You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தோல் புற்றுநோய் வரும் ஆபத்து யாருக்கு அதிகம்? அறிகுறிகளும் சிகிச்சையும்
- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிரிட்டனை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் கோர்டோன் ராம்சே, சமீபத்தில் தான் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்ததாக கூறியிருந்தார்.
புற்றுநோய் கட்டியை (basal cell carcinoma மெலனோமா அல்லாத புற்றுநோய்) அகற்றிய மருத்துவர்களுக்கு சமூக ஊடகம் வாயிலாக அவர் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பின்னரான தன் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார்.
அவரும் புற்றுநோய் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கருதினார்.
புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 15 லட்சம் பேர் புதிதாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த எண்ணிக்கை 2040ம் ஆண்டுக்குள் சுமார் 50% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோல் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது எப்படி, யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் என்பதை இங்கே அறியலாம்.
தோல் புற்றுநோய்க்கான காரணம்
உலகம் முழுவதும் தோல் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் உள்ளன. சூரியனிலிருந்து வெளிவரும் இத்தகைய கதிர்கள் புற்றுநோய் காரணியாக (carcinogenic) உள்ளன.
டெல்லி எய்ம்ஸில் தோல் மருத்துவராக உள்ள பேராசிரியர் சோமேஷ் குப்தா, "சூரிய ஒளி நேரடியாக படும் வகையிலான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.
பல ஆண்டுகளாக தினந்தோறும் நீண்ட நேரத்துக்கு சூரிய ஒளிக்கு நமது உடல் ஆட்படும்போது, அதனால் சிலர் அதிக ஆபத்துக்கு உள்ளாகின்றனர்." என்றார்.
வயல்கள், திறந்தவெளி பகுதிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது.
சோமேஷ் கூறுகையில், "வெள்ளை நிறமாக இருப்பவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. ஏனெனில், கருப்பு நிறம் சூரிய ஒளியை அதன் வெளிப்புறத்திலேயே உறிஞ்சுவிடும். அதனை உள்ளே அனுமதிக்காது." என்றார்.
குறிப்பிடத்தக்க அளவிலான புற ஊதாக்கதிர்களை நமது தோல் பெறும்போது உடல் செல்கள் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்கின்றன. ஆனால், நமது தோல் அதிக சூரிய ஒளிக்கு ஆட்பட்டால் மெலனினை உற்பத்தி செய்கிறது. இந்த செயல்முறையில், கருமையாதல் மூலம் தோல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது.
எய்ம்ஸ் தோல் மருத்துவ துறையின் தலைவர் மருத்துவர் கௌஷல் வர்மா, "மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பலருக்கும் இந்நோய் ஏற்படுவதற்கு அதிக ஆபத்து உள்ளது. ஏனெனில், அவர்கள் அதிகளவிலான புற ஊதாக் கதிர்களுக்கு ஆட்படுகின்றனர். உடலை கதகதப்பாக வைத்திருக்க எரியும் கரியால் நிரப்பப்பட்ட ஒரு சிறிய பானையை பயன்படுத்துவதால் காஷ்மீரில் ஒருசமயத்தில் தோல் புற்றுநோய் அதிகரித்து வந்தது." என்றார்.
அதாவது, சூரிய ஒளி மட்டுமல்லாது, நெருப்பின் வெப்பத்திற்கு தொடர்ச்சியாக ஆட்படுவோருக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.
தோல் புற்றுநோயின் அறிகுறிகள்
தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க், திறந்த வெளியில் அதிக நேரம் விளையாடியவர், அவரது தோலின் நிறம் வெண்மை.
இதுதவிர, ஓசோன் படலம் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றாக ஆஸ்திரேலியா உள்ளது.
ஓசோன் பாதிப்பு காரணமாக, சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் வடிகட்டப்படாததால், தோலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மிகவும் உணர்திறன் கொண்ட தோல் உடையவர்கள், கண்ணாடி ஜன்னல் வழியே வரும் சூரிய ஒளியால் கூட பாதிக்கப்படும் அபாயம் கொண்டவர்களாக உள்ளனர்.
தோல் புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிவது எளிதானது அல்ல. அதாவது, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் அதற்கான அறிகுறிகளை புறந்தள்ளிவிடுகின்றனர்.
பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே தோல் புற்றுநோய் அதிகமாக ஏற்படுகிறது. எனினும், மருத்துவர் கௌஷல் வர்மா கூறுகையில், நிணநீர் சுரப்பி புற்றுநோயும் (lymphoma) 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுகிறது, இது ஆடையால் மூடப்பட்ட பகுதிகளிலும் ஏற்படுகிறது.
அதிக நேரம் சூரிய ஒளிக்கு நேரடியாக ஆட்படும் உடல் பாகத்தில் சொறி அல்லது காயம் அல்லது அல்சர் ஏற்படும்போது, உடனடியாக மருத்துவரை காண வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களும், கடைசி கட்டத்திலேயே வருகின்றனர், ஏனெனில் பலரும் அதன் ஆரம்ப அறிகுறிகளை கவனிப்பதில்லை.
மருத்துவர் கௌஷல் வர்மா கூறுகையில், "தோலில் கருப்பு அல்லது பழுப்பு (brown) நிறத்தில் புள்ளிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதிக்க வேண்டும். அதை தாமதித்தால், தோல் புற்றுநோய் பரவி, மூக்கு பகுதியில் பரவுவது அல்லது கண்ணுக்கு உள்ளே பரவுவது போன்றவை ஏற்படும்." என தெரிவித்தார்.
தோல் புற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது?
மருத்துவர் கௌஷல் வர்மா கூறுகையில், "மற்ற புற்றுநோய்களை போன்றே, தோல் புற்றுநோயும் வேகமாக பரவும்போது மரணத்தை ஏற்படுத்துகிறது. நோயாளிகள் ஆரம்பகட்டத்திலேயே உடனடியாக மருத்துவரை ஆலோசித்து, சிகிச்சை எடுக்கும்போது, நோயாளியை காப்பாற்றுவது எளிதாக இருக்கிறது." என்றார்.
இரு வகையான தோல் புற்றுநோய்கள் உண்டு. ஒன்று, மெலனோமா. இந்த வகையான புற்றுநோய் அரிதாகவே ஏற்படுகிறது. அதாவது, இந்தியாவில் இவ்வகையான தோல் புற்றுநோய் பெரும்பாலும் ஏற்படுவதில்லை.
மெலனோமா புற்றுநோய் மரணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பொதுவாக ஆரம்பத்திலேயே மெலனோமா புற்றுநோய் கண்டறியப்படும் போது, 90% நோயாளிகள் குணமடைகின்றனர்.
ஆனால், இறுதி கட்டத்தில் கண்டறியும்போது, 90% நோயாளிகளை குணப்படுத்துவது கடினமாகிறது.
மருத்துவர் சோமேஷ் கூறுகையில், "இதுதவிர மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயும் உண்டு. அதில் ஒன்று, பாசல் செல் கார்சினோமா (basal cell carcinoma). இது மிக வேகமாக பரவாது. மற்றொன்று செதில் செல்கள் புற்றுநோய் (squamous cell carcinoma), இது மிக வேகமாக பரவி ஆபத்தை ஏற்படுத்துகிறது." என தெரிவித்தார்.
தோல் புற்றுநோய் சிகிச்சை
நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையின் தோல் மருத்துவர் அஞ்சு ஜா கூறுகையில், "இந்தியாவில் பெரும்பாலும் டைப் 5 மற்றும் டைப் 6 தோல் புற்றுநோய் ஏற்படுகிறது, இது குறைவான ஆபத்து கொண்டது. வெண்மையான தோல் நிறம் கொண்டவர்களுக்கு டைப் 1 மற்றும் டைப் 2 தோல் புற்றுநோய் ஏற்படுகிறது" என்றார்.
அவர் கூறுகையில், "பொதுவாக தோல் புற்றுநோய் அறிகுறிகளில் எந்த வலியோ, எரிச்சலோ, அரிப்போ இருக்காது, அதனால் பலரும் அதை கவனிக்கத் தவறிவிடுவார்கள். சூரிய ஒளி நேரடியாக படக்கூடிய உடலில் எந்த பகுதியிலாவது காயம் ஏற்பட்டு, அதிக காலத்துக்கு அது ஆறாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசிக்க வேண்டும்" என கூறினார்.
ஆரம்பத்திலேயே அது புற்றுநோயா என்பதை கண்டறியும் போது, அதற்கான சிகிச்சை எளிதாக இருக்கிறது. மோஸ் (Mohs) எனப்படும் சிகிச்சை அதற்கு வழங்கப்படுகிறது.
சூரியனின் ஆபத்தான கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் தடவுவது சிறந்த வழியாக பொதுவாக நம்பப்படுகிறது.
உலகம் முழுவதிலும் மெலனோமா புற்றுநோய்களில் 80% சூரியஒளியால் ஏற்படும் வெங்குருவாலேயே (sunburn) ஏற்படுகிறது.
மருத்துவர் அஞ்சு ஜா கூறுகையில், "தோல் புற்றுநோய் பெரும்பாலும் மரணத்தை ஏற்படுத்தாது, பாதிக்கப்பட்ட பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்கான சிறந்த வழி சன்ஸ்கிரீன் உபயோகிப்பதுதான்." என்றார்.
சன்ஸ்கிரீன் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து மட்டும் பாதுகாக்காமல், பல மோசமான நோய்களிலிருந்தும் காக்கிறது. வயதாவதன் விளைவுகள் தோலில் தெரிவதை சற்று தாமதமாக்குகிறது.
ஆனால், சன்ஸ்ஸ்கிரீனை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த சரியான மற்றும் துல்லியமான தகவல்கள் பலருக்கும் தெரிவதில்லை.
மருத்துவர் சோமேஷ் விளக்குகையில், "வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக அதை தடவ வேண்டும், ஏனெனில் சன்ஸ்கிரீன் உடனடியாக வேலை செய்யாது. அத்துடன், ஒருநாளுக்கு 2 அல்லது 3 முறை அதை பயன்படுத்த வேண்டும், ஏனெனில் 4 மணிநேரம் மட்டுமே சன்ஸ்கிரீன் வேலை செய்யும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு