மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவமா? சிவகங்கை இளைஞர் மரணத்தில் நடந்தது என்ன?
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் வைத்து தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. போலீஸாரின் தாக்குதலில் அவர்கள் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
5 ஆண்டுகள் கழித்து அதே ஜூன் மாதத்தில் அதேபோன்றதொரு சம்பவம் சிவகங்கையில் நிகழ்ந்திருக்கிறது.
நகையை திருடியதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லபட்ட திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் போலீஸார் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறி உள்ளூர் பொதுமக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.
தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் 27 வயதான அஜித் குமார் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா அந்த கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, தங்களது நகை காணவில்லை எனத் திருப்புவனம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார்.
தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜீத்குமாரிடம் சாவியைக் கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையைக் காணவில்லை என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜீத்குமாரைத் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு அஜித் குமாரை மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அஜித்துடன் நவீன்குமார், பிரவீன்குமார், அருண் குமார், வினோத் குமார் ஆகியோரையும் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் காவலர்கள் அஜீத்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதைப் பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதன் பின்னர், மற்ற நான்கு பேரையும் காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். நவின் தனது தாயிடம் சென்று 'அண்ணனை போலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், விசாரணை முடிந்து தூக்கிச் சென்றனர்' என கூறியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் சனிக்கிழமையன்று திருப்புவனம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அஜித்குமார் உயிரிழந்து விட்டதை அவரது குடும்பத்தினரிடம் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் உறுதிப்படுத்தினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



