சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை - சனி, ஞாயிறு மட்டுமே குறிவைக்கும் உ.பி. கும்பல் சிக்கியது எப்படி?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்" என்கிறார் சென்னை, திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது புகாரி.

மே 26 அன்று ஏடிஎம் இயந்திரத்தின் பெட்டியை உடைக்காமல் கொள்ளையடித்ததாக உ.பி-யை சேர்ந்த மூன்று பேர் கைதான விவகாரத்தில் அவர்களின் பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏடிஎம் மைய கொள்ளைச் சம்பவத்தில் என்ன நடந்தது? பணம் திருடு போனால் பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வரும் நரேன்குமார், ஹிட்டாச்சி ஏடிஎம் சர்வீஸ் (Hitachi ATM Service) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று தங்களின் மும்பை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக, திருவான்மியூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்.

திருவான்மியூர், திருவள்ளூவர் நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக் கிளையின் ஏடிஎம் மையத்தில் ஏதோ தவறு நடந்துள்ளதாகவும் அதை உடனே சென்று சோதனை செய்யுமாறு தங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாக புகார் மனுவில் நரேன்குமார் குறிப்பிட்டுள்ளார்.

ஏடிஎம் மையத்தில் சோதனை செய்தபோது, பணம் வெளியில் வரக் கூடிய இடத்தின் உள்புறத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியில் வராமல் சிலர் தடுத்துள்ளதாக அவர் மனுவில் கூறியுள்ளார்.

அதிகாலை கொடுத்த அதிர்ச்சி

'வங்கிக் கிளையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, ஞாயிற்றுக்கிழமை (மே 25) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவை இரண்டு பேர் திறந்துள்ளனர். பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்' என புகார் மனுவில் நரேன்குமார் கூறியுள்ளார்.

அதன்பிறகு வாடிக்கையாளர் ஒருவர் 1500 ரூபாயை எடுக்க முயன்றும் வராததால் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அதைச் சோதிக்க சென்றபோது குற்றச் சம்பவம் நடந்திருப்பதை தான் உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

". இதனால் பணம் வெளியில் வராமல் உள்ளேயே நின்றுவிடும். பிறகு போலி சாவி மூலம் லாக்கரை திறந்து அங்கு கிடக்கும் பணத்தை எடுத்துள்ளனர்" எனக் கூறுகிறார், திருவான்மியூர் காவல்நிலைய ஆய்வாளர் முகமது புகாரி.

"இரண்டாவது லாக்கர் என்பது பணம் வைக்கப்படும் இடம் என்பதால், அதை உடைத்தால் அலாரம் சத்தத்தை எழுப்பும் என்பதால் அதை கைதான நபர்கள் தொடவில்லை" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

முதல் லாக்கரைத் திறப்பதற்கு பயன்படுத்திய சாவி என்பது அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தக் கூடிய தோற்றத்தில் இருந்ததாகக் கூறும் முகமது புகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் எந்தெந்த வகைகளில் கொள்ளையடிக்கலாம் என்பதை சமூக வலைதளங்களின் மூலமாக கைதான நபர்கள் கற்றுக் கொண்டு திருடியுள்ளனர்" எனக் கூறினார்.

"தமிழ்நாட்டில் 3 மாதங்கள்"

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருடு போன சம்பவத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிஜ்பான், ஸ்மித் யாதவ் ஆகியோரை, திங்கள் கிழமையன்று திருவான்மியூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் குல்தீப் சிங் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். மற்ற இருவரும் விவசாய வேலை பார்த்து வந்துள்ளனர்.

"மூவரும் உ.பி-யில் உள்ள கான்பூரில் ஒரே ஊரில் வசிப்பவர்கள். தமிழ்நாட்டுக்கு மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்கள் மட்டும் தங்கி ஏடிஎம் மையங்களில் திருட வந்துள்ளனர். முதலில் செங்குன்றம், அடுத்து மாதவரம், மூன்றாவதாக திருவான்மியூரில் அறை எடுத்து தங்கியுள்ளனர்" எனக் கூறுகிறார் காவல் ஆய்வாளர் முகமது புகாரி.

"சனி, ஞாயிறு தான் டார்கெட்"

ஒவ்வோர் இடத்திலும் வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் மூவரும் தங்குவதாகக் கூறும் முகமது புகாரி, "சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அன்று வங்கிகள் விடுமுறை என்பதால் புகார் பதிவாகி கவனிப்பதற்குள் ஞாயிறு இரவு விமானம் அல்லது ரயிலில் ஏறி சொந்த ஊர் சென்று விடுகின்றனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய முகமது புகாரி, "ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 20 ஆயிரம் முதல் ஆயிரம் வரையில் கூட கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். பணம் வராதால் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குப் பொதுமக்களில் சிலர் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்" எனக் கூறினார்.

அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ பிரச்னை எனக் கூறி வங்கி ஊழியர்கள் அமைதியாக இருந்துவிட்டதாகக் கூறிய அவர், "மும்பையில் ஹிட்டாச்சி நிறுவனத்தில் உள்ள பணியாளர் ஒருவர் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து சென்னை கிளைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்" என்கிறார்.

காட்டிக் கொடுத்த 40 கேமராக்கள்

இதன்பிறகு, சுமார் 40 கண்காணிப்பு கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்துள்ளது. "முதல் சிசிடிவி காட்சிலேயே அவர்களின் முகம் தெரிந்துவிட்டது. சாலையின் வெளிப்புற கேமரா காட்சிகள், அவர்கள் சென்ற வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அவர்களின் செல்போன் எண்ணும் கிடைத்துவிட்டதால் கைது செய்ய முடிந்தது" என்கிறார் முகமது புகாரி.

எந்த ஊருக்குச் சென்றாலும் ஓட்டலில் அறை எடுத்து தங்குவதை கைதான நபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "திருட்டில் ஈடுபடும்போது மட்டும் கால் டாக்ஸியை வாடகைக்கு எடுத்துள்ளனர். அப்போது தான் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்துள்ளனர்" எனக் கூறுகிறார்.

கைதான மூவர் மீதும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, திருட்டில் ஈடுபட்டது உள்பட மூன்று பிரிவுகளில் (305(a),62 BNS Act r/w 3 of TNPPDL Act) வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "ஞாயிறு மாலை சுமார் 4 மணிக்குக் காவல்துறையில் புகார் கொடுத்தனர். மறுநாள் காலை 9 மணிக்குள் கைது செய்துவிட்டோம். அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.

வங்கி அதிகாரி கூறுவது என்ன?

"ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவைத் திறந்து இவ்வாறு மோசடி செய்ய வாய்ப்புள்ளதா?" என, பொதுத்துறை வங்கி ஒன்றின் கிளை மேலாளரிடம் பிபிசி தமிழ் பேசியது.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "முதல் கதவு என்பது சாதாரண லாக்கராக வடிவமைக்கப்பட்டிருக்கும். போலி சாவி மூலம் இதன் கதவைத் திறந்துள்ளனர்" எனக் கூறுகிறார்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகள் தொடர்வதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் தடுத்து, வாடிக்கையாளர் சென்ற பிறகு எடுக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. பாஸ்வேர்டை கண்டறிந்து பணம் எடுப்பது என தவறுகள் தொடர்கின்றன" என்கிறார்.

தொழில்நுட்பரீதியாக இதுபோன்ற குறைகளைக் களைவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏ.டி.எம்மை அந்தந்த வங்கிக் கிளைகள் தான் பாதுகாக்க வேண்டும். இயந்திரத்தில் யாரும் சேதம் ஏற்படுத்தினால் காவல் நிலையம், வங்கி மேலாளர் ஆகியோருக்குத் தகவல் சென்றுவிடும் வகையில் அலாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வங்கி சேவைகளுக்கு ஏடிஎம் இயந்தித்தைத் தயாரித்துக் கொடுப்பதில் நான்குக்கும் அதிகமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் வங்கி மேலாளர், "பணம் சிக்கிக் கொண்டால் எடுத்துக் கொடுப்பது, தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்வது போன்ற பணிகளை இவர்கள் செய்கின்றனர். அப்போது வங்கி ஊழியரும் உடன் இருப்பார்" எனக் கூறுகிறார்.

"ஒரு நபர் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியும். பணம் வராவிட்டால் புகார் வந்து நடவடிக்கை எடுப்பதற்குள் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுவிடுகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

"பணத்தைத் திரும்பப் பெறலாம்" - வழக்கறிஞர் கார்த்திகேயன்

"ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் போனால் மக்கள் பயப்படத் தேவையில்லை. அது மக்களின் பணம் கிடையாது. வங்கியின் பணம்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பணம் எடுக்கப்படாமல் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தால் அதற்கு வங்கி தான் முழுப் பொறுப்பு. 2017 ஆம் ஆண்டு இதுதொடர்பான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இதுதொடர்பான தகவல்கள் இருப்பதைக் காண முடிந்தது.

உங்களின் பங்களிப்பு இல்லாமல் பணம் திருடு போயிருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பு அல்ல. ஏடிஎம் இயந்திரம் என்பது வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்க முடியாது என ரிசர்வ் வங்கியின் விதிகள் கூறுவதாக கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

பணத்தைத் திரும்பப் பெற வழிமுறைகள் என்ன?

பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டார்.

* ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியில் வராவிட்டால் வங்கியிடம் 3 நாள்களில் முறையிட வேண்டும். அவ்வாறு முறையிட்டால் 10 நாள்களுக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

* மூன்று நாட்கள் கடந்துவிட்டால் 4 முதல் 5 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குரிய சேவைக் கட்டணத்தை மட்டும் வங்கி பிடித்தம் செய்து கொள்ளும்.

* பணம் எடுக்கப்பட்டதாக (debit) செல்போனுக்கு அழைப்பு வந்தும் பணம் வராவிட்டால் காவல்துறையில் புகார் தெரிவிக்குமாறு வங்கி நிர்வாகம் கூறும். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை.

* குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்யும் வரை வாடிக்கையாளர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

* வாடிக்கையாளர் வெளியூரில் இருந்தால் பதிவு செய்யப்பட்ட இமெயில் முகவரி மூலம் புகார் மனுவை அனுப்பலாம்.

* இமெயில் முகவரி இல்லாவிட்டால் வங்கியின் இணையதளத்தில் ரிசர்வ் வங்கி விதியின்படி புகார் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும். அதில், வங்கியின் ஏடிஎம் கிளை, பணம் வராமல் போன நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தால் போதும். காவல்நிலையம் செல்ல வேண்டியதில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு