வைக்கம் போராட்டத்தின் போது 'கேரளாவின் முதல் ஃபெமினிஸ்ட் ராணி' என்ன செய்தார்?

பட மூலாதாரம், Manu Pillai
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1920களின் நடுப்பகுதியில் ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது, 'கல்லூரிக்குச் செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் ராணியுடன் அவரது அரண்மனையில் தேநீர் அருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.'
இந்த அறிவிப்பு திருவிதாங்கூர் சமஸ்தான பெண்களிடையே பெரும் உற்சாகத்தையும் கல்லூரிக்குச் செல்வதற்கான ஆர்வத்தையும் தூண்டியது. காரணம், அந்த ராணி அப்போது கேரளாவின் பிரபலமான நபராக இருந்தார். அவரது பெயர் கேரளா முழுக்க பரவியிருந்தது.
சுதந்திரத்திற்கு முந்தைய கேரளாவின் 'திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை' 7 ஆண்டுகள் (1924- 1931) ஆட்சி செய்த ராணி சேது லக்ஷ்மி பாயி, தன் இறுதிக்காலத்தில் ஒரு சாதாரண மூதாட்டியாக பெங்களூரில் வாழ்ந்து, மறைந்தார்.
"கேரள மகாராஜாக்கள் குறித்தே வரலாற்றில் அதிகம் பேசப்பட்டுள்ளது, ஆனால் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு ராணியின் கதையைத் தேடினால், மிகக் குறைவாகவே குறிப்புகள் காணப்படுகின்றன" என பிபிசியிடம் கூறுகிறார் எழுத்தாளர் மனு பிள்ளை. ராணி சேது லக்ஷ்மி பாயி குறித்த 'Ivory throne' என்ற புத்தகம் தான் கேரளாவைச் சேர்ந்த மனு பிள்ளையின் முதல் புத்தகம்.
சேது லக்ஷ்மி பாயி, பிரிட்டிஷ் இந்தியாவின் 'திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின்' ரீஜன்ட் (Regent- ஒரு மன்னரின் சார்பாக ஒரு நாட்டை தற்காலிகமாக ஆட்சி செய்யும் நபர்) ராணியாக 1924இல் பொறுப்பேற்ற போது அவருக்கு 29 வயது தான்.
ஆனால், சேது லக்ஷ்மி பாயி திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் பிறந்த பெண்ணல்ல, அவர் தத்தெடுக்கப்பட்டவர்.
கேரளாவின் 'மருமக்கதாயம்' முறை

பட மூலாதாரம், Harper Collins India
கேரளாவில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை 'மருமக்கதாயம்' என்ற ஒரு வழக்கம் நடைமுறையில் இருந்தது, அதாவது தாய்வழி வாரிசுரிமை முறை.
"கேரளாவில் நாயர் சமூகம் மற்றும் சில அரச குடும்பங்களால் பின்பற்றப்பட்ட இந்த முறையில், ஆட்சி, அதிகாரம் மற்றும் சொத்துகள் பெண்கள் வழியே கடத்தப்பட்டது. அதாவது, ஒரு அரசனுக்குப் பிறகு அவனது மகன் அடுத்த அரசன் ஆகமாட்டான், அரசனின் மூத்த சகோதரியின் பிள்ளைகளுக்கு அந்த பதவி வழங்கப்படும். மருமக்கதாயம்- மக்கள் மற்றும் மருமக்கள் (சகோதரியின் பிள்ளைகள்) வழி. அரசனின் மூத்த சகோதரி 'மூத்த ராணி' அல்லது 'அட்டிங்கல் ராணி' என்று அழைக்கப்படுவார்." என ஒரு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் 1885ஆம் ஆண்டு, மகாராஜா 'மூலம் திருநாள்' ஆட்சிக்கு வந்தார். அவருக்கு உடன்பிறந்த சகோதரிகள் யாரும் இல்லை. தத்தெடுக்கப்பட்ட இரு சகோதரிகளில் ஒருவர் காலமாகிவிட்டார், இன்னொருவருக்கு பிள்ளைகள் இல்லை. அதாவது 'மருமக்கதாயம்' முறையில் அவருக்குப் பிறகு ராஜ வம்சத்தைத் தொடர யாரும் இல்லை. எனவே, 'மாவேலிக்கரா அரச குடும்பத்தில்' இருந்து இரண்டு பெண் பிள்ளைகளைத் தத்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
1900ஆம் ஆண்டு, பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மாவின் பேத்திகளான பூரடம் திருநாள் சேது லக்ஷ்மி பாய் மற்றும் மூலம் திருநாள் சேது பார்வதி பாய் ஆகிய இருவரும் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள்.
இதில் 'மூத்த ராணி' சேது லக்ஷ்மி பாய், 'இளைய ராணி' சேது பார்வதி பாய்.
"ஆறு வயது கூட நிரம்பாத ஒரு சிறுமியை திடீரென 'மூத்த ராணி' என்ற பதவியில் அமர்த்தி, அவரது சொந்த தந்தை கூட 'ஹைனஸ்' என்று தான் அழைக்க வேண்டும் என்பது விசித்திரமான ஒரு சூழலாக தான் இருந்திருக்கும். தத்தெடுக்கப்பட்ட நாள் முதல் அவர் ஒரு ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாகவே நடத்தப்பட்டார், ஒரு சிறுமியாக அல்ல" என்கிறார் எழுத்தாளர் மனு பிள்ளை.
"தன்னுடன் விளையாடிய தோழிகளும், தூக்கிக் கொஞ்சிய உறவினர்களும் இப்போது தலை வணங்கி விலகி நிற்கத் தொடங்கினார்கள். சிறு வயதிலேயே அந்தத் தனிமைக்கு சேது லக்ஷ்மி பாய் பழகிக்கொண்டார்"

பட மூலாதாரம், Manu Pillai
மூத்த ராணி சேது லக்ஷ்மி பாய் 1906இல், ஹரிபாட் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராம வர்மாவை மணந்தார். அப்போது அவருக்கு வயது 10 தான். அதேபோல, இளைய ராணி சேது பார்வதி பாயி கிளிமானூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீ பூரம் ரவிவர்மா தம்புரானை மணந்தார்.
இதில், சேது லக்ஷ்மி பாய்க்கு பிறந்த இரு குழந்தைகளுமே பெண்கள். ஆனால், சேது பார்வதி பாயிக்கு இரு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை.
மருமக்கதாயம் முறைப்படி, இளைய ராணி சேது பார்வதியின் மூத்த மகன் 'சித்திரை திருநாள் பலராம வர்மா' தான் அடுத்த திருவிதாங்கூர் ராஜ்ஜிய மன்னர் என நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், ஒரு எதிர்பாராத திருப்பமாக 1924, ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு, திருவிதாங்கூர் மன்னர் 'மூலம் திருநாள்' உடல்நலக்குறைவால் 66 வயதில் காலமாக, அடுத்த மன்னரான பலராம வர்மாவுக்கோ இன்னும் 18 வயது பூர்த்தி ஆகாத நிலை.

பட மூலாதாரம், Manu Pillai
ரீஜன்ட் ஆட்சியாளர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள்
"பொதுவாக பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த இந்திய ராஜ்ஜியங்களில் ஒரு மன்னர் இறந்து, அடுத்த மன்னருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்றால், அடுத்த மன்னரின் தாய் தான் 'ரீஜன்ட்' (மன்னரை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிக ஆட்சியாளர்) ஆக நியமிக்கப்படுவார். ஆனால், மூலம் திருநாள் தனது இறப்புக்கு முன்பாகவே, கேரளாவின் மருமக்கதாயம் முறைப்படி 'மூத்த ராணி' தான் ரீஜன்ட்-ஆக நியமிக்கப்பட வேண்டும் என பிரிட்டிஷ் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்." என தனது 'Ivory throne' புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மனு பிள்ளை.
ஆனால் 1924இல், மூத்த ராணி சேது லக்ஷ்மி பாய் ரீஜன்ட்-ஆக பொறுப்பேற்ற போது கேரள மாநிலம் கடும் மழை வெள்ளத்தை எதிர்கொண்டது எனக் குறிப்பிடும் மனு பிள்ளை, "ஒரு மன்னர் இறந்தால் 3 நாட்களுக்கு அரசு முழுவதுமாக முடங்கிவிடும். ஆனால் அரசு முடங்கினாலும் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைப்பதை சேது லக்ஷ்மி பாய் உறுதி செய்தார்" என்கிறார்.
அதேசமயம், பிரிட்டிஷ் இந்தியாவில் 'ரீஜன்ட்' ஆட்சியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. அவர்களால் மன்னருக்கான அதிகாரங்களுடன் செயல்பட முடியாது.
"ஆனால், சேது லக்ஷ்மி பாய் விவகாரத்தில் அப்படி இல்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் முதல் திருவிதாங்கூர் ராஜ்ஜிய மந்திரிகள், அதிகாரிகள் வரை, சேது லக்ஷ்மி பாயை 'மகாராஜா' என்றே அழைத்தனர். காரணம் கேரளாவின் 'தாய்வழி வாரிசுரிமை' முறை. அதில், ஆண்/பெண் பேதமின்றி ஆட்சி செய்பவர் யாராக இருந்தாலும் அவர் மகாராஜாவாகவே நடத்தப்படுவார்" என தனது புத்தகத்தில் கூறுகிறார் மனு பிள்ளை.
"பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு, புதிதாகப் பதவியேற்ற அந்த இளம் பெண்மணி ரீஜன்ட் ராணி மட்டுமே. ஆனால், திருவிதாங்கூர் பொதுமக்களுக்கு, அவர் 'திருவிதாங்கூர் மகாராஜா பூரடம் திருநாள்' ஆவார்."

பட மூலாதாரம், Manu Pillai
வைக்கம் போராட்டம்
சேது லக்ஷ்மி பாய் 'ரீஜன்ட் ராணியாக' பொறுப்பேற்ற காலகட்டத்தில் தான் கேரளாவின் வைக்கம் போராட்டம் நடைபெற்றது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தின் மையமாக அமைந்திருந்தது மகாதேவர் ஆலயம். அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோராகக் கருதப்பட்ட ஈழவர், புலையர் ஆகியோர் நடக்கவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தெருக்களில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், உயர்சாதி இந்துக்கள் செல்லலாம் என்றாலும்கூட ஈழவர், தீயர், புலையர் ஆகியோர் நடக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீண்டாமையை எதிர்த்து, 1924 மார்ச் மாதம் வைக்கம் சத்தியாகிரக போராட்டம் அறிவிக்கப்பட்டது. டி.கே. மாதவன், கே. கேளப்பன் மற்றும் கே.பி. கேசவ மேனன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு, காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பெரியாரின் ஆதரவு இருந்தது.
1924, ஆகஸ்ட் மாதம் சேது லக்ஷ்மி பாய் 'ரீஜன்ட் ராணியாக' வந்தது, சத்தியாகிரக போராளிகள் பலருக்கும் ஆறுதலை அளித்தது என தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மனு பிள்ளை.
அதேபோல காந்தியும், 'தீண்டாமை இந்து மதத்திற்கு ஒரு பெருமையல்ல, ஆனால் ஒரு பெரிய கறை என்பதை மகாராணியும் அங்கீகரிப்பார் என்று நம்புகிறேன்' என்று காந்தி தனது 'யங் இந்தியா' வார இதழில் குறிப்பிட்டிருந்தார்.
"முதலில், மூலம் திருநாள் மகாராஜாவால் கைது செய்யப்பட்ட சத்தியாகிரக போராளிகளை விடுதலை செய்ய ராணி வழிவகைச் செய்தார். வைக்கம் போராட்டத்தை எதிர்க்க அவர் விரும்பவில்லை. ஆனால், ராணியின் மொத்த மந்திரிசபை, திவான் மற்றும் அவரது கணவரும் கூட வைக்கம் போராட்டத்திற்கு எதிராகவே இருந்தார்கள். காரணம், பிராமண மத குருமார்களின் ஆதிக்கம். எனவே, இவர்கள் எல்லோரையும் எதிர்த்து ராணியால் பெரிய முடிவுகளை எடுக்க முடியவில்லை" என 'Ivory throne' நூலில் எழுதியுள்ளார் மனு பிள்ளை.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கேரளா வந்த காந்தி, ராணி சேது லக்ஷ்மி பாயை சந்தித்துப் பேசினார். அதை 'வைக்கம் போராட்டம்' என்ற நூலில் பழ. அதியமான் பின்வருமாறு விவரிக்கிறார்.
போராட்டம் துவங்கி ஓராண்டு நெருங்கிய நிலையில் 1925, மார்ச் 9ஆம் தேதி காந்தி வைக்கம் வந்தார். சத்தியாகிரகிகள், வைதீகர், மகாராணி, நாராயண குரு, தேவஸ்வம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். காவல்துறை ஆணையர் பிட்டையும் சந்தித்தார்.
1925, ஜூன் மாதத்தில் இந்தப் போராட்டத்தில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் மூன்றில் தீண்டாதார் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சத்தியாகிரகிகள் இதனை ஏற்கவில்லை. வைதீகர்களும் ஏற்கவில்லை.
காந்தி மகாராணியைச் சந்தித்தபோதே இதுபற்றி முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சாலைகளைத் திறந்துவிட்ட பிறகு, கோவிலுக்குள் நுழைய வேண்டுமென பெரியார் கேட்டால் என்ன செய்வது என்று மகாராணி காந்தியிடம் கேட்டார். காந்தி பெரியாரிடம் பேசியபோது, "கோவிலுக்குள் நுழைவதுதான் இறுதி லட்சியம்; ஆனால், மக்களிடமும் அதற்கான மனப்போக்கு வரும்வரை அதற்காக கிளர்ச்சி செய்ய மாட்டோம்" என்றார்.
இதை காந்தி, மகாராணியிடம் கூறியவுடன், சாலைகளைத் திறக்க ராணி ஒப்புக்கொண்டார்.
தெருக்கள் திறந்துவிடப்படும் நாளில் போராட்டம் முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. கிழக்குத் தெருவைத் தவிர, பிற தெருக்கள் திறந்துவிடப்பட்ட நிலையில், போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பெரியார் தலைமையில் நடந்த வெற்றிவிழாவில் கோவில் நுழைவையே இறுதி லட்சியமாக பெரியார் உள்ளிட்டோர் குறிப்பிட்டனர். இப்படியாக வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பட மூலாதாரம், Manu Pillai
'ஃபெமினிஸ்ட் ராணி'
"வைக்கம் போராட்டத்தில் ராணி சேது லக்ஷ்மி எடுத்த முடிவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்தன. செய்தித்தாள்களில் ராணியின் புகைப்படங்கள் இடம்பெற்றன. அவர் ஒரு பிரபலமாக மாறினார். வைக்கம் போராட்டம் என்ற முதல் சோதனையை அவர் வெற்றிகரமாக கடந்திருந்தார்" எனக் குறிப்பிடுகிறார் மனு பிள்ளை.
ஆனால், வைக்கம் போராட்டத்தில் ராணி சேது லக்ஷ்மி இன்னும் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருக்கலாம், அதாவது 'கோயில் நுழைவை அனுமதித்திருக்கலாம் அல்லது இந்த பிரச்னையை முன்கூட்டியே தீர்த்திருக்கலாம் என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
"இன்னும் சில ஆண்டுகளுக்கு தான் ஆட்சி செய்ய வேண்டும், அதுவும் உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அரசாங்கத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். மத உணர்வு போன்ற கவனமாகக் கையாள வேண்டிய சமூக விஷயங்களில் அரசுக்கு எதிராக முடிவெடுப்பது ஒரு கடினமான சூழ்நிலையை உருவாக்கும். எனவே தான் ராணி சேது லக்ஷ்மி மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருந்தார்" என்று எழுதுகிறார் மனு பிள்ளை.
ஆனால், தனது ஆட்சிக்காலம் முழுக்க பெண் கல்விக்கும், சாதித் தீண்டாமைக்கும் எதிராக போராடினார் ராணி சேது லக்ஷ்மி என குறிப்பிடுகிறார் மனு பிள்ளை.
"அவர் ஆட்சிக்கு வருவதற்குமுன், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தவிர வேறு எந்தப் அரசுப் பணிகளிலும் பெண்கள் இல்லை. ஆனால் நான்கு ஆண்டுகளுக்குள், நூற்றுக்கணக்கான பெண்களை அரசு சேவைகளில் ஈடுபடுத்தினார். அவரை கேரளாவின் முதல் 'ஃபெமினிஸ்ட் ராணி' என்றே கூறலாம்" என்கிறார்.
"அவர் தனது வருவாயில் ஐந்தில் ஒரு பங்கை கல்விக்காகச் செலவிட்டார். கல்லூரியில் பெண்கள் சேர வேண்டுமென பல சலுகைகளை அறிவித்தார். பெண்களுக்கான கல்லூரிகளை, பள்ளிகளை தரம் உயர்த்தினார். முதல் மலையாள திரைப்படம் கூட அவரது காலத்தில் தான் தயாரிக்கப்பட்டது. திருவிதாங்கூர் மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவைகளைப் பெற்றதும் அப்போதுதான்."

பட மூலாதாரம், Manu Pillai
1928ஆம் ஆண்டு முதல் மலையாள திரைப்படமான 'விகதகுமாரன்' திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்டது. அதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த பி.கே. ரோஸி, கேரளத்தில் பட்டியல் பிரிவினராக அங்கீகரிக்கப்பட்ட புலையர் சமூகத்தில் பிறந்தவர். மலையாள சினிமாவின் தந்தை எனப் போற்றப்படும் ஜே.சி. டேனியல் இதை இயக்கியிருந்தார்.
அந்தப் படத்தில் நாயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக ரோஸி நடித்திருப்பார். சாதி இந்து பெண்ணாக ஒரு பட்டியல் பிரிவு பெண் நடித்திருந்தது மலையாள சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதி இந்து பிரிவினர் திரையரங்குகளைச் சூறையாடினார்கள். அங்கிருந்து டேனியலையும் ரோஸியையும் துரத்தியடித்தனர். ஆனால் அந்தத் தாக்குதல் அதோடு நிற்கவில்லை. ரோஸியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
"பி.கே. ரோஸிக்கு நடந்தவற்றைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியடைந்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்தார் ராணி சேது லக்ஷ்மி. 'விகதகுமாரன்' குழுவின் அடுத்த படத்திற்கும் நிதியுதவி அளித்தார்." என மனு பிள்ளை குறிப்பிடுகிறார்.
'விகதகுமாரன்' படம் வெளியான பிறகு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பி.கே. ரோஸி திருவனந்தபுரத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

பட மூலாதாரம், Sneha Jha
பத்திரிகைச் சட்டம்
1926இல் ராணி எடுத்த ஒரு முடிவு கடும் விமர்சனங்களை எழுப்பியது. திருவிதாங்கூரின் செய்தித்தாள்களை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக, 1926 மே 22 அன்று 'பத்திரிகைச் சட்டம்' இயற்றப்பட்டது.
இது முழுக்கமுழுக்க கருத்து சுதந்திரத்தை நசுக்கும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
அந்த சட்டத்தின்படி, "அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல் வெளியாகும் செய்தித்தாள்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டன. பத்திரிக்கை சட்டத்தால் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்ட விஷயங்களை ஒரு செய்தித்தாள் வெளியிடுவது கண்டறியப்பட்டால், அரசாங்கத்தின் உத்தரவின்படி அதன் உரிமம் ரத்து செய்யப்படும்."
"அது நிச்சயமாக ராணி சேது லக்ஷ்மி ஒரு மோசமான முடிவு தான்" என ஒப்புக்கொள்கிறார் மனு பிள்ளை.
"இதற்கு அவர் கூறிய காரணம் என்னவென்றால், 'திருவிதாங்கூரில் உள்ள பத்திரிகைகள் வகுப்புவாதமும், சாதி சார்ந்த பாகுபாடும் கொண்டவையாக இயங்கின' என்பதுதான்.' ஆனால், எப்படி பார்த்தாலும் அது ஒரு சர்வாதிகார நடவடிக்கை." என்கிறார்.
அதேசமயம், தனது ஆட்சிக் காலத்தில், திருவிதாங்கூர் கோயில்களில் இருந்த தேவதாசி முறைக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மனு பிள்ளையின் புத்தகம் மட்டுமல்லாது வேறு சில வரலாற்றுக் குறிப்புகளையும் காண முடிந்தது.
"தேவதாசி முறையின் தீமைகளை உணர்ந்து, திருவிதாங்கூர் அரசு 1930ஆம் ஆண்டு ஒரு அரச பிரகடனத்தின் மூலம் அதை ஒழித்தது." என ஒரு ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Manu Pillai
அதேபோல, எந்த மருமக்கதாயம் முறைப்படி 'ரிஜன்ட்' ராணி என்ற பொறுப்பிற்கு சேது லக்ஷ்மி பாயி வந்தாரோ, அந்த சட்டத்தை நீக்குவதற்கான மசோதாவிற்கும் அவரே ஒப்புதல் அளித்தார்.
"ஏப்ரல் 1925இல் சட்டமன்றம் தாய்வழிச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மசோதாவை நிறைவேற்றியது, சொத்துப் பிரிவினையை அனுமதித்தது. திருவிதாங்கூரில் தந்தைவழி வாரிசுரிமையை (மக்கதாயம்- நாயர் ஒழுங்குமுறை சட்டம்) அறிமுகப்படுத்தியது. இது மகாராணியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது, ஏப்ரல் 13 அன்று அதில் கையெழுத்திட்டார். அவரது இந்தச் செயலுக்கு கேரள பெண்களிடம் இருந்தே ஆதரவு குவிந்தது" என மனு பிள்ளை குறிப்பிடுகிறார்.
அதேசமயம், 'காலனித்துவ சட்ட தலையீடுகள், சமூக சீர்திருத்த இயக்கங்கள், மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார, கலாசார மாற்றங்கள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் போன்றவற்றால் மருமக்கதாயம் அமைப்பு பலவீனமடைந்தது. திருவிதாங்கூர் நாயர் ஒழுங்குமுறை சட்டம் (1925) மற்றும் கேரள கூட்டு குடும்ப அமைப்பு (ஒழிப்பு) சட்டம் (1975) ஆகியவை மருமக்கதயத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.' என ஒரு ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.
"மருமக்கதாயம் அமைப்பு அந்தக் காலத்துப் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அந்தஸ்தை அளித்தாலும், அதில் பல பிற்போக்குத்தனங்களும் இருந்தன. காலனித்துவ ஆட்சியின் வருகையுடனும் அதனுடன் வந்த சட்ட சீர்திருத்தங்களுடனும், இந்த முழு அமைப்பும் முற்றிலுமாக மாறி, பெண்களின் பங்கை அடக்குவதற்கும், தந்தைவழி வாரிசுரிமை தோன்றுவதற்கும் வழி வகுத்தது."
அதிகாரத்திலிருந்து விலகிய பின் சந்தித்த பிரச்னைகள்

பட மூலாதாரம், Manu Pillai
7 நவம்பர் 1931, இளைய ராணி சேது பார்வதி பாயின் மூத்த மகனும் மன்னராக முடிசூட்டப்பட்டவருமான மகாராஜா சித்திர திருநாள் பலராம வர்மாவுக்கு, 18 வயது பூர்த்தியானது. அதற்கு ஒருநாள் முன்பு 'ரிஜன்ட்' ராணி சேது லக்ஷ்மி பாயி தனது பதவியை விட்டு விலகினார்.
"அதன் பிறகான அவரது வாழ்க்கை சோகமாகவே இருந்தது. காரணம், தனக்கு ஒரு மகன் பிறந்தும் கூட சேது லக்ஷ்மி தான் 7 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வார் என்ற முடிவு இளைய ராணி சேது பார்வதியை பெரும் கோபத்தில் ஆழ்த்தியது. அவர் தனது ஒன்று விட்ட சகோதரி சேது லக்ஷ்மியை வெறுக்கத் தொடங்கினார். அந்த வெறுப்பின் தாக்கமே மகாராஜா சித்திர திருநாள் பலராம வர்மாவிடமும் வெளிப்பட்டது"- இதை நம்மால் மனு பிள்ளையின் நூலில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
அதைப் பற்றி மனு பிள்ளையே பிபிசியிடம் பின்வருமாறு விவரிக்கிறார்.
தனது 30களின் பிற்பகுதியில், தனது மருமகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ விரும்பினார் சேது லக்ஷ்மி பாய், ஆனால் அதிகாரத்திலிருந்து விலகியபிறகு அவருடைய சொந்த உறவினர்களால் துன்புறுத்தப்பட்டார்.
அவருக்கு இருந்த அரண்மனையை தனது சொத்து எனக்கூறி, மருமகன் பலராம வர்மா பறித்துக் கொண்டார். அவருடைய ஓவியங்கள் அரண்மனையிலிருந்து நீக்கப்பட்டன. அவரது சேமிப்பிலிருந்து வாங்கப்பட்ட தனிப்பட்ட சொத்துகளும் சுதந்திரத்திற்குப் பிறகு கேரள அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.
அதேபோல, 1949இல் திருவிதாங்கூர் ராஜ்ஜியமும் மகாராஜா சித்திர திருநாள் பலராம வர்மாவின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

பட மூலாதாரம், Manu Pillai
1950களின் இறுதியில் சேது லக்ஷ்மி திருவிதாங்கூரை விட்டு வெளியேறி, பெங்களூரில் குடியேறினார். அதன்பிறகு, அவர் ஒருபோதும் திருவனந்தபுரத்திற்கு திரும்பி வரவில்லை.
29 டிசம்பர், 1975, கணவர் ஸ்ரீ ராம வர்மா காலமான பிறகு, பெரும்பாலான நேரத்தைத் தனிமையில் கழிக்கத் தொடங்கினார் சேது லக்ஷ்மி பாய்.

பட மூலாதாரம், Manu Pillai
1983ஆம் ஆண்டு, இளைய ராணி சேது பார்வதி பாய் இறந்துவிட்டதாக திருவனந்தபுரத்திலிருந்து செய்தி வந்தது.
"ஆனால் அதைக் கேட்ட சேது லக்ஷ்மி பாயி, அமைதியாகவே இருந்தார். ஆழ்ந்த சிந்தனை அவர் முகத்தில் தெரிந்தது. ஒரு பெருமூச்சு விட்டார். வேறு எதுவும் சொல்லவில்லை" என்று சேது லக்ஷ்மி பாயின் பேத்தி ருக்மிணி கூறினார். ('Ivory throne' புத்தகம்)
மூத்த ராணி- இளைய ராணி என்ற பதவிகளில் இரு சிறுமிகளை அமர்த்தி போட்டியாளர்களாக மாற்றிய ஒரு அரச குடும்பத்து கதையின் முடிவு அது.
தன் இறுதிக்காலத்தில் தீராத முதுகு வலியால் அவதிப்பட்ட சேது லக்ஷ்மி. 1985, பிப்ரவரி 22, தனது 89வது வயதில் காலமானார். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை ஆண்ட மகாராணி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல், ஒரு சாதாரண பெண்மணி போலவே அவரது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












