You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இலக்கிய உலகிலும் ஆண்களின் ஆதிக்கமா?" - சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்களை பகிரும் எழுத்தாளர்கள்
- எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
"புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் இருக்கும் தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்குமான தொடர்பு,” என்று தொ.பரமசிவன் ஒருமுறை தனது உரையில் குறிப்பிட்டிருப்பார்.
அப்படி புத்தகங்களுக்கும் வாசகர்களுக்குமான உறவு தமிழ் சமூகத்திடம் தொடர்ந்து பலம் பெற்று வருவதை ஒவ்வோர் ஆண்டும் தமிழில் வெளியாகும் புத்தகங்களின் எண்ணிக்கைகள் மூலமாகவும் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பின் மூலமாகவும் நம்மால் உணர முடியும்.
கடந்த ஆண்டில் மட்டும் தமிழில் பல்வேறு தலைப்புகளின் கீழ் சுமார் பத்தாயிரம் புத்தகங்கள் வெளிவந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் ‘2022ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிந்தைய காலகட்டத்தில் இருந்து தற்போது 2023ஆம் ஆண்டு ஜனவரி வரை தமிழ் மொழியில் பல்வேறு புதிய தலைப்புகளின் கீழ் சுமார் 10,000 புத்தகங்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு எழுத்தாளர்களின் புதிய புத்தகங்கள், புதிய வெளியீடுகள், புதிய எழுத்தாளர்களின் அறிமுக புத்தகங்கள் போன்ற அனைத்து வகை புதிய புத்தகங்களும் இதில் அடக்கம்.
தேசிய அளவில் இவ்வளவு அதிகளவு எண்ணிக்கையிலான புத்தகங்கள் தமிழ் சமூகத்திடமிருந்து மட்டுமே வெளியாகிறது என பபாசியின் செயலாளர் (தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்) முருகன் பிபிசியிடம் தெரிவித்தார்.
’ஜனவரி 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கவுள்ள 46வது சென்னை புத்தக கண்காட்சிக்காக இம்முறை மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிய அளவில் இவ்வளவு பெரிய எண்ணிக்கைகளில் புத்தக அரங்குகள் எங்குமே அமைக்கப்பட்டதில்லை. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை சிறிய சிறிய எண்ணிக்கைகளில் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டிருக்கலாம்.
ஆனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கைகளில் புத்தக அரங்குகளை அமைக்க ’பபாசி’ மட்டுமே முயற்சி எடுத்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் ஒவ்வோர் ஆண்டும் தமிழில் அதிகமான எண்ணிக்கைகளில் புத்தகங்கள் வெளியாகிறது.
ஒவ்வோர் ஆண்டும் புதிது புதிதாக அறிமுகமாகும் புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பதிப்பாளர்களின் வரவு தொடர்ந்து அதிகரிப்பதை மிகவும் நேர்மறையான விஷயமாக பார்க்க முடிகிறது’ என்று வியப்புடன் கூறினார் முருகன்.
சென்னை புத்தக கண்காட்சியின் வரலாறு என்ன?
பொதுமக்கள் மத்தியில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கி அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நூல்களின் விற்பனைகளை அதிகப்படுத்துவதற்காகவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர், 1976ஆம் ஆண்டு ஒரு தனிக் கூட்டமைப்பை உருவாக்கினர்.
இந்தக் கூட்டமைப்பின் முன்னெடுப்பினால் அதே ஆண்டில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மதரஸா யஏ - ஆலம் மேல்நிலைப்பள்ளியில் மிகவும் சிறிய அளவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சி, பின்னர் அதே வளாகத்தில் அமைந்துள்ள சென்னை காயிதே மில்லத் மகளிர் அரசு கல்லூரி மைதானத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.
அதன்பின்னர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் சில ஆண்டுகள் நடைபெற்றது. தற்போது தொடர்ச்சியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2015ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதால், ஜனவரி மாதம் நடைபெற வேண்டிய புத்தகத் திருவிழா ஜூன் மாதம் தீவுத்திடலில் நடைபெற்றது.
தமிழ் சமூகம் தொடர்ச்சியாக புத்தகங்களையும் வாசித்தலையும் கொண்டாடுவதற்கு உந்துதலாக எது காரணமாக இருக்கிறது என்ற கேள்வியை பிபிசி தமிழ் எழுத்தாளர்களிடம் முன்வைத்தது. அவர்கள் தங்கள் பதில்களோடு தங்களது அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
உலகத்திற்கும் நமக்குமான இடைவெளியைக் குறைப்பதில் புத்தகங்களின் பங்கு பெரியது
“ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறை அடையும் இயல்பான ஒரு வளர்ச்சியாகவே இதை நாம் பார்க்கமுடியும்,” என்று பிபிசியிடம் தனது அனுபவத்தை பகிர துவங்கினார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
"அந்த காலத்தில் எல்லா ஊர்களிலும் எல்லா புத்தகங்களும் கிடைத்துவிடாது. ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நூலகத்திற்குதான் செல்லவேண்டும். சில புத்தகங்களை வாங்குவதற்கு வேறு ஓர் ஊருக்குக்கூட செல்ல வேண்டியிருக்கும்.
அப்போதெல்லாம் நான் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாங்குவதற்காக டில்லி வரை கூட சென்றிருக்கிறேன். ஆனால் இன்று அப்படி இல்லை நீங்கள் இருந்த இடத்தில் இருந்து எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியும். எனவே புத்தகங்கள் நம்மிடம் வந்து சேர்வதற்கான இடைவெளி குறைந்திருப்பது, இன்றைய தலைமுறையினர் அதிகம் வாசிப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருப்பதைப் பார்க்க முடியும்," என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
அதேபோல், "அந்த காலத்தில் புத்தகங்களை வாங்குவதற்கு அனைவரிடமும் போதிய பணம் இருக்காது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட புத்தகங்களைக்கூட அன்று வாங்க முடியாத நிலையில் மக்கள் இருந்தனர். ஆனால் அப்படியான நிலை இன்று பெரும்பாலும் மாறியிருக்கிறது. புத்தகம் வாங்குவதற்காகவே பெரும்பாலானோர் பணம் எடுத்து வைக்கின்றனர்.
மற்றொருபுறம் புத்தகங்களை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் ஒருகட்டத்தில் ஓர் ஆளுமையாக உருவெடுப்பதை உடன் இருப்பவர்கள் குறிப்பாக இளைஞர்கள் நுட்பமாகக் கவனிக்கின்றனர். அது அவர்களை வாசித்தலை நோக்கி மேலும் நகர்த்துகிறது. இந்த எல்லா காரணங்களும் இன்றைய சமூகம் வாசித்தலை நோக்கி வெகுவாக நகர்வதற்கு முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது," எனக் கூறினார்.
புரட்சியாலும் எழுச்சியாலும் உருவான மாற்றம்
இந்தாண்டில் பத்தாயிரம் புத்தகங்கள் வெளியாகியிருப்பது மிகவும் களிப்பான செய்திதான் என்றாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறினார் எழுத்தாளர் குட்டி ரேவதி.
அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொன்றுதொட்டு தமிழ் சமூகம் ஒரு அறிவார்ந்த சமூகமாக விளங்கி வருகிறது. அப்போது இருந்து அறிவுப் பரிமாற்றத்திற்காக அவர்கள் பயன்படுத்தி வந்த கருவிகள் இலக்கியங்களும் புத்தகங்களும்தான்,” என்று கூறினார் குட்டி ரேவதி.
"ஒரு சமூகத்தை ஒடுக்க வேண்டுமென்றால் அவர்களது எழுத்தை ஒடுக்கினால்போதும், அவர்களது நூல்களை ஒடுக்கினால்போதும்.
அதனால்தான் இனப்படுகொலையின்போது தமிழர்களுடைய யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. காரணம் எழுத்தும், புத்தகங்களும் தமிழர்களின் மையப்பகுதியாக எப்போதுமே விளங்கி வந்திருக்கிறது.
நமக்கு இருக்கும் நீண்ட மொழி வரலாறு, மொழி சீர்திருத்தம், முந்தைய நூற்றாண்டில் நடைபெற்ற புரட்சிகளும், எழுச்சிகளும் இவற்றிற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக பெண்களின் கைகளில் புத்தகங்களைக் கொண்டு சென்றதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் நடைபெற்ற சீர்த்திருத்தங்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று விவரிக்கும் குட்டி ரேவதி, "அதேவேளையில் பெண்களின் பங்களிப்பு இலக்கிய உலகில் இன்னும் போதிய அளவில் விரிவாகவில்லை என்பது குறித்த தனது வருத்தத்தையும் அவர் பிபிசியிடம் பகிர்ந்துக்கொண்டார்.
"இலக்கிய உலகிலும்கூட, பல பெண்கள் தங்களுடைய சுய ஆளுமையை தாமதமாகவே உணர்கின்றனர். அதுவே அவர்களுடைய வெற்றிகளை தாமதப்படுத்துகிறது. மற்றொருபுறம் எல்லா துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதிலேயே அவர்களுடைய பெரும்பான்மையான ஆற்றல் செலவாகிவிடுகிறது.
ஆனால் எந்தவொரு கட்டத்திலும் துவண்டுவிடாமல் தங்களது துறையில் அவர்களுடைய அடையாளத்தை பதிப்பதற்கு ஒவ்வொரு பெண்ணும் விடாது உழைக்க வேண்டும்,” என்று உறுதியான குரலில் தெரிவித்தார் குட்டிரேவதி.
வாசகர்களும் எழுத்தாளர்களாக உருவெடுக்கின்றனர்
’வெறும் 50 அரங்குகளோடு சென்னை புத்தக கண்காட்சி நடந்துகொண்டிருந்த காலத்திலிருந்து நான் இங்கு வந்துகொண்டிருக்கிறேன். தற்போது 1000 அரங்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு வாசகனாக வரத் தொடங்கிய என்னை இன்று எழுத்தாளனாக மாற்றியது சென்னை புத்தக கண்காட்சிதான்’ என்கிறார் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்.
மேலும் அவர் கூறுகையில், “ஒருகாலத்தில் புத்தகம் எழுதுவது, புத்தகம் வெளியிடுவது போன்ற செயல்கள் மிகவும் மேட்டிமைத்தனமாகப் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாறியிருக்கிறது. புத்தகம் எழுதுவதற்கும் அதை வெளியிடுவதற்குமான வாய்ப்புகளும் சூழல்களும் மிகவும் ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கு இதுவொரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் நான் கவனித்தது ஒரு நான்கைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக புத்தக கண்காட்சிக்கு வந்தவர்கள் 6ஆம் ஆண்டில் ஒரு எழுத்தாளராக உருவெடுத்திருக்கிறார்கள் என்கிறார் முத்துகிருஷ்ணன்.
மற்றொருபுறம் சமூக வலைதளங்கள், கிண்டில், இ.புக் போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருந்தபோது இனி புத்தகங்களை யாரும் தேட மாட்டார்கள் என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி எதுவும் ஆகவில்லை. மாறாக புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களை சாமானியர்களிடம் வெகுவாக கொண்டு சேர்ப்பதில் சமூக வலைதளங்கள் இன்று பெரும்பங்கு வகிக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்.
எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது
“இன்று புத்தகக் கண்காட்சிகளில் இளைய தலைமுறைக் கூட்டமே பெரிதும் புத்தகங்களை அள்ளிச் செல்கின்றன. இது அவர்களின் மீது நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது,” என்று பெருமிதம் கொள்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி.
இளைஞர்கள் தங்களுக்கான புத்தகங்களை மிகச் சுதந்திரமாகத் தேர்வு செய்ய இந்தப் புத்தகக் கண்காட்சி அவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது.
அவர்களின் மிகச்சொற்பமான ஊதியத்திலிருந்துகூட புத்தகங்களை வாங்குவதற்கென சிறு பகுதியை ஒதுக்க முன்வருகிறார்கள். இதிலிருந்து நம் இளைய தமிழ்ச்சமூகம் சரியான பாதையில் நடக்கத் துவங்கியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் புத்தகம் வாங்குவது ஒரு நாகரீகம் என்று எண்ணி வாங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் வாங்கிய புத்தகங்களை முழுமையாக வாசிக்கவும் வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்