2020 டெல்லி கலவரம்: ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை எப்போது? பிபிசி கள ஆய்வு

    • எழுதியவர், உமாங் போடார்
    • பதவி, பிபிசி நிருபர்

டெல்லியின் '2020 வகுப்புவாத கலவரங்கள்' அரங்கேறி, 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தக் கலவரங்கள் தொடர்பாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிபிசி நடத்திய ஆய்வில், அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள், இந்தியாவின் தலைநகரம் கண்ட மோசமான கலவரங்களில் ஒன்று. 2020 பிப்ரவரியில் நான்கு நாட்கள் நீடித்த வன்முறையில் 40 முஸ்லிம்கள் மற்றும் 13 இந்துக்கள் உள்பட 53 பேர் கொல்லப்பட்டனர்.

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர் தலைவர்களான உமர் காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் 16 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஒரு மாத காலம் நடந்த பெரும் போராட்டங்களின் பின்னணியில், இந்தக் கலவரத்தை அவர்கள் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், பல கடைகள் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டன. கலவரம் தொடர்பாக போலீசார் 758 வழக்குகளைப் பதிவு செய்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.

758 வழக்குகளின் நிலை என்ன?

ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுதொடர்பான பல வழக்குகள் நீதிமன்றங்களில் தடுமாற்றத்தையே சந்தித்துள்ளன.

இரண்டு மாதங்களாக, பிபிசி ஹிந்தி இந்த 758 வழக்குகளின் நிலையை ஆராய்ந்தது. 126 நீதிமன்றத் தீர்ப்புகளைப் பகுப்பாய்வு செய்தது.

நீதிமன்றங்களால் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழக்குகளில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பதை காவல்துறை தரவுகளும் பிபிசி ஹிந்தியின் பகுப்பாய்வும் காட்டுகின்றன.

பல உத்தரவுகளில், நீதிமன்றம் காவல்துறை விசாரணையைக் கடுமையாக விமர்சித்தது. காவல்துறை 'அலட்சியமாக' அல்லது 'முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அணுகுமுறையில்' குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்தது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை 'தவறாகச் சிக்க வைத்தது', 'போலியான' அறிக்கைகளைத் தயாரித்தது, 'சம்பவத்தை முழுமையாக விசாரிக்கவில்லை' என்றும் கூறியது.

இரண்டு உத்தரவுகளில், "வரலாற்றின் பக்கங்களில் இந்த கலவரங்கள் குறித்துப் புரட்டிப் பார்க்கும்போது, ​​முறையான விசாரணை நடத்த புலனாய்வு அமைப்பு தவறிவிட்டது என்பது ஜனநாயகத்தின் பாதுகாவலர்களை வேதனைக்கு உள்ளாக்கும். இதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை" என்று நீதிபதி கூறியுள்ளார்.

பிப்ரவரி 24, 2020 அன்று ஷதாப் ஆலம், தான் வேலை செய்து வந்த மருந்துக் கடையின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தார். வடகிழக்கு டெல்லியின் தெருக்களில் கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து நடந்த தீ வைப்பு சம்பவங்களின் காரணமாக, கடையை மூடுமாறு காவல்துறையினர் அவரிடம் கூறியிருந்தனர்.

"திடீரென்று, போலீசார் வந்து எங்களில் சிலரை தங்கள் வேனில் ஏற்றிச் சென்றனர்," என்று அவர் கூறினார்.

"ஏன் என்னை அழைத்துச் செல்கிறீர்கள் என்று போலீசாரிடம் கேட்டபோது, நான் கலவரத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தார்கள்" என்று ஷதாப் கூறுகிறார்.

காவல்துறையின் விசாரணையை விமர்சித்த நீதிமன்றம்

இந்த வழக்கில் ஷதாப் மீதும், மேலும் 10 பேர் மீதும் போலீசார் குற்றம் சாட்டினார்கள். ஆனால் வழக்கு விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பே, காவல்துறையின் விசாரணையை விமர்சித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது.

சாட்சிகளின் வாக்குமூலங்கள் 'போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம்' என்றும், அந்தக் கடை பெரும்பாலும் ஒரு இந்து கும்பலால் எரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. சம்பவம் நடந்தபோது அங்கு காவல்துறையினர் இருந்தபோதிலும், இந்தக் கண்ணோட்டத்தில் அவர்கள் வழக்கை விசாரிக்கவில்லை என்றும் அது கூறியது.

காவல்துறையிடம், மின்னஞ்சல்கள் மூலமாகவும் நேரிலும் தொடர்புகொள்ள பிபிசி முயன்றது. ஆனால் காவல்துறை பதிலளிக்கவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "அனைத்து விசாரணைகளும் நம்பகமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக" காவல்துறை தெரிவித்திருந்தது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக, 33 வயதான பிஎச்டி மாணவி குல்ஃபிஷா பாத்திமா சிறையில் உள்ளார். அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற பதினொரு பேர் சிறையில் வாடுகின்றனர்.

"அவர் சிறைக்குச் சென்றதில் இருந்து, ஒவ்வொரு விசாரணையிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று குல்ஃபிஷாவின் தந்தை சையத் தஸ்னீஃப் உசேன் பிபிசியிடம் கூறுகிறார்.

ஆனால் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றச்சாட்டுகள், ஜாமீன் கிடைப்பதைக் கடினமாக்குகின்றன.

"சில நேரங்களில், எனது மகளைப் பார்க்க முடியாதோ அல்லது அதற்கு முன்பே இறந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

சிறை வாழ்க்கைக்குப் பிறகு?

நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டவர்களுக்குக்கூட, அந்தச் செயல்முறை எளிதாக இருந்ததில்லை.

காவல்துறை தங்களைக் கைது செய்த பிறகு, "அவர்கள் எங்கள் பெயர்களைக் கேட்டு அடித்தார்கள். கைது செய்யப்பட்ட நாங்கள் அனைவரும் முஸ்லிம்கள்" என்று ஷதாப் கூறுகிறார். உடலின் மூன்று காயங்களைக் காட்டும் தனது மருத்துவ அறிக்கையை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அவரது தந்தை தில்ஷாத் அலி, இந்த வழக்கை வெளியில் இருந்து கையாண்டவர்.

"இதெல்லாம் கோவிட்-19 காலத்தில் நடந்தது. அப்போது ஊரடங்கு உத்தரவு இருந்தது. நாங்கள் மிகுந்த பதற்றத்தில் இருந்தோம்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

அவரது ஜாமீன் மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. சிறையில் சுமார் 80 நாட்களைக் கழித்த பிறகு, இறுதியாக அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இப்போது, ஷதாபின் ​​குடும்பத்தினர் இதற்காக இழப்பீடு கோருகிறார்கள்.

"எதுவும் நிரூபிக்கப்படவில்லை. நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் இவ்வளவு நேரத்தையும் பணத்தையும் இதற்காகச் செலவிட்டோம்," என்று தில்ஷாத் கூறினார்.

"எனது மகன் மீது போலீசார் பொய் வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என்றால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

முஸ்லிம் நபரைக் காப்பாற்றியவருக்கு எதிரான வழக்கு

இந்துக்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளில் காவல்துறை மீதான விமர்சனங்களுடன், சில விடுதலைகளும் நடந்தன. கடந்த ஜனவரியில், கலவரத்தின்போது ஒரு முஸ்லிம் நபரை இழுத்து, தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் பாட்டி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

சந்தீப் குற்றவாளி என்பதைக் காட்ட காவல்துறை இரண்டு காணொளிகளைச் சமர்ப்பித்திருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள், 'சந்தீப்பை குற்றவாளியாக்க, காவல்துறை முழுமையற்ற ஒரு காணொளியைச் சமர்ப்பித்ததாக' கூறினர்.

முழுமையான காணொளியில், சந்தீப் அந்த முஸ்லிம் நபரை அடிப்பதற்குப் பதிலாக, காப்பாற்றுவதைக் காணலாம்.

'உண்மையான குற்றவாளிகளைக்' கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, சந்தீப்பை சிக்க வைக்க, அந்தக் காணொளியை காவல்துறை தந்திரமாக மாற்றியமைத்ததாக நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறை ஆணையரையும் அது கேட்டுக் கொண்டது.

பிபிசி ஹிந்தி சந்தீப்பை தொடர்பு கொண்டபோது, ​​நான்கு மாதங்கள் சிறையில் கழித்த தனது 'சோதனைக் காலம்' குறித்துப் பேச விரும்பவில்லை என்று கூறினார்.

தரவுகள் கூறுவது என்ன?

ஏப்ரல் 2024இல், டெல்லி காவல்துறை 758 வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தது. தீர்ப்பளிக்கப்பட்ட 111 வழக்குகளில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். 19 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிபிசி வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 62 வழக்குகள் குறித்த அறிக்கையை காவல்துறை வழங்கியது. அதிலும், ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது, நான்கு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுவரை வெளியான தீர்ப்புகள் குறித்த பிபிசி ஹிந்தியின் பகுப்பாய்வில், ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை 18 பேர் விடுவிக்கப்பட்டதையும், ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டதையும் கண்டறிந்தோம். இது இந்த விவகாரத்தில், 'விடுதலை விகிதம்' 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதை உறுதி செய்கிறது.

இந்த விஷயத்தில், காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகள் நீதிமன்றங்களில் ஏன் தடுமாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள 126 உத்தரவுகளை ஆய்வு செய்தோம்.

விடுதலைக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன, பல வழக்குகளில் சாட்சிகள் காவல்துறையின் கூற்றை ஆதரிக்காமல், அதற்கு மாறாக சாட்சி கூறினர்.

பெரும்பாலான வழக்குகளில், நடந்த சம்பவங்களுக்கு சாட்சிகளாக காவல்துறை அதிகாரிகளே ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக, அவர்களின் சாட்சியங்கள் நம்பகமானவை என்று நீதிமன்றம் கருதவில்லை.

அறிக்கைகளில் முரண்பாடுகள் இருந்தன அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது அல்லது சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் இருந்தார்களா என்பது குறித்து சந்தேகங்கள் இருந்தன.

பல வழக்குகளில், காவல்துறையின் விசாரணைகளை நீதிமன்றம் விமர்சித்தது. டெல்லி கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் அப்துல் கஃபர், "80-90% வழக்குகளில் விசாரணைகள் முறையாக நடத்தப்படவில்லை" என்று கூறினார்.

மற்றொரு வழக்கறிஞர் ரக்ஷ்பால் சிங், "காவல்துறையிடம் போதுமான வளங்கள் இல்லை என்பதையும், கோவிட்-19 ஊரடங்கு உத்தரவு இருந்ததையும், இவ்வளவு வழக்குகளை விசாரிப்பது எளிதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

பலர் விடுதலை செய்யப்படும் நிலையில், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் லோகுர், "கைது சட்டவிரோதமானது அல்லது தேவையற்றது எனக் கண்டறியப்பட்டால், வழக்கு தொடுப்பவரும்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறினார்.

"மக்கள் பல ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் 'அவர்களை சிறையில் அடைப்பவர்கள்' மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்று அவர் கூறினார்.

வழக்கு விசாரணைக்கான காத்திருப்பு

நீதிமன்றங்களில் வழக்குகள் தடுமாறி வரும் நிலையில், சில வழக்குகளின் விசாரணைகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் பல மாதங்களாக நடந்த போராட்டங்களின் பின்னணியில் கலவரத்தைத் திட்டமிட்டதாகக் கூறி, சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்பட 18 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஆறு பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. "ஆனால் ஜாமீன் செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளதாக," ஹுசைன் கூறுகிறார்.

குல்ஃபிஷாவின் ஜாமீன் மனு பல மாதங்கள் விசாரிக்கப்பட்ட பிறகு, அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டார். இப்போது முழு வழக்கும் மீண்டும் முதலில் இருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வழக்கு விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை, பல்வேறு காரணங்களுக்காகத் தாமதமாகி வருகிறது. ஆரம்பத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைத்து ஆவணங்களையும் காகிதப் பிரதியாகத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என விரும்பியதால் வழக்கு சுமார் நான்கு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகைகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை அவ்வாறு கொடுப்பதற்கு அதிக செலவாகும் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், இறுதியில் போலீசார் அவர்களிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர்.

செப்டம்பர் 2023இல் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர், "தங்களது வழக்கைத் தொடர்வதற்கு முன், காவல்துறையின் விசாரணை முழுமையாக முடிந்ததா இல்லையா என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு" காவல்துறையிடம் கேட்டுக் கொண்டனர். காவல்துறை இந்த வழக்கில் ஐந்து குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. அதில் கடைசி குற்றப் பத்திரிகையை சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே தாக்கல் செய்தது.

அடுத்தடுத்த குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்வதன் மூலம், தங்களால் சுட்டிக்காட்டப்பட்ட வழக்கில் உள்ள 'குறைபாடுகளை' மறைக்க காவல்துறை முயலக்கூடும் என்று அஞ்சுவதாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிட்டனர்.

விசாரணையின் நிலை குறித்து காவல்துறை தெரிவிக்க வேண்டுமா என்பது குறித்து சுமார் ஒரு வருட காலத்திற்கு வாதங்கள் நீடித்தன. கடந்த செப்டம்பரில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, விசாரணை முடிந்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டவரிடம் போலீசார் இறுதியாகத் தெரிவித்தனர்.

குல்ஃபிஷாவின் குடும்பத்தினருக்கு இந்த வழக்கு பற்றி அதிகம் தெரியாது, ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

"இந்த வழக்கு எங்களுக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் கடந்து செல்ல முயல்கிறோம்," என்று குல்ஃபிஷாவின் தாயார் ஷக்ரா பேகம் கூறுகிறார்.

இந்த வழக்கில் பதினெட்டு பிரதிவாதிகள் இருப்பதால், விசாரணை தொடங்குவதற்கு முன்பு குற்றச்சாட்டுகளை நிறுவுவதற்கே நீதிமன்றத்திற்குப் பல ஆண்டுகள் தேவைப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"அவள் என்னுடைய கோஹினூர் வைரம். அந்த விலைமதிப்பற்ற வைரம், ஜொலிக்குமா அல்லது துருப்பிடித்துவிடுமா என்று பார்க்க வேண்டிய தருணம் இது," என்று ஹுசைன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)