"என் அம்மாவுக்கு முன்பே எனக்கு மாதவிடாய் நின்றது"- கவலையில் ஓர் சமூகம்

மாதவிடாய் பெண்கள்

நீங்கள் உங்கள் பதின்பருவ வயதில் இருக்கிறீர்கள் அல்லது இருபது வயதுகளில் இருக்கிறீர்கள் என்றும், அப்போது ஏற்கெனவே உங்களுக்கு மொனோபாஸ் நிலை நின்று விட்டது என்றும் கற்பனை செய்து பாருங்கள். இளமை காலம் எப்படியெல்லாம் இன்பமானதாக இருக்கும் என்று நினைத்திருந்த எம்மா, சோ-மியாட் மற்றும் எல்ஸ்பெத் ஆகியோருக்கு அவர்கள் கற்பனை செய்தபடி உண்மையில் இல்லை.

அவர்களுக்கு இருந்த நோய் அவர்கள் மட்டுமே பயணிக்கும் ஒரு தனிமையான பயணத்தின் தொடக்கமாக இருந்தது.

2013ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் ஒரு காலை நேரம். எம்மா டெலானியின் மருத்துவ அறிக்கை ஃபைலின் ஒவ்வொரு தாளையும் கைகளால் புரட்டி படித்தபடியே மருத்துவ ஆலோசகர், எம்மாவிடம் உங்களுக்கு இந்த 25ஆவது வயதில் மெனோபாஸ் நின்று விட்டது என்று கூறினார்.

மருத்துவமனையின் இரும்பு நாற்காலியில் எம்மா அசைவின்றி உட்கார்ந்திருந்தார். மருத்துவ ஆலோசகர் என்ன சொன்னார் என புரிந்து கொள்ள முடியாமல் அவரது மனம் உள்ளும், புறமும் அலைபாய்ந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மாத்திரை ஒன்றை அவர் நிறுத்தி விட்டார். அதில் இருந்து அவருக்கு மாதம் தோறும் வரும் மாதவிடாய் சுழற்சி வரவில்லை. அநேகமாக ஒருபோதும் அவ்வாறு நேராது. அவரால் இயற்கையிலேயே கருத்தரிக்க முடியும் என்பது சாத்தியமில்லை.

"எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் குழந்தைகள் பெற முடியாது என சாவியை நான் தொலைத்து விட்டேன் என்பது போல அவர் என்னிடம் சொன்னார்.

40 வயதுக்கு உள்ளேயே மெனோபாஸ் நிலை நேரிடுவதைக் குறிக்கும் முதன்மை கருப்பை பற்றாக்குறை (POI) என்று அழைக்கப்படும் நிலையால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழுவில் ஒருவராக எம்மாவும் இடம் பெற்றிருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் இது எதனால் ஏற்பட்டது என்பதே தெரியாது. POI உள்ள பெண்கள் தங்கள் 50 வயது வரை மாதவிடாய் சுழற்சியை அனுபவிக்கலாம்.

இங்கிலாந்தில் 100 பெண்களில் ஒருவர் இந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிபுணர்கள் அதை விட பொதுவானதாக இருக்கலாம் என்றும் நம்புகிறார்கள்.ஆனால் இது இன்னும் விவாதிக்கப்படாத ஒரு பிரச்னையாகவே இருக்கிறது.

"இளைய வயதினரிடையே மாதவிடாய் நிறுத்தத்தைப் பற்றி போதுமான உரையாடல்கள் இல்லை," என்கிறார் மாதவிடாய் சிகிச்சையில் சிறப்பு சிகிச்சையளிக்கும் டிக்டோக் நட்சத்திரமான டாக்டர் நிகாத் ஆரிஃப். எம்மாவைப் போன்று சிலருக்கு ஏன் அவர்களின் கருமுட்டைகள் செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், POI என்பது தன்னியக்க நோயெதிர்ப்பு நிலைகள், குரோமோசோமால் கோளாறுகள் அல்லது கருப்பை அல்லது கருமுட்டையில் அறுவை சிகிச்சை மூலம் ஏற்படலாம்.

உடல்ரீதியான விளைவுகளைப் போலவே, அத்தகைய நோயறிதலின் உளவியல் தாக்கமும் பேரழிவை ஏற்படுத்தும். எம்மாவிடம் அவரது மருத்துவர் இந்த தகவலைச் சொன்னதும், அவர் தமது காரின் உள்ளே அமர்ந்து ஒருமணி நேரமாக அழுது கொண்டிருந்தார்.

மாதவிடாய் பெண்கள்

அவர் பணியாற்றிய மான்செஸ்டர் சலூன் நிலையத்திற்கு வரும் வயதான பெண்மணிகளிடம் இருந்து கேட்டதைத் தவிர எம்மாவுக்கு மெனோபாஸ் பற்றி எதுவும் தெரியாது. தன் இரண்டு சொந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது -என அவள் கற்பனை செய்த எதிர்காலம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது.

அடுத்த சிலமாதங்களில் எம்மா ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கான (HRT) மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். தன்னுடைய கருமுட்டைகள் செயல்புரிவதை நிறுத்தி விட்டன என அவர் அறிந்து கொண்டார். மாதவிடாய் சுழற்சியை நிர்வகிக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களை அவரது உடல் போதுமான அளவு உற்பத்தி செய்யவில்லை. இந்த ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளாக அவரது உடல்நிலையை பாதித்தது.

அவர் அனுபவிக்கும் குழப்பம் அவளுடைய ஆளுமையின் ஒரு பகுதியாக இருந்தில்லை என்பதை உணர்ந்தார். அவரது உடலுக்குள் பட்டாசு வெடித்தது போல் சூடான வெப்பம் பரவியதை உணர்ந்தார்.

ஹேர் ட்ரையர்கள் எனப்படும் முடி உலர்த்தியுடன் நீண்ட மணிநேரம் இருந்தபோது கூட இது போல அவருக்கு ஏற்பட்டதில்லை. தூக்கமின்மை நோயால் ஏற்படும் தூக்கமின்மை போல இல்லாமல் ஹார்மோன் சமநிலையின் மற்றொரு அறிகுறியாக அவருக்கு தூக்கமின்மை நேரிட்டது.

இவரது தாய் 40 வயதின் தொடக்கத்தில் இருந்ததாலும் அவர் இன்னும் மெனோபாஸ் நிலையை அடையவில்லை. இவருடைய தோழிகள் வாழ்க்கையில் செட்டில் ஆகி குழந்தைகளைப் பெற்றிருத்தனர். "யாரும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று உணர்ந்தேன்," என்று எம்மா வேதனைபடக் கூறுகிறார்.

எம்மா தன்னைத்தானே வேலையில் அதிகம் ஈடுபடுத்திக் கொண்டார். தனது நிலை குறித்து ஆலோசிப்பதை தவிர்த்தார். அவர் தனது மாலைபொழுதுகளை இரவில் நீண்ட நேரம் வெளியில் சுற்றுவது, மற்றும் வழக்கமான டேட்டிங்கள் மூலம் ஈடுபடுத்திக் கொண்டார். தன்னுடைய தோழிகள், இணையர்களுடன் மற்றும் குழந்தைகளுடன் இருப்பது போன்று, தன்னுடைய நிலைக்கு மாறாக இருக்க விரும்பினார்.

"மது மற்றும் பாலியல் உறவில் என் உடலுக்கு எனக்கு நானே தீங்கிழைத்தேன். அதைப் பற்றி ஒருவரிடம் எவ்வளவு பேச வேண்டும் என்பதை நான் உணரவில்லை," என்று அவர் தனது இயலாமையை விளக்குகிறார்.

பெரும்பாலான பெண்களுக்கு மற்ற தீவிர நிலைமைகளுக்கு சிகிச்சையைத் தொடங்கிய பின்னரே மெனோபாஸ் நோயறிதல் ஏற்படுகிறது. 

மாதவிடாய் பெண்கள்

லண்டனில் கிராபிக் டிசைன் படிக்கும் மாணவி சோ-மியாட் நோயி என்பவருக்கு கேன்சர் சிகிச்சையின் போது எதிர்பாராத விளைவாக மெனோபாஸ் வந்து விட்டது.

23 வயதான அவருக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாம் நிலை குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவருக்கு இடுப்பு பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்ட போது அது அவரது கருப்பையை சேதப்படுத்தியது, ஆனால் அந்த நேரத்தில், இதன் அர்த்தம் என்னவென்று அவருக்குப் புரியவில்லை.

"அவர்கள் (மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்) எனது புற்றுநோய் மற்றும் எனது புற்றுநோய் சிகிச்சையில் மட்டுமே கவனம் செலுத்தினர்... மாதவிடாய் நிறுத்தம் என்ன என்பதை யாரும் என்னிடம் குறிப்பிட்டதாக எனக்கு நினைவில்லை," என்று கூறுகிறார்.

அவருக்கு காதுகளில் ஒலி, பதட்டம், சோர்வு ஆகிய அறிகுறிகள் திடீரென ஏற்பட்டன. கடுமையாக இருந்தன.சோ-மியாட் வளரும்போது மாதவிடாய், கருவுறுதல் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் பற்றிய உரையாடல்கள் பொதுவாக இல்லை. அதனால் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று அவர் கற்றுக்கொள்ளவில்லை.

"ஒவ்வொன்றும் எனக்கு நடந்தது. நான் எப்போதும் வயதானவர்களுடன் பழகினேன். நான் என் வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தவிர்த்துவிட்டதாக உணர்ந்தேன்."

பெண்களின் சிலவகையான கேன்சர் சிகிச்சைக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை பொருத்தமாக இருக்காது, சோ-மியாட்டுக்கு அது பாதுகாப்பான ஒரு வடிவமாக இருந்தது. மேலும் இந்த சிகிச்சையை எடுக்கத் தொடங்கியவுடன் அவரது அறிகுறிகள் மேம்பட்டன.

அப்போதில் இருந்து அவர், அனைத்திலும் தெளிவு பெற்றார். அதே போல ஹார்மோன் மாற்று சிகிச்சை மாத்திரைகளைத் தொடர்ந்தார். அவர் தனக்கு உதவுவதற்காக நடைபயிற்சி மற்றும் சூடான பானங்களைத் தவிர்ப்பது போன்ற மருத்துவம் அல்லாத விஷயங்களைச் செய்கிறார்.ஆனால் இந்தச் செயல்பாட்டில் முன்னதாகவே தனது அறிகுறிகளை நிர்வகிப்பது குறித்து தனக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

"அது பிரச்னையாக இருக்கக்கூடாது," என்று அவர் கூறுகிறார். 

மாதவிடாய் பெண்கள்

இதே போன்ற அனுபவங்களைக் கொண்ட பெண்களிடம் இருந்து வந்த தகவல்களால் டாக்டர் நிகாத் ஆரிஃபின் சமூக வலைதளக் கணக்குகளின் உள் பெட்டிகள் நிரம்பியிருக்கின்றன. உடல்நலன் சிகிச்சை நிபுணர்களிடையே மெனோபாஸ் கவனிப்பின் நுணுக்கங்களைப் பற்றிய சிறந்த புரிதலுக்கு அவர் அழைப்பு விடுக்கிறார். அனைத்து வயது பெண்களும் இதனை பற்றி பேசுவதற்கு முன் வரவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

"தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் உடனிருக்கும் பெண்களிடம் பேசுங்கள்... உங்கள் அம்மாவிடம் , உங்கள் பாட்டி, உங்கள் அத்தைகள், உங்கள் உறவினர்கள், உங்கள் சிறந்த துணையிடம் அந்த உரையாடலை நடத்துங்கள். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை - அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்," என்கிறார்.

அறிகுறிகளைப் பற்றிய அதிக விழிப்புணர்வு காரணமாக அதிகமான பெண்கள் இப்போது POI நோயால் கண்டறியப்படுகிறார்கள், ஆனால் நோயறிதலைப் பெற இன்னும் நீண்ட நேரம் ஆகலாம். ஆனால், இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பெண்களின் எலும்பு, இதயம், மன நலத்தில் POI நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார் டாக்டர் ஆரிப்.

"சில நோயாளிகள் தங்களுக்கு தாங்களே இது குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் உள்ளனர்," என்றார். "அவர்கள் குழந்தைகளைப் பெற விரும்பியிருக்கலாம். அவர்கள் செய்ய முடியும் என்று அவர்கள் நினைத்த வாழ்க்கைத் தேர்வுகளை அது சிதைக்கிறது," என்றார்.

பாலியல் உறவு விருப்பத்தில் இழப்பு மற்றும் வலியுடன் கூடிய பாலியல் உறவு போன்ற-POI-யின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து அரிதாகவே விவாதிக்கப்படுவதை அவருடைய அறுவை சிகிச்சையில் டாக்டர் ஆரிப் கண்டிருக்கிறார். 

மாதவிடாய் பெண்கள்

23 வயதாகும் எல்ஸ்பெத் வில்சன் இவை அத்தனையையும் நன்றாக புரிந்திருக்கிறார். தனது 15 ஆவது வயதில் அவருக்கு POI இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாலியல் உறவில் உள்ள சிரமம் அவரது டேட்டிங் வாழ்க்கை முழுவதும் ஒரு தடையாக இருந்தது.

"நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த அவருடன் உறவில் இருப்பது மிகவும் கடினம், அதனுடன் உங்கள் உடல் ஒத்துழைக்காது. சில விஷயங்கள் சங்கடமானதாக இருக்கலாம்.," என்றார் அவர்.

"இது ஒரு பிரச்னையாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் ஒருபோதும் கூறவில்லை.இதுதான் எனக்கு தடையாக இருக்கிறது."

எல்ஸ்பெத் பல்கலைக்கழக பட்டம் பெற்றவுடன் நியூகேஸில் சந்தை ஆய்வாளராக தனது முதல் பணியைத் தொடங்கினார். இந்த சூழ்நிலையில் தனக்கு ஆதரவாக இருக்கும் தனது நிறுவனத்தின் உரிமையாளரை அவர் பாராட்டினாலும், POI காரணமாக இந்த பெரிய மாற்றத்தை வழிநடத்துவது சிக்கலாக இருக்கும்.

அவரைப் போன்ற சூழல் கொண்ட பெண்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவுடன் அவர் வசதியாக இருப்பதாக உணர்கிறார். அவர்களின் குழு அரட்டையில், எதுவும் வரம்பற்றதாக இருக்கிறது.

"உங்களுக்கு வெட்கமே இல்லாத வகையில் அதைப் பற்றிப் பேசும் திறன் இருந்தால், இந்த வழி சுலபமானது. அந்தக் கேள்விகளைக் கேட்கவும், வெளிக்கொணரவும் அந்த இடத்தைப் பெறுவதையும் அது உறுதியளிக்கிறது.

புற்றுநோயால் தூண்டப்பட்ட மெனோபாஸ் நின்று விட்ட இளம் பெண்களைக் கொண்ட இணைய வழி ஆதரவு குழுவுடன் சோ-மியாட் இணைந்திருக்கிறார். "நான் அங்கீகரிக்கப்பட்டதாக உணர்ந்தேன்," என்கிறார் அவர்.

எம்மாவும் காலங்காலமாக கற்றுக்கொண்ட பாடம் இது. பல வருடங்கள் கழித்து, அவரது நோயறிதலின் வலியைத் தடுக்க, எம்மா தனது அனுபவங்களைப் பற்றி இன்னும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார். அவர் ஒரு ஆலோசகரிடம் தன் உணர்வுகளை விளக்க ஆரம்பித்தார்.அவர் மீண்டும் தன்னைப் போலவே உணர உதவியது.

"எனது நோயறிதலைப் பொருட்படுத்தாமல், நான் இன்னும் நானாகவே இருந்தேன்... எனது நோயறிதலை விட நான் என்ற உணர்வு அதிகமாக இருந்தது. அதுதான் கற்க வேண்டிய ஒரு பெரிய பாடம்."

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு இணையரை சந்தித்தார், அவருடைய நிலையைப் புரிந்துகொள்கிறார், இப்போது அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில், அவர் மொனோபஸ் ஹேஷ்டேக்குகளைப் பின்தொடர்ந்தார் மற்றும் POI உள்ள பெண்களுக்கு தகவல் மற்றும் ஆதரவை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட டெய்சி நெட்வொர்க்கைக் கண்டறிந்தார், முதல் முறையாக, அவர் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட மற்றவர்களிடம் பேசினார்.

இப்போது 34 வயதாகும் அவர், தனது எதிர்காலத்தில் குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்.

ஒவ்வொரு முறையும் அவர் சலூனுக்கு வரும்போது, "மெனோபாஸ் ஒரு விஷயம்" என்று சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட வாசகம் கொண்ட கருப்பு டி-ஷர்ட் அணிந்தபடி வருகிறார்,

அவரது வாடிக்கையாளர்கள், மெனோபாஸ் மிகவும் இளமையான வயதில் வந்து விட்டதாக கருத்து தெரிவிப்பார்கள், மேலும் அவர், வாடிக்கையாளர்களின் தலையில் சிகை அலங்காரம் செய்தபடியே தனது நிலைமையை விளக்குவார்.

"எனது வாடிக்கையாளர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் விட என்னுடன் செலவிட்ட 30 நிமிடங்களில் மாதவிடாய் பற்றி அதிகம் கற்றுக்கொண்டதாக என்னிடம் கூறுகிறார்கள்."

"ஒவ்வொரு பெண்ணின் சார்பாக நான் இந்த வார்த்தையைப் பெறுவது எனக்கு பெருமை அளிக்கிறது."

பல பெண்கள் தங்கள் 40 வயது வரை மெனோபாஸ் பற்றி யோசிப்பதில்லை. ஆனால் அது மிகவும் முன்னதாகவே தொடங்கலாம். எம்மா, சோ-மியாட், ஒலிவியா மற்றும் எல்ஸ்பெத் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, எந்த வயதிலும் மாதவிடாய் நிறுத்தத்தை மற்றவர்கள் சமாளிக்க உதவுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: