பனியில் கேரள முஸ்லிம் பெண் விளையாடும் வீடியோவால் சர்ச்சை - மத குரு விமர்சனம் பற்றி மகள் கூறியது என்ன?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

கேரளாவில், ஒரு இஸ்லாமிய மதகுரு 55 வயது பெண்ணை விமர்சித்ததையடுத்து சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், 55 வயதான இஸ்லாமிய பெண் ஒருவர் மணாலிக்குச் சென்றிருந்தார்.

அவர் பனியில் விளையாடும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, இஸ்லாமிய மத குரு ஒருவர் அந்தப் பெண்ணை விமர்சித்திருந்தார்.

அவரது விமர்சனத்திற்குப் பிறகு, இந்தச் சம்பவம் குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் தீவிரமடைந்துள்ளது.

இஸ்லாமிய மதகுருவின் விமர்சனத்துக்குள்ளான வீடியோவில், அந்தப் பெண் தனது மகள்களுடன் பனியில் விளையாடுகிறார்.

வீடியோவில், அந்தப் பெண் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பனியில் விளையாடி மகிழுமாறு உற்சாகமாகக் கூறுகிறார். இதனுடன், அவர் பனிப்பந்துகளை எறிந்து பிடிக்க முயற்சிக்கிறார். அவரது மகள்கள் இந்த ரீலை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அதன் பிறகு இந்த வீடியோ வைரலானது

கோழிக்கோட்டில் உள்ள நாதபுரத்தில் வசிக்கும் இந்தப் பெண்ணின் கணவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அதன் பிறகு, அவர் தனது மூன்று மகள்களையும் தனியாளாக வளர்த்தார். பனியும் அமைதியுமான சூழல், நிச்சயமாக அவரை உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அவரது மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. அவரது வீடியோவைப் பார்த்த அபூபக்கர் முஸ்லியார் எனும் இஸ்லாமிய மதகுரு அந்தப் பெண்ணை விமர்சித்தார். இப்படி பனியுடன் விளையாடுவதற்குப் பதிலாக, கணவனை இழந்த அந்த பெண் வீட்டிலேயே குர்ஆனைப் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கேரள பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர் அஷ்ரப் கடக்கல், "இது தேவையற்ற கருத்து" என்று பிபிசி இந்தியிடம் கூறினார்.

''வயதான இந்த பெண்மணி தனது மகள்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் மணாலிக்குச் செல்வதால் அவருக்கு என்ன பிரச்னை? இது இஸ்லாம் மதத்தை எவ்வாறு பாதித்தது?'' என்று கேட்டார் அஷ்ரப்.

மத குரு விமர்சனம் பற்றி பெண்ணின் மகள் கூறியது என்ன?

இதுகுறித்து கேள்விப்பட்ட அந்தப் பெண்ணின் மகள் ஜிஃபானா மிகவும் வருத்தமடைந்தார்.

மதகுருவின் விமர்சனத்திற்குப் பிறகு, அவரது உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரும் தனது தாயாரை விமர்சிக்கத் தொடங்கினர் என்கிறார் ஜிஃபானா.

"எங்களுடைய இந்த அற்புதமான பயணத்தின் போது, ​​எனது அம்மா முதல் முறையாக பனியைப் பார்த்தார். அதைப் பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இன்ஸ்டாகிராம் ரீல் செய்து இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம். ஆனால் இதற்குப் பிறகு மக்கள் அவரை விமர்சிக்கத் தொடங்கினர். சமூக ஊடகங்களில் அவரை அதிகப்படியானோர் திட்டத் தொடங்கினர்" என்று ஜிஃபானா சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

"எனது அம்மாவை ஆறுதல்படுத்தி, அவரது நம்பிக்கையை மீட்டெடுக்க முடிந்தது. ஆனால் எங்கள் மகிழ்ச்சியான தருணங்கள் இப்படி ஒரு மத சர்ச்சையாகும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை." என்றும் தெரிவித்தார் ஜிஃபானா .

மேலும், "ஒரு பிரபலமான அறிஞர் எங்கள் குடும்பத்தின் அமைதியைக் குலைத்துவிட்டார்" என்று அந்த மத குரு குறித்து கூறியுள்ளார் ஜிஃபானா.

"25 வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்த பேரக்குழந்தைகள் கொண்ட ஒரு பெண் மூலையில் அமர்ந்து குர்ஆனை படித்தால் போதுமா? ஒரு பெண் மகிழ்ச்சியாக இருப்பதை ஏன் தடுக்க வேண்டும்? இந்த உலகம் ஆண்களுக்கு மட்டும் படைக்கப்பட்டதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாமிய மத குருவால் விமர்சிக்கப்பட்ட அந்தப் பெண், வீடியோவில் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கிறார்.

அந்த பெண் முழு உற்சாகத்துடன் உரத்தகுரலில், "நண்பர்களே, ஹஸாரா, ஷாஃபியா, நசீமா, மற்றும் சஃபினா, நீங்கள் அனைவரும் வீட்டில் உட்கார்ந்தே இருக்கிறீர்களே, ஏன்?உங்கள் உற்சாகம் எங்கே? நீங்கள் அனைவரும் கண்டிப்பாக இங்கே வரவேண்டும். இந்த 55 வயதிலும், நான் இங்கு வந்து மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். பனியில் படுத்திருக்கிறேன், இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இவ்வளவு மகிழ்ச்சியை எங்கே உங்களால் அனுபவிக்க முடியும்? வாருங்கள், எல்லோரும் வாருங்கள்! நாம் மறுபடியும் ஒரு முறை இங்கே வரலாம்" என்று கூறுகிறார்.

வீடியோவில், கேமராவின் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்கிறது. "பாட்டி உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது? "

அதற்கு பதில் அளிக்கும் அந்தப் பெண் "அட்டகாசமாக இருக்கிறது" என்கிறார்.

அந்தப் பெண்ணை விமர்சித்த அந்த மத குரு மீது, தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் ஆண்களும் பெண்களும் அந்த மத குருவை தற்போது விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பேராசிரியர் அஷ்ரஃப் இதைப் பாராட்டுகிறார்.

"கிட்டத்தட்ட அனைவரும் அந்தப் பெண்ணை ஆதரித்துள்ளனர். இது மிகவும் நேர்மறையான அணுகுமுறை" என்கிறார் அஷ்ரஃப் .

மேலும், "இந்தப் பெண்ணின் மகள் உட்பட பலர் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுள்ளனர். கணவரை இழந்த ஒரு பெண் சுற்றுலா தலங்களுக்குச் செல்வதையோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்வதையோ தடைசெய்யும் ஏதேனும் குறிப்பு குர்ஆனில் உள்ளதா?" என கேள்வி எழுப்புகிறார் அவர்.

இந்தக் கேள்விக்கு அவரே பதிலளிக்கிறார். "அத்தகைய குறிப்பு எதுவும் இல்லை. மறுபுறம் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களை அல்லாஹ்வின் அடையாளங்களைக் காண உலகம் முழுவதும் பயணம் செய்ய குர்ஆன் ஊக்குவிக்கிறது.'' என்கிறார் அவர்.

மேலும், "உலகின் அதிசயங்களைக் காண மக்களை ஊக்குவிக்கும் பல இஸ்லாமிய அறிஞர்களும் உள்ளனர், ஏனெனில் அது அல்லாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதுதான் உண்மையான பொருள்" என்கிறார் பேராசிரியர் அஷ்ரப்.

"மக்கள் பல தவறான நம்பிக்கைகளை நம்புகிறார்கள். அபூபக்கர் முஸ்லியார் போன்றவர்கள் இஸ்லாம் மதத்தின் அடிப்படை உணர்வைப் பற்றி அறிந்திருக்கவில்லை.'' என்கிறார் அஷ்ரப்

சுற்றுலாவுக்குச் சென்ற அந்தப் பெண்ணை விமர்சித்த அபூபக்கர் முஸ்லியாரை தொடர்பு கொள்ள நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அந்தப் பெண்ணையும் அவரது மகள் ஜிஃபானாவையும் போலவே, அவரது தொலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியாரின் மகன் ஹக்கீம் அஸ்ஹரியை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் டெல்லிக்குச் சென்றுள்ளதாகவும், அவரைப் பேச வைக்க முயற்சிப்பதாகவும், அவரது செயலாளர் எங்களிடம் கூறினார். அவரிடம் இருந்து பதில் வந்தால் இந்த கட்டுரையில் பின்னர் சேர்க்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)