இந்திய வங்கிகள்: கடன் 'ரைட் ஆஃப்' என்பது பாமரர்களின் பணத்தை கொள்ளையடிப்பதா?

இந்திய நிதியமைச்சர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தினேஷ் உப்ரேதி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

*** நூறு/ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரைட் ஆஃப் செய்யப்பட்டது.

இது போன்ற செய்திகள், செய்தித்தாள்கள், டிவி, ஆன்லைன் போர்டல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருகின்றன.

*** என்பதை பார்த்து நீங்கள் இங்கே ஏதோ ஒரு வார்த்தை தவறிவிட்டதாக நினைக்கிறீர்களா?

அது அப்படி இல்லை.

இந்த மூன்று நட்சத்திரங்களின் இடத்தில் ஏதேனும் ஒரு வங்கியின் (அரசு அல்லது தனியார்) பெயரை நிரப்பி, அதை தேடினால் இதற்கான விடை கிடைக்கும்.

கடன் ரைட் ஆஃப் (கணக்கேட்டில் இருந்து நீக்குவது) விவகாரம் சமீப காலத்தில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் ரூ.1.29 லட்சம் கோடி கடனை ரைட் ஆஃப் செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமையின் கீழ் கோரப்பட்ட தகவலில் கனரா வங்கி தெரிவித்துள்ளது. (பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கிகள் தங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, ஒவ்வொரு மூன்றாவது மாதமும் இந்த ரைட் ஆஃப் தொகை பகிரங்கப்படுத்தப்படும்.

இந்த முடிவுகளில்,ரைட் ஆஃப் செய்யப்பட்ட கடன்களின் அளவு குறித்து வங்கிகள் தனது பங்குதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். )

கனரா வங்கியின் இந்தத்தகவல் வெளி வந்ததையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அரசைக் குறிவைக்கத் தொடங்கினர்.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் சமூக வலைதளங்களில் அரசை குறைகூறினர்.அரசு வங்கிகள் கடனை ரைட் ஆஃப் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

கடன் தள்ளுபடி பற்றிய எதிர்க்கட்சிகளின் கூற்றுகள் உண்மையா அல்லது அரசு வேண்டுமென்றே தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகையை மறைக்கிறதா?

கடன் தள்ளுபடியின் இந்த மர்மத்தைத் தீர்க்க, முதலில் வங்கி செயல்முறையை புரிந்துகொள்வோம். வங்கிகள் கடனுக்கு அளிக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.

உண்மையில் வங்கி வணிகமானது வாடிக்கையாளர்களின் பணத்தை டெபாசிட் செய்வதைக் காட்டிலும் கடன் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. இவை இரண்டையும் வங்கி செய்வது அவசியம்.

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு கடன் என்பது சொத்தாக இருக்கிறது. ஏனெனில் அவை வங்கிக்கு வட்டிவருமானத்தை தருகின்றன. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடனாக கொடுக்கும் தொகையை, வட்டியுடன் சேர்த்து வசூலிக்கின்றன. மறுபுறம், வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் வங்கியின் பொறுப்பு. வங்கிகள் இந்த தொகையை கடன் வழங்க பயன்படுத்துகின்றன. ஆனால் வங்கிகள் அதை வாடிக்கையாளருக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.

ரைட் ஆஃப் என்றால் என்ன?

ரைட் ஆஃப் செய்வது என்பது கடன் தள்ளுபடி என்று அர்த்தமில்லை.

பட மூலாதாரம், Getty Images

கடன் பெற்றவர்கள், அதை திருப்பிச்செலுத்தும் நிலைமையில் இருந்தாலும், வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தவில்லையென்றால் அவர்கள் வில்ஃபுல் டிஃபால்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து கடன் தொகையை திரும்பப்பெறும் நம்பிக்கை முற்றிலும் முடிவுக்கு வந்ததும், வங்கி இவர்களுக்கு கொடுத்த கடனை வாரா கடன் என்று வகைப்படுத்தி அதை ரைட் ஆஃப் செய்கிறது.

ஆனால், ரைட் ஆஃப் செய்வது என்பது கடன் தள்ளுபடி என்று அர்த்தமில்லை. வங்கிகள் தங்கள் கணக்கேட்டை தெளிவாக வைத்திருக்க மட்டுமே இதைச் செய்கின்றன. அதற்கும் ஒரு செயல்முறை உண்டு.

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி வங்கிகள் முதலில் இதுபோன்ற கடனை, வாரா கடனாக (NPA) அறிவிக்கிறது. அதை திரும்பப் பெறமுடியாமல் போகும்போது அது ரைட் ஆஃப் செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை எதிர்கொள்ள சட்டத்தையும் அரசு உருவாக்கியுள்ளது. அதன் கீழ் தப்பியோடிய தொழிலதிபர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் சட்டபூர்வ நடைமுறையை கடைப்பிடித்து அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடன் வசூலிக்கப்படுகிறது.

NPA என்றால் என்ன?

NPA (வாரா கடன்) வை புரிந்துகொள்வதற்கு முன், வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, வங்கியில் ரூ.100 டெபாசிட் இருந்தால், அதில் ரூ.4.5 (சிஆர்ஆர் தற்போது 4.5 சதவிகிதம்) ரிசர்வ் வங்கியிடம் வைக்கப்பட்டிருக்கும். CRR என்பது பண இருப்பு விகிதத்தைக் குறிக்கிறது.

18 ரூபாய் (தற்போது SLR 18 சதவிகிதம்) பத்திரங்கள் அல்லது தங்க வடிவில் வைத்திருக்க வேண்டும். SLR என்பது Statutory Liquidity Ratio – கட்டாய பணபுழக்க விகிதம்.

ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், Getty Images

மீதமுள்ள 77 ரூபாய் 50 பைசாவை வங்கி கடனாக தரலாம். அதிலிருந்து பெறப்படும் வட்டியில் இருந்து, அது தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகைக்கான வட்டியை அளிக்கிறது. மீதமுள்ள பகுதி வங்கியின் லாபமாகும்.

வங்கிகளுக்கு, ஏதேனும் சொத்து (கள்) அதாவது கடனில் இருந்து வட்டி வருமானம் கிடைப்பது நின்றுவிட்டால் அது NPA ஆக கருதப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.

வங்கியால் கடனாகக் கொடுக்கப்பட்ட தொகையின் அசல் அல்லது வட்டியின் தவணை 90 நாட்களுக்குத் திரும்ப வரவில்லை என்றால், வங்கிகள் அந்தக் கடனை NPA வில் வைக்க வேண்டும்.

NPA வாக இருப்பதற்கான விதிகள் என்ன

ஒரு கடன் கணக்கு வருங்காலத்தில் NPA ஆகிவிடுமா என்பதைக் கண்டறிய ரிசர்வ் வங்கி விதிகளை உருவாக்கியுள்ளது. இதன் கீழ், வங்கிகள் தங்கள் கடன் கணக்குகளை சிறப்பு குறிப்பு கணக்குகளாக (SMA) வைக்க வேண்டும்.

ஒரு கடன் கணக்கை NPA வாக அறிவித்த பிறகு, வங்கி அந்த NPA கணக்கை 'சப் ஸ்டாண்டர்ட் சொத்துகள்', 'சந்தேகத்திற்குரிய சொத்துகள்'(Doubtful asset) மற்றும் 'இழப்பு சொத்துக்கள்'(Loss asset) என மூன்று வகைகளாக பிரிக்க வேண்டும்.

கடன் கணக்கு, ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு NPA பிரிவில் இருந்தால், அது 'சப் ஸ்டாண்டர்ட் அசெட்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. 'சப் ஸ்டாண்டர்ட் அசெட்ஸ்' பிரிவில் அது ஓராண்டு இருந்தால் அது 'சந்தேகத்திற்குரிய சொத்துகள்' என்று அழைக்கப்படுகிறது. கடனை இனி திரும்பப் பெற முடியாது என்று வங்கி கருதும் போது, அது 'இழப்பு சொத்துக்கள்'என வகைப்படுத்தப்படுகிறது.

"பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி NPA விதிகளை கடுமையாக்கி, சுமார் அரை டஜன் விதிகளை நீக்கியது. இப்போது கடனை திருப்பிச்செலுத்தாத விவகாரத்தில் 180 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண்பது வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் அந்த கணக்கை, திவால் செயல்முறை மூலம் மேலே கொண்டுசெல்ல வேண்டும்,” என்று வங்கி நிபுணர் காஜல் ஜெயின் தெரிவித்தார்.

"புதிய விதியின்படி, 2,000 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் கடனை திருப்பிச் செலுத்தாத சந்தர்ப்பங்களில் வங்கி அதிகாரிகள் 180 நாட்களுக்குள் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இல்லையெனில், அதை திவால் செயல்முறைக்கு கொண்டு செல்ல வேண்டும்,"என்று அவர் குறிப்பிட்டார்.

"வங்கிகளில் கடனை திருப்பி செலுத்தாத விவகாரங்கள் அதிகரித்து வருவது ஓரளவிற்கு உண்மைதான். ஆனால் அதற்கான தீர்வுகாண வங்கிகளுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே வங்கிகள் இந்த என்பிஏக்களை ’நஷ்டமாக’ காட்டித்தான் ஆகவேண்டும். வங்கிகளின் இந்தக் கடன் மூழ்கிவிட்டது, இனி திரும்பப் பெறவே முடியாது என்பது இதற்கு அர்த்தமல்ல," என்று பொருளாதார வல்லுநர் சுனில் சின்ஹா கூறினார்.

கடன் தள்ளுபடி என்றால் என்ன?

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

ஒருவர் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையென்றால், கடனைத் திருப்பிச் செலுத்த அவருக்கு வழி இல்லையென்றால், அத்தகையவர்களின் கடன்கள் அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் எல்லோருமே இந்த தள்ளுபடி வரம்பிற்குள் வருவதில்லை.

இந்த வகை கடன் தள்ளுபடி பொதுவாக விவசாயிகளுக்கு செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக இதுபோன்ற கடன் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவதை பார்க்க முடிகிறது.

மோசமான விளைச்சல், பருவமழை அல்லது வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. இந்த கடன் தள்ளுபடி திட்டத்தில், பெரிய வணிக நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதில்லை.

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடனை ரைட் ஆஃப் செய்வதைவிட, அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தை விரும்புகின்றன என்று பொருளாதார விவகார நிபுணர் சுதீப் பந்தோபாத்யாய் கூறுகிறார்.

“ரைட் ஆஃப் செய்வதை விட வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி சிறந்தது. இதற்குக் காரணம், வங்கி தனது முழு கடன் தொகையையும் அரசிடமிருந்து திரும்பப் பெறுகிறது. கடன் வாங்கியவரும் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஏழை விவசாயிகள்) கடன் சுமையில் இருந்து விடுபடுகிறார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“விவசாயிகளின் ஆயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக அரசு கூறினால், இந்த 1000 ரூபாயை அரசு வங்கிக்கு வழங்கும் என்று அர்த்தம். அதேசமயம், ரைட் ஆஃப் விஷயத்தில் வங்கிகள் வாராக் கடன் என்று அதை வகைப்படுத்த வேண்டும். நிச்சயமாக இது அவர்களின் லாபத்தை பாதிக்கிறது."என்று சுதீப் தெரிவித்தார். ரைட்ஆஃப் மற்றும் வேவ்ஆஃப் கதை பெரும்பாலும் புள்ளிவிவரங்களின் வித்தைதான்.

ஒருவேளை இதனால்தான்’புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது, ஆனால் அவை முழு உண்மையையும் தெரிவிப்பதில்லை’ என சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

காணொளிக் குறிப்பு, ஹவுசிங் லோன், பைக் லோன் வாங்குவதில் என்ன சிக்கல்? அதற்கு மாற்று வழி என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: