நாகையில் தாயின் சடலத்தை காட்டில் வீசிச் சென்ற மகன்கள் - வறுமையின் கோரப் பிடியால் நடந்த சோகம்

- எழுதியவர், சே. சகாதேவன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நாகப்பட்டினம் அருகே சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என கண்டறியப்பட்டுள்ளது. வயது முதிர்வால் உயிரிழந்தவரின் சடலத்தை 12 நாட்கள் கழித்து அவரது மகன்கள் காட்டில் வீசிச் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் காந்தி மகான் கடற்கரை சாலையில் தைல மரக் காடு அமைந்துள்ளது. கடந்த 27ஆம் தேதி அங்கு குப்பை கொட்டச் சென்ற வேதவள்ளி என்பவர் அங்கு சாக்கு மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்ததைப் பார்த்து தன் ஊரைச் சேர்ந்த இளைஞர்களிடம் கூறியுள்ளார்.
அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தகவல் அறிந்து சென்று மூட்டையைப் பிரிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ஒரு சடலம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைத அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மூட்டையை முதலில் பிரித்த வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மூட்டையில் கருப்பு நிற பிளாஸ்டிக் பை மற்றும் துணிகள் இருந்ததை முதலில் பார்த்தோம். எங்கள் பாதுகாப்பிற்காக செல்போனில் வீடியோ பதிவு செய்துகொண்டே மூட்டையைப் பிரித்தோம்.
பை மற்றும் துணிகளை விலக்கிவிட்டுப் பார்த்தபோது மனித தலை தெரிந்ததால் உடனே அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினோம். அதைத் தொடர்ந்து போலீசார் அதிக அளவில் எங்கள் பகுதிக்கு வந்தபோது பதற்றமாக இருந்தது" என்று கூறினார்.
சாக்கு மூட்டையை எடுத்து வந்த இருவர்
சாக்கு மூட்டையில் பெண்ணின் சடலம் கிடந்ததும் முதலில் கொலை என்றுதான் நினைத்தோம் எனக் கூறுகிறார் நாகை டிஎஸ்பி ராமசந்திரமூர்த்தி. மேலும், சாக்கு மூட்டையில் இருந்த மூதாட்டியின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிபிசி தமிழிடம் பேசிய நாகை டிஎஸ்பி, "சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
பின்னர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வீரமணியிடம் புகார் பெறப்பட்டு சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம்" என்றார்.

சிசிடிவி காட்சிகள் மூலம் உடலை எடுத்து வந்தவர்கள் யார் என்பதை உறுதி செய்ததாகக் கூறினார் ராமசந்திரமூர்த்தி. அதைத் தொடந்து, "விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது வேளாங்கண்ணி - வடக்குப் பொய்கை நல்லூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த செய்யது என்கிற ராஜா மற்றும் சுல்தான் சடலத்தை அங்கு வீசியது தெரிய வந்தது."
"இவர்கள் இருவரும், வேளாங்கண்ணி ஆரிய நாட்டு வடக்குத் தெருவில் வசித்து வந்த ஷேக் உசேன் என்பவரின் மகன்கள். சாக்கு முட்டையை இரு சக்கர வாகனத்தில் வைத்து அவர்கள் எடுத்து வந்ததை சிசிடிவி ஆதாரங்கள் மூலம் உறுதி செய்தோம். சாக்குமூட்டையில் சடலமாக இருந்தவர் செய்யது மற்றும் சுல்தானின் தாயான மும்தாஜ் என்பதும் பின்னர் தெரிய வந்தது" என்று விசாரணையில் கிடைத்த தகவல்களை விளக்கினார் ராமசந்திரமூர்த்தி.
தந்தை மரணம், வறுமையின் பிடியில் தவித்த குடும்பம்

செய்யது, சுல்தான் இருவரும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் உள்ள தேநீர்க் கடை ஒன்றில் வேலை செய்து வந்தனர். அந்தக் கடையின் உரிமையாளரான லியோனாட் ஜானோ மும்தாஜின் குடும்பம் வறுமையால் தவித்து வந்ததாகக் கூறிகிறார்.
"இருவரும் ஏழு மாதங்களுக்கு முன்பு எனது கடைக்கு வந்து வேலை கேட்டனர். அவர்களது சூழ்நிலையை உணர்ந்து வேலையில் சேர்த்துக் கொண்டேன். இருவரும் வேளாங்கண்ணி ஆரிய நாட்டுத் தெருவில் வாடகைக்கு வசித்து வந்தனர். மாத வாடகை 4000 ரூபாய்கூட செலுத்த முடியாத நிலையில்தான் அவர்களின் குடும்பம் இருந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தை உசேன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அந்தத் தகவலையே, மூன்று நாட்கள் கழித்துதான் என்னிடம் தயக்கத்துடன் கூறினார்கள். பிறகு வேளாங்கண்ணி முஸ்லிம் ஜமாத்தை தொடர்புகொண்டு உசேன் சடலத்தை அடக்கம் செய்ய வைத்தேன்" என்று கூறினார் லியோனாட் ஜானோ.
அவர்களைப் பற்றி மேற்கொண்டு பேசிய அவர், "அதன் பிறகு இருவரும் தங்களது தாய் மும்தாஜ், மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி ஜீனத்தம்மாள் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தனர். தந்தையின் இறப்புக்குப் பிறகு இருவரும் மிகவும் இறுக்கமான மனநிலையிலேயே இருந்தார்கள். கடந்த 26ஆம் தேதி இரவு என் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்கள். அதன் பிறகுதான் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது," என்றார்.
தாய் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டிய மகன்கள்

"தாயார் மும்தாஜ் இறந்து 12 நாட்கள் கழித்து அவரது உடலை மகன்கள் இருவரும் வெளியே எடுத்து வந்துள்ளனர். அவர்களது தந்தை இறந்தபோதும் மூன்று நாட்களாக யாரிடமும் கூறவில்லை. துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்துதான் தகவல் தெரிய வந்தது" என்கிறார் செய்யது, சுல்தான் சகோதரர்களின் அண்டைவீட்டில் வசிக்கும் அந்தோணி.
"ஏற்கெனவே அவர்கள் தந்தை இறந்தபோது நிகழ்ந்ததைப் போலவே இப்போதும் தகவல் தெரிவிக்கவில்லை. அவர்கள் வீட்டிலிருந்து சாம்பிராணி வாசம் தொடர்ச்சியாக வந்தது.12 நாட்கள் சடலத்தை வீட்டிலேயே வைத்து நாற்றம் தெரியாமல் இருக்க சாம்பிராணி புகையை போட்டு மறைத்துள்ளனர்.
தற்போது வீட்டைப் பூட்டிவிட்டு மூவரும் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. இதுநாள் வரை துர்நாற்றத்தால் எங்களால் இருக்க முடியவில்லை. நாங்களும் வீட்டைக் காலி செய்துவிட்டு செல்லவிருக்கிறோம்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அந்தோணி.
மும்தாஜ் உடல் அடக்கம்

பட மூலாதாரம், Police
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சையது மற்றும் சுல்தான், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தங்களது சகோதரியின் மனநலப் பிரச்னையைச் சரி செய்வதற்காக தந்தை ஷேக் உசேன், தாய் மும்தாஜ் ஆகியோருடன் நாகூருக்கு வந்ததாக காவல்துறை கூறுகிறது.
தற்போது உடற்கூறாய்வு செய்யப்பட்ட மும்தாஜ் உடலை காவல்துறையினர் அடக்கம் செய்துள்ளனர். சுல்தான், சையது இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் வறுமையின் காரணமாக உடலை அடக்கம் செய்ய முடியாமல் இருவரும் தவித்து வந்ததாகவும் உடற்கூறாய்வில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவக்குழு தெரிவித்துள்ளதாகவும் காவல்துறை செய்திக் குறிப்பு மூலமாகத் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தாயின் சடலத்தை அடக்கம் செய்யப் போதிய பண வசதி இல்லாத காரணத்தால், சுமார் இரண்டு வாரமாக தாயார் மும்தாஜின் உடலை வீட்டிலேயே வைத்து இருந்துள்ளனர். துர்நாற்றம் அதிகரிக்கவே தாயின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி தாங்கள் பணிபுரியும் தேநீர்க் கடை உரிமையாளரின் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று ஜூன் 26ஆம் தேதி, வடக்கு பொய்கைநல்லூர் தைலமரங்கள் உள்ள கொல்லையில் இருவரும் வைத்துச் சென்றது தெரிய வந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.
ஊர் மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத வாழ்க்கை

வேளாங்கண்ணி ஆரிய நாட்டுத் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்கள் வேளாங்கண்ணி ஜமாத் அமைப்பில் உறுப்பினராக இல்லை. வெள்ளிக்கிழமை அல்லது பண்டிகை நாட்களில் எந்தவிதமான தொழுகைக்கு, செல்லாமல் இருந்துள்ளனர்.
வேளாங்கண்ணி முஸ்லிம் ஜமாத் தலைவர் ஜாகிர் உசேசேன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தந்தந்தை உசேன் இறந்தபோது 3 நாட்கள் துர்நாற்றம் வீசியபடி இருந்த சடலத்தை மிகுந்த சிரமத்தோடு அடக்கம் செய்தோம். ஆனால் மும்தாஜ் இறந்ததை அவர்கள் எங்களிடம் கூறியிருக்கலாம்.
அதைச் செய்யாதது எங்களுக்கு மன வருத்தம் அளிக்கிறது. சாதி, மதம், இனம் எதுவும் பார்க்காமல் நாங்கள் பல சடலங்களை அடக்கம் செய்துள்ளோம். மும்தாஜ் சடலம் வறுமையால் தூக்கி வீசப்பட்டிருப்பது எங்களை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது" என்றார்.
தற்போதைய நிலை என்ன?

தாயின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் மகன்கள் தவித்துள்ளது தனக்கு வருத்தமளிப்பதாக அவர்கள் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் ஜெயா தெரிவித்துள்ளார்.
"தேநீர்க் கடை உரிமையாளர் லியோனாட் ஜானோதான் மாதந்தோறும் அவர்களுக்கான வாடகையை எனக்கு அனுப்புவார். 30ஆம் தேதி என்னை அழைத்து அவர்கள் வீட்டை காலி செய்கிறார்கள் என்று சொன்னார். கடந்த 2ஆம் தேதி காலையில் நான் வீட்டிற்குச் சென்றபோது அங்கு யாரும் இல்லாததால் வீட்டைப் பூட்டிவிட்டு வந்துவிட்டேன்.
கணவன், மனைவி இருவரும் வயது முதிர்வால் உயிரிழந்துள்ளனர். ஆனால் மும்தாஜ் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவரது மகன்களும், மகளும் தவித்த தகவல் மிகுந்த வருத்தம் அளிக்கிறது," என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ள நிலையில் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றவர்கள் வேறு ஏதேனும் இடத்திற்குச் சென்றிருக்கலாம் என அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர். மறைந்த மும்தாஜின் இளைய மகன் சுல்தானின் அலைபேசி எண்ணுக்கு பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












