பிக்பாஸ் சீசன் 6 தமிழ்: அரசியல் - சமூக, பாலின சார்புகளை தொடர்ந்து கேலி செய்கிறாரா அசீம்?

அசீம்

பட மூலாதாரம், Vijay Television / Bigg Boss Tamil

பிக்பாஸ் தமிழ் சீசன் 6-ல் பெரும்பாலான எபிசோடுகளில் கமல்ஹாசனிடமிருந்து அறிவுரை பெறும் போட்டியாளர் அசீம். சக போட்டியாளர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் அளவுக்கு “சபை நாகரிகமற்ற” வார்த்தைகளையும், ஒருவரின் பாலின, சமூக-அரசியல் சார்புகளை இழிவாக பேசுவதையும் அசீம் வாடிக்கையாக கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு கமல்ஹாசன் ‘ரெட்-கார்டு’ கொடுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற குரலும் பார்வையாளர்களிடமிருந்து வெளிப்படுகிறது.

டிச. 23 அன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், சக போட்டியாளர் விக்ரமனை “ஏன் இங்கு வந்து கட்டப் பஞ்சாயத்து செய்கிறீர்கள்? கட்டப் பஞ்சாயத்து செய்து பழக்கமா? நான் சொல்வது புரிகிறதா?” என்று கேட்டதுதான் அசீமின் சமீபத்திய சர்ச்சை பேச்சாக உள்ளது.

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் கடந்த 75 நாட்களில் தங்களின் திறமை, தங்களின் விளையாட்டுப் போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 1-10 வரையில் தங்களுக்குத் தாங்களே ரேங்க் அளித்துக்கொள்ள வேண்டும். இந்த போட்டியில், முதலிடத்தைக் குறிக்கும் ‘1’ என்ற எண்ணில் அசீம் நின்றுகொண்டார். விக்ரமன் முதலிடத்தில் தான் நிற்க விரும்புவதாக கூறி, தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார். 

'கட்டப் பஞ்சாயத்து' சர்ச்சை

அப்போது, நிகழ்ச்சியில் முன்பு நடந்த ஓர் நிகழ்வை குறிப்பிட்டு அசீமுக்கு எதிராக விக்ரமன் தன் வாதத்தைக் கூறவே, அசீம் “பிக் பாஸ் வீட்டில் வந்து ஏன் கட்டப் பஞ்சாயத்து செய்கிறீர்கள்? கட்டப் பஞ்சாயத்து செய்து பழக்கமா? நான் சொல்வது புரிகிறதா? ஏன் நடந்துகொண்டே நெறியாளர் போன்று பேசுகிறீர்கள். நான் உங்களைவிட நன்றாகவே நடந்துகொண்டு பேசுவேன்” எனக் கூறினார். 

இதனால், கோபமடைந்த விக்ரமன், “விளையாட்டுக்காக ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவமானப்படுத்துவதும் கொச்சைப்படுத்துவதும் கூடாது. நான் கட்டப் பஞ்சாயத்து செய்தேன் என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுங்கள்” என்று கூறினார்.

இருவரின் வாதங்களுக்கு இடையில் ஷிவின் விக்ரமனுக்காக வாதிடவே, “வாடா, டேய்” என, ஷிவினை நோக்கி அசீம் ஆவேசமாக கூறினார்.

இப்படி அந்த நிகழ்வால் அன்றைய எபிசோடு பரபரப்பாக மாறியது. 

விக்ரமன்

பட மூலாதாரம், Vijay Television / Bigg Boss Tamil

கண்டித்த கமல்

இதனை சமூக வலைத்தளங்களிலும் பெரும்பாலானோர் விமர்சித்தனர். விக்ரமனின் அரசியல் சார்பை மறைமுகமாக குறிக்கும் விதமாகவே, அவர் “கட்டப்பஞ்சாயத்து செய்வதாக” அசீம் கூறியதாக பலரும் விமர்சித்தனர். அவருடைய பேச்சுகள் விஷமத்தனமாக இருப்பதாகவும் மருத்துவரும் சின்னத்திரை கலைஞருமான ஷர்மிளா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன், இதனை கண்டிக்க வேண்டும் எனவும், அசீமுக்கு ‘ரெட் கார்டு’ கொடுக்க வேண்டும் எனவும் பலரும் பதிவிட்டனர். அதேசமயம், அசீம் நிகழ்ச்சியில் உண்மையாக நடந்துகொள்வதாக அவருக்கு ஆதரவாகவும் பலரும் பதிவிட்டனர்.

இதற்கு அடுத்த நாளான டிச. 24 நிகழ்ச்சியில், கமல்ஹாசன் விக்ரமன் குறித்து அசீம் பேசியதைக் கண்டிக்கும் வகையில் பேசினார். 

அனைத்துப் போட்டியாளர்களிடமும் அசீம் போன்ற ஒரு நபர் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே சந்தித்தால் எப்படி நடந்துகொள்வீர்கள் என்று கேள்வியெழுப்பினார் கமல். அதற்கு போட்டியாளர்கள் அனைவரும், அந்த நபரிடமிருந்து விலகியே இருப்போம் என்றே கூறினர்.

பின்னர், அசீமிடம், “கட்டப்பஞ்சாயத்து குறித்து உங்களின் புரிதல் என்ன? நிகழ்ச்சியில் ஏற்கெனவே நடந்த ஒன்றை உதாரணத்திற்காக விக்ரமன் குறிப்பிட்டு சொன்னது எப்படி கட்டப்பஞ்சாயத்து ஆகும்? நான் உங்களைக் கண்டிக்கிறேன், அவ்வளவுதான். இதற்கு மேல் உங்களிடம் வாதாட எனக்குப் பொறுமையில்லை. 

ஒருவரை அவமரியாதை செய்வதற்கு முன்னால் இப்படி ஒன்றை நம்மை நோக்கி செய்தால் என்ன செய்வதென்று நீங்கள் யோசிக்கவே இல்லையோ என தோன்றுகிறது. மற்றவர்கள் அவமானப்படுகின்றனர், ஆனால் நீங்கள் துடைத்துவிட்டு சென்றுவிடுகிறீர்கள். ரௌத்திரம் பழக வேண்டுமே தவிர, அதனை அன்றாட பயிற்சியாக வைத்துக்கொள்ளக் கூடாது” எனத் தெரிவித்தார். 

கமல்ஹாசன்

பட மூலாதாரம், Vijay Television / Bigg Boss Tamil

தொடரும் உருவ கேலி

இதற்கு, “நான் வெளியில் அமைதியாகவே இருப்பேன், இவ்வளவு கோபப்பட மாட்டேன். பிக் பாஸ் வீட்டியில் போட்டியைக் கருதியே நான் கோபம் கொள்கிறேன், இங்கு வந்துதான் கோபம் கொள்கிறேன்” என்று அசீம் கூறினார். 

மேலும், ‘கட்டப் பஞ்சாயத்து’ என விக்ரமனை கூறியது அவரை தனிப்பட்ட முறையில் கூறியதுதான் என்றும், அவர் சார்ந்த ‘சமூகத்தைக்’ குறிப்பிடவில்லையென்றும் கூறினார்.

உடனேயே கமல், அதனை ‘சமூகம்’ என்று குறிப்பிடக்கூடாது, “அவரின் அரசியல் சார்பை சொல்லவில்லை” எனக்கூற வேண்டும் எனத் திருத்தினார்.

பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் தொழில்களை குறிப்பிட்டு கேலியாக பேசுவதையும் அசீம் வழக்கமாகக் கொண்டுள்ளார். விக்ரமனை ‘நெறியாளர் போன்று நடக்காதீர்கள்’, ‘இங்கு வந்து அரசியல் செய்யாதீர்கள்’ எனப் பேசியுள்ளார். முன்னர் ஊடக நெறியாளரான விக்ரமன் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் உள்ளதை குறிக்கும் விதமாக அசீம் இப்படி பேசியுள்ளார். அதேபோன்று, ராப் பாடகரான அசீமை ‘சுத்தி சுத்தி வந்து இங்க வந்து ராப் பாடாதீங்க” என தெரிவித்திருக்கிறார்.

மேலும், அசீம் சக போட்டியாளரான ஷிவினின் (திருநங்கை) பாலினத்தை கேலி செய்யும் விதமான உடல்மொழியையும், அவரை உருவ கேலியையும் செய்த சம்பவங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றது. 

ஒவ்வொரு முறை விமர்சனத்திற்குள்ளாகும் போதும் வார இறுதியில் கமல்ஹாசன் அறிவுரை கொடுப்பதும் பதிலுக்கு அசீம் ‘மன்னிப்பு’ கேட்பதும் தொடர்ந்துவருகிறது.

இதனிடையே, பிக் பாஸ் வீட்டின் மற்ற போட்டியாளர்களும் நகைச்சுவை என்ற பெயரில் உருவக்கேலி செய்வதாகவும் விமர்சனம் உள்ளது. 

காணொளிக் குறிப்பு, சென்னை சகோதரர்களின் கிறிஸ்துமஸ் காஸ்பெல் - வைரல் பாடல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: