You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அருணாச்சலில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மேஜர் ஜெயந்தின் உடல் தேனி அருகே சொந்த ஊரில் தகனம்
அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் ஜெயந்தின் உடல் தேனி அருகே அவரது சொந்த ஊரில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தின், திராங் பகுதியில் உள்ள போம்டிலா அருகே ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர், நேற்று காலை 9:15 மணிளவில் விபத்திற்குள்ளானது. அதில் இருந்த ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.
விபத்தில் இறந்த தமிழ்நாட்டை சேர்ந்த மேஜர்
இந்திய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் விபத்தில் உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் வினய் பானு ரெட்டி தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
மற்றொரு நபரான மேஜர் ஜெயந்த், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் உடல் அசாம் மாநிலம் தேஸ்பூரில் இருந்து ராணுவ விமானம் மூலமாக நள்ளிரவு 12.30 மணியளவில் மதுரை கொண்டு வரப்பட்டது.
அங்கே, விமான நிலைய இயக்குநரகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி விஜய் ஆனந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் உள்ளிட்ட பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேஜர் ஜெயந்த் உடல் சொந்த ஊரில் தகனம்
பின்னர், மேஜர் ஜெயந்தின் ராணுவ வாகனத்தில் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார். குடும்பத்தினர், உறவினர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ வண்டியில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. முடிவில், துப்பாக்கி குண்டுகள் முழக்க மேஜர் ஜெயந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது கிராம மக்கள் அனைவரும் வீரவணக்கம் என்று முழங்கி இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
முதலமைச்சர் இரங்கல்
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய இராணுவத்தின் 2 அலுவலர்கள் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர் ஜெயந்த் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவியையும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சல் பிரதேச மாநில முதலமைச்சர் பீமா காந்தா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவமும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவின் மூலமாக மேஜர் ஜெயந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திராங் பகுதியில் வழக்கமான பயிற்சிக்காக இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்றது.
காலை 9.15 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் மேற்கு போம்திலா அருகே மண்டலா மலைப்பகுதியில் மேலே பறந்து கொண்டிருந்த போது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது என குவாஹட்டி ராணுவ தளத்தின் செய்தித் தொடர்பாலர் தெரிவித்தார். கடைசியாக கிடைத்த ஜிபிஎஸ் சிக்னலை வைத்து தேடுதல் பணியில் ராணுவம் ஈடுபட்டது.
பகல் 12.30 மணியளவில் அந்த ஹெலிகாப்டர் அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் பங்ஜலிப் பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளானதாக உள்ளூர் மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அங்கு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பனிமூட்டம் காரணமாக அப்பகுதியில் மீட்பு பணிகள் தாமதமாயின.
சிக்னல் ஏதுமில்லாத இந்த இடத்தில் பனிமூட்டத்தின் காரணமாக 5 மீட்டருக்கு மேல் தெளிவாக பார்க்க முடியாத நிலை இருந்ததாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்பது தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்