தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வ அனுமதி கோரும் மனுக்கள்: இன்றைய விசாரணை - 10 முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் தன்பாலின சேர்க்கையாளர்கள் செய்து கொள்ளும் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல், நீதிபதி எஸ் ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2018ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக்கும் வரலாற்றுபூர்வ தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து இந்தியாவில் தன்பாலினத்தவர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பட மூலாதாரம், AFP
இருப்பினும், இந்திய அரசு முதல் அனைத்து மத அமைப்புகள் வரை இந்த மனுக்களில் ஒரேசேர விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவாக இல்லை.
தற்போது வரை இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, எந்த தரப்பில் என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சுருக்கமாக சில முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் வழங்குகிறோம்.
1. நேற்றைய விசாரணையின்போது, தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் நீதிமன்ற உத்தரவு, ஒரு முழு சட்டப்பிரிவையும் நீதித்துறையே மீண்டும் எழுதுவதாக அமையும் என்று இந்திய அரசு சார்பில் கூறப்பட்டது. இது போன்ற "ஒரு தரப்பை கேட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் போக்கை " நீதிமன்றம் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
2. இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேனகா குருசாமி, இது ஒரு தனிநபரின் உரிமை பற்றிய கேள்வி என்றார். “திருமணம் என்பது தனி மனித உரிமைகள் பற்றிய கேள்வி. ஆயுள் காப்பீடு தொடர்பாக எனது இணையர் பற்றி என்னால் தெரிவிக்க முடிவதில்லை,'' என்று வாதிட்டார்.
3. இதையடுத்து, "திருமணம் என்பது உயிரியல் ரீதியாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவாகும்," என்று இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
4. இதைக்கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "ஆண் அல்லது பெண் என்பவர் இப்படித்தான் என ஒரு முழு கோட்பாடே இல்லை. இது அவரவர் பிறப்புறுப்பு பற்றியது அல்ல. எனவே சிறப்பு திருமண சட்டம் ஆணும் பெண்ணும் என்று கூறினாலும், ஆண், பெண் என்ற கருத்தே பிறப்புறுப்பின் அடிப்படையிலான முழுமையான ஒன்று அல்ல” என்று கூறினார்.
'377' பிரிவு தீர்ப்புக்குப் பிறகுமா இந்த நிலை?

பட மூலாதாரம், Reuters
5. இதைத் தொடர்ந்து வாதிட்ட மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "திருமணம் செய்து கொள்ள தங்களுக்கு உரிமை உண்டு என்று அறிவிக்கவே தமது கட்சிக்காரர்கள் கோருகின்றனர். அந்த அறிவிப்பு, இந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு சிறப்பு திருமண சட்டத்தின்படி அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இப்போது தன்பாலின இணையர்கள், கைகோர்த்துச் சென்றால் கூட தவறாக பார்க்கப்படுகிறார்கள். அதுவும் சட்டப்பிரிவு 377 தொடர்புடைய தீர்ப்பு வெளிவந்தபிறகு இப்படி நடக்கிறது," என்று கூறினார்.
6. மேலும், சிறப்பு திருமண சட்டத்தில் ஆண் மற்றும் பெண் என்பதற்குப் பதிலாக ‘இணையர்’ என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று கோரினார். குடும்ப வன்முறை சட்டத்தின்படி தற்போது லிவ்-இன் உறவுகள் கூட அனுமதிக்கப்படுகின்றன. எனவே, சமுதாயத்தில் மதிக்கப்படும் அதே கட்டமைப்பை ஒரு திருமணமாக அங்கீகரிக்க தனது கட்சிக்காரர்கள் விரும்புகிறார்கள்,” என்று ரோத்தகி வாதிட்டார்.
7. இதையடுத்து, இந்த விஷயத்தை நீதிமன்றம் கேட்க முடியுமா என்பதை முதலில் ஆராய வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். புதிய சமூக உறவை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரே அமைப்பு இந்திய நாடாளுமன்றம்தான் என்றும் அவர் வலியுறுத்தினார்.
8. இதற்கு ஆட்சேபம் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "இதை நாடாளுமன்ற முடிவுக்கு விட்டு விட முடியாது. இந்த நீதிமன்றம்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாவலர்" என்று குறிப்பிட்டார்.
நீதிபதிகள் திட்டவட்டம்

பட மூலாதாரம், Reuters
9. திருமண உரிமையை நீங்கள் மறுக்கும்போது, என் கட்சிக்காரருக்கு குடியுரிமையை மறுக்கிறீர்கள். நீங்கள் குடியுரிமையை மறுத்தால், எனது கட்சிக்காரர் நல்லவர் அல்ல, பிற குடிமகனுக்கு சமமானவர் அல்ல என்று சொல்வது போல ஆகும். அவர் பொதுவெளியில் குற்றவாளி போல கருதப்படுவதுடன், பொது இடத்தில் தோளோடு தோள் சேர்ந்து நிற்கக் கூட தகுதியற்றவர் ஆக கருதப்படுவார் என்பதாகி விடும் என்று முகுல் ரோத்தகி குறிப்பிட்டார்.
10. அப்போது தலைமை நீதிபதி, இதுபோன்ற வழக்குகளில் எப்படி முடிவெடுப்பது என்று நீதிமன்றத்திடம் யாரும் கூற முடியாது. நாங்கள் மனுதாரர்கள் தரப்பை கேட்க விரும்புகிறோம். இந்த விஷயத்தில் தனி திருமண சட்டத்தில் இருந்து விலகி, சிறப்பு திருமணச் சட்டத்தில் தன்பாலினத்தவர்களுக்கு நிவாரணம் வழங்கலாமா என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த மனுக்கள் மீது மனுதாரர்கள் தரப்பு, வரும் வியாழக்கிழமை வரை அவர்களின் வாதங்களை முன்வைக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












