைப்ரிட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தை அறிமுகத்தியது. 2018ஆம் ஆண்டில் அந்தத் திட்டத்தின் மூலம், தனது 70% பகுதிகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் வழங்கியது.

"கூபர் பெடி மிகவும் தனித்துவமானது. பரந்த நிலப்பரப்பில் பிரமாண்டமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்பை உருவாக்க முடியும். இங்குள்ள காலநிலையும் அதற்கு ஒத்துழைக்கிறது. இங்கு நிறைய சூரிய ஒளி கிடைக்கிறது.

கூபர் பெடி, ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சூரிய மின் உற்பத்திக்குச் சிறந்த இடமாக இதைக் கூறலாம்," என்கிறார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி நிலையத்தை இயக்குபவரான டேனியல் ஓ கான்னர்.

சமீபத்திய சில ஆண்டுகளில், இந்த நிலத்தடி நகரம், அதன் ஹைப்ரிட் ஆற்றல் திட்டத்திற்காக பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்பகுதியில் வெயில், காற்று வீசும் காலநிலையைப் பயன்படுத்தி, கூபர் பெடியின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆலை நகரத்திற்கு மின்சாரம் வழங்கத் தேவையான 70% ஆற்றலை உருவாக்குகிறது.

கூபர் பெடி, ஆஸ்திரேலியா

கோடையில் வெப்பநிலை 53 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என்று அறியப்பட்ட பகுதியில், தூய்மையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் இந்த நகரத்திற்கு அதுவரை மின்சாரம் வழங்கப் பயன்பட்டுக் கொண்டிருந்த புகையும் வெப்பமும் நிறைந்த டீசல் எரிபொருளில் இருந்து விடுதலை அளிக்கின்றன.

பல தசாப்தங்களாக சிவதாதுக்கல் சுரங்கத் தொழிலின் மையத்தில் இருந்த கூபர் பெடி நகரம், இப்போது அதன் தன்னிறைவுத் திறன் காரணமாக புதிய குடியிருப்பாளர்களை ஈர்க்கிறது.

சூரிய மின்சாரம்

இப்போது அவர்கள், சுரங்கத் தொழில் சார்ந்திருக்கும் மற்ற நகரங்களையும் நிலத்தடி வாழ்க்கைக்கு மாற வழி செய்துகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் தொலைதூர பகுதியில், எளிதில் அணுக முடியாத நிலவியலில் இருக்கும் சிறுநகரங்களுக்கு கூபர் பெடி ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

நிலத்தடியில் நகரம்

"சமீப ஆண்டுகளில் நிறைய புதிய மக்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கும் அதுதான் வேண்டும். எங்களுக்கு சுரங்கத் தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் தேவை. நகரங்களில் நெருக்கியடித்து மக்களால் எப்படி வாழ முடிகிறது என்பது எனக்குப் புரியவே இல்லை. எதற்காக அப்படி வாழ வேண்டும்?

உங்களுக்கு கூபர் பெடி மாதிரியான அழகான இடம் காத்திருக்கிறது," என்கிறார் ஜான் டன்ஸ்டன்.

காணொளிக் குறிப்பு, எகிப்து மன்னர் மம்மியை வைத்து 100 ஆண்டுகளாகத் தொடரும் ஆராய்ச்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: