You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார் - கமல்ஹாசன், சிரஞ்சீவி அஞ்சலி
மறைந்த இயக்குநர் விஸ்வநாத், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரையுலகில் 51 படங்களை இயக்கியுள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
காலத்தபஸ்வி கே.விஸ்வநாத் என்று அழைக்கப்படும் இவர், உடல்நலக்குறைவால் தனது 92வது வயதில் காலமானார். ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இவர், நேற்று இரவு உயிரிழந்தார்.
இவரின் உடல் ஐதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஸ்வநாத்தின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், சிரஞ்சீவி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஸ்வநாத்தின் சினிமா பயணம்
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள பெத்த புலிவரூ கிராமத்தில் 1930ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி விஸ்வநாத் பிறந்தார். சென்னையில் உள்ள வாஹினி ஸ்டூடியோவில் தனது தந்தையகப் பின்பற்றி சினிமா துறையில் நுழைந்தார் விஸ்வநாத்.
சினிமாவில் ஒலிப்பதிவாளராக(சவுண்ட் ரெக்கார்டிங் ஆர்ட்டிஸ்ட்) தனது பயணத்தைத் தொடங்கினார். சில படங்களில் பணியாற்றிய பின்னர், புகழ்பெற்ற இயக்குநர் அடூர்த்தி சுப்பாராவிடம் உதவி இயக்குநராக இணைந்தார்.
1965ஆம் ஆண்டு இவரின் இயக்கத்தில் வெளியான முதல் படமான ஆத்மஹர்மான் என்ற திரைப்படம் தெலுங்கு சினிமாவின் மாநில விருதான நந்தி விருது பெற்றது. சிறந்த திரைப்படங்களுக்கான விருது பிரிவில் இந்தப் படம் வெண்கல பதக்கம் பெற்றது.
தொடர்ந்து பல படங்களை இவர் இயக்கியிருந்தாலும், 'சங்கராபரணம்' என்ற திரைப்படம் இவருக்கு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது.
அதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து, தெலுங்கு சினிமாவில் எடுத்த 'சாகர சங்கமம்' படம், தமிழில் 'சலங்கை ஒலி' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் மூலம் விஸ்வநாத் தமிழிலும் புகழ் பெற்றார்.
இந்த படத்தில், "பஞ்ச பூதங்களும் முக வடிவாகும், ஆறு காலங்களும் ஆடைகளாகும்" என்ற பாடல் வரிகளுக்கு கமல் பரதநாட்டியம், கதக், கதகளி என ஒரே காட்சியில் ஆடுவார். இந்த காட்சி அமைப்புக்காக கமலுக்கும், இந்த படத்தின் இயக்குநர் விஸ்வநாத்திற்கும் பலர் பாராட்டுகளை தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் கிளாசிக் காட்சிகளில் இதுவும் ஒன்று என சொல்லலாம்.
விஸ்வநாத் இயக்கிய 'சுவாதி முத்யம்' திரைப்படம் 1986ஆம் ஆண்டு 56வது ஆஸ்கர் திரைப்படத் தேர்வுக்கு இந்தியாவால் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டது.
தமிழ் சினிவாவில் விஸ்வநாத்
இயக்குநராக மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிகராகவும் தோன்றி நடித்துள்ளார் கே.விஸ்வநாத்.
குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களிலும் நடித்துள்ளார்.
கமலின் உத்தமவில்லன், ரஜினியின் லிங்கா, விஜய்யின் பகவதி, புதிய கீதை படங்களில் நடித்துள்ளார் விஸ்வநாத். நடிகர் தனுஷுடன் இவர் நடித்த 'யாரடி நீ மோகினி' மற்றும் விக்ரமுடன் நடித்த 'ராஜபாட்டை' படத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறையில் நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். திரையுலகில் இவரின் பங்களிப்புக்காக 2016ஆம் ஆண்டு 'தாதா சாஹேப் பால்கே' விருதையும் இவர் வென்றுள்ளார்.
விஸ்வநாத் மறைவுக்கு இரங்கல்
விஸ்வநாத்தின் மறைவையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில், "விஸ்வநாத்தின் கலைப் படைப்புகள் அவரது காலத்தையும் தாண்டி பேசப்படும், சல்யூட் டு மாஸ்டர்," என்று பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமா நடிகரான சிரஞ்சீவி அவரது டிவிட்டர் பதிவில், "இந்திய சினிமாவுக்கும் தெலுங்கு சினிமாவுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் இது பேரிழப்பு," என்று ட்விட்டர் பதிவில் விஸ்வநாத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவரது மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்