You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் 74 வயது நபருக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை - இன்றைய முக்கிய செய்தி
இன்றைய (30/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள சில செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 74 வயது நபரை குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், " பல லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் நேரத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 74 வயது ராஜேந்திரனை நூலகப் பொறுப்பாளராக நியமித்துள்ளது. அவருக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நூலகத்தில் அரசு கொள்கைகள், மாசு, பேரிடர் மேலாண்மை என பல்வேறு தலைப்புகளில் 11 ஆயிரம் நூல்கள் உள்ளன. இவர் மட்டுமல்லாமல் 64, 65 வயதுகளில் மேலும் மூவர் வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழரசன் (64) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சம்பத் (65) உள்துறையிலும், நாராயணன் (65) நிதித்துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களும் சமீபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாங்கள் கடைசியாக பணியில் இருந்த போது பெற்ற சம்பளத்தை இந்த புதிய பணிகளில் சம்பளமாக பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எம் ஜெயந்தி, "இளைஞர்கள் இந்த வேலைக்கு வர விரும்பவில்லை, அல்லது இதற்கான தகுதிகளை கொண்டிருக்கவில்லை. நிதி என்பது பெரிய துறை. அதில் மூத்த ஊழியர்களை தான் நியமிக்க முடியும். அதே போன்று ஒரு நூலகத்தை பராமரிப்பதும் பெரிய வேலை, 74 வயது அனுபவமுள்ள நபரே சரியானவர். அவர்கள் அந்த வேலைகளை திறம்பட செய்து வருகின்றனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப அரசிடம் கோரிக்கை வைத்த போது, இவர்களை தலைமை செயலகம் பரிந்துரை செய்தது. நாங்கள் இளைஞர்களையும் பணியில் நியமிக்கிறோம். ஆனால் அவர்களுக்கு இன்னும் போதிய அனுபவம் இல்லை" என்று கூறினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- டிரம்பின் வரி விதிப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை - வரி வசூலிப்பில் உடனடி மாற்றம் இருக்குமா?
- இன்னும் 5 ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? சர்வதேச நிறுவனம் கணிப்பு
- செலவுகளுக்கு அஞ்சி குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் அதிகரித்து வருவது ஏன்?
- சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை - சனி, ஞாயிறு மட்டுமே குறிவைக்கும் உ.பி. கும்பல் சிக்கியது எப்படி?
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.5 கோடி மோசடி
மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேருக்கு போலி நியமன ஆணைகளை கொடுத்து 1.5 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் பகவதியப்பன்(52). தொழில் அதிபரான இவர் செங்கல் சூளை உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். பொறியாளர் படிப்பு முடித்துள்ள தனது மகன் பார்த்திபனுக்காக வேலை தேடிய போது, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹரகுமார்(52) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனக்கு மத்திய அமைச்சர்களையும் மத்திய அரசு அதிகாரிகளையும் நன்கு தெரியும் என்று கூறியுள்ளார். பார்த்திபனுக்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் முக்கிய வேலை பெற்று தருவதாக ஆசை காட்டியுள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், "எனவே பகவதியப்பன் தனது மகன் உட்பட 18 பேருக்கு மத்திய அரசு வேலைக்காக ரூபாய் 1.65 கோடியை ஹரிஹரகுமாரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ஹரிஹரகுமார் மத்திய அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ஆணையை பெற்றுக்கொண்ட 18 பேரும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹரிஹரகுமார் கொடுத்தது போலி நியமன ஆணைகள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் தொழிலதிபர் பகவதிப்பன் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தலைமறைவாக இருந்த ஹரிகரகுமார் கைதுசெய்யப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு