You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: 'மைக்கேல்' - மீண்டும் ஒரு கேங்ஸ்டர் கதை எப்படியிருக்கிறது?
நடிகர்கள் : சந்தீப் கிஷான், கௌதம் வாசுதேவ் மேனன், திவ்யான்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், விஜய் சேதுபதி, அனுசுயா, வருண் சதீஷ், அய்யப்பா ஷர்மா, அணிஷ் குருவில்லா.
தமிழில் இதற்கு முன்னதாக `புரியாத புதிர்` மற்றும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்` ஆகிய திரைப்படங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. கரண் சி புரடெக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு தமிழில் வெளியான `மாநகரம்` திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நடிகர் சந்தீப் கிஷான் தற்போது ஆக்ஷன் கதாநாயகனாக மீண்டும் தமிழில் களமிறங்கியிருக்கிறார்.
இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு, கைதி மற்றும் விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘மைக்கேல்’ - வழக்கமான ஒரு கேங்க்ஸ்டர் கதை
90களின் காலகட்டங்களில் நடக்கும் ஒரு கேங்கஸ்டர் கதைதான் `மைக்கேல்` திரைப்படத்தின் மையக்கரு. கேங்க்ஸ்டராக வேண்டுமென்ற லட்சியத்தோடு மும்பைக்கு வருகிறார் கதாநாயகன் மைக்கேல் (சந்தீப் கிஷான்). அங்கு மும்பையின் மிகப்பெரிய `டான்` ஆக விளங்கும் குருவிற்கு (கௌதம் வாசுதேவ் மேனன்) ஏற்படும் ஆபத்திலிருந்து எதிர்பாராதவிதமாக அவரை காப்பாற்றுகிறார் கதாநாயகன் . அதன் பின் குருவுடன் இணைகிறார் மைக்கேல். குருவின் மொத்தம் நம்பிக்கையையும் பெறும் மைக்கேலிடம் பின்னாளில் சில பொறுப்புகளும் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின் டெல்லிக்கு செல்லும் மைக்கேல் அங்கு குருவின் மகளான கதாநாயகி தீராவுடன் (திவ்யான்ஷா) காதலில் விழுகிறார். அதன் பின் கதாநாயகிக்கு ஏற்படும் சில பிரச்சனைகள், கதாநாயகனின் ஆக்ஷன் காட்சிகள் என படம் நீள்கிறது. இடையில் விஜய் சேதுபதி மற்றும் வரலட்சுமி ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் வருகின்றன. கதாநாயகியை பிரச்சனையில் இருந்து மைக்கேல் காப்பாற்றினாரா? விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் படத்தில் என்ன செய்கிறது? தான் கேங்க்ஸ்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வந்த மைக்கேலின் கனவு நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீது கதையாக இருக்கிறது.
ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் காட்சிகள் நிறைந்து காணப்படும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுப்போக்கு திரைப்படமாக வெளியாகியுள்ளது. குறிப்பாக தெலுங்கு திரைப்பட உலகில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் வர தொடங்கியிருக்கின்றன.
ஊடகங்களின் விமர்சனங்கள்
`படத்தின் கதையும், இயக்கமும் மிகவும் சுமாராக இருப்பதாகவும், படத்தில் வரும் நிறைய வசனங்கள் மிகுந்த அயற்சியை ஏற்படுத்துவதாகவும்` ஏபிபி செய்தி நிறுவனம் விமர்சித்துள்ளது.
‘திரைப்படத்தின் ஒளிப்பதிவும், இசையமைப்பும் திரைக்கதைக்கு மிகுந்த பலம் சேர்த்திருந்தாலும், ஏற்கனவே நாம் பார்த்து பழகிப்போன கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் சாயலில்தான் இந்த திரைப்படம் இருக்கிறது என்றும் அவ்வபோது கே.ஜி.எஃப் திரைப்படத்தை நினைவுக்கொள்ளும் வகையிலும் இதன் திரைக்கதை அமைந்திருக்கிறது என்றும்` ஏபிபி செய்திகள் குறிப்பிட்டுள்ளது.
அதேப்போல் `திரைப்படத்தில் கதாநாயகன் சந்தீப் கிஷானின் நடிப்பு மிகவும் செயற்கைத்தனமாக தெரிகிறது என்று எழுதியுள்ளது இந்தியா ஹெரால்டு செய்தி இணையத்தளம்`.
‘கதாநாயகனான சந்தீப் கிஷான் படத்தில் அரிதாகவே பேசுகிறார் ஆனாலும் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்திற்கு நியாயம் செய்யும் வகையில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்` என்று டைஸ் ஆப் இந்தியா கூறியுள்ளது.
` இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி மிகவும் கிளிஷேவான (cliche) கதையைதான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். ஒரு கேங்கஸ்டர் திரைப்படத்தில் என்ன மாதிரியான அம்சங்கள் நிறைந்திருக்குமோ அது அனைத்தும் இந்த படத்தில் இருக்கிறது. இந்த வகையான சினிமாவை ரசிப்பவர்கள் இந்த திரைப்படத்தை காணலாம்` என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டர் விமர்சனங்கள்:
‘சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு அதிரடி திரைப்படம் மைக்கேல். இதில் கே.ஜி.ஃப் திரைப்படத்தின் சாயல் இருந்தாலும், இத்திரைப்படத்தின் தொழில்நுட்ப குழுவின் உழைப்பும், இசையும் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது. ஆக்ஷன் திரைப்படங்களை விரும்புபவர்கள் இப்படத்தை பார்க்கலாம்` என்று ட்விட்டர் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேப்போல் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் படத்திற்கு பெரிதாக பலம் சேர்க்கவில்லை என்றும், தொழில்நுட்ப ரீதியாக படம் பிரம்மிப்பாக இருந்தாலும் எதிர்ப்பார்த்த அளவிற்கு திரைக்கதை இல்லை என்றும் காதல் காட்சிகள் மிகுந்த அழுப்பை ஏற்படுத்துகிறது என்றும் ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்