கனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கனடாவுக்கு வந்த முஹமத் மற்றும் ஆஃப்ரா பிலான் தம்பதியர் முற்றிலும் ஒரு புதிய நாட்டில், தங்களின் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

குழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் ஆஃப்ரா பிலான்

பட மூலாதாரம், AFRAA BILAN

படக்குறிப்பு, குழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் ஆஃப்ரா பிலான்

சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரை சேர்ந்த இத்தம்பதியர் மற்றும் இவர்களின் மகள் நயா மற்றும் மகன் நேல் ஆகியோர் கடும் பனிக்காலத்தில் மான்ட்ரல் நகருக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

கனடாவுக்கு வந்த மற்ற சிரியா அகதிகளை விமான நிலையத்தில் வரவேற்றது போல, இவர்கள் வந்த போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்கவில்லை.

ஆனால், தங்களை கனடாவில் அனுமதித்தற்காக, ஏதாவது ஒரு வகையில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவிக்க விரும்பிய இத்தம்பதியர், புதிதாக பிறந்த தங்களின் ஆண் குழந்தைக்கு அவரது பெயரை வைத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையன்று ஜஸ்டின் ட்ரூடோ ஆடம் பிலான் பிறந்தான்.

தற்போது 29 வயதாகும் முஹமத், டமாஸ்கஸில் முடிதிருத்தும் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஆனால், ஒரு முறை சிரியாவின் ராணுவத்தால் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னரும், மீண்டும் அவரை சிரியா ராணுவம் தேடி வருவதையும், மீண்டும் ஒரு முறை முஹமத் கைது செய்யப்படலாம் என்பதையும் அவர் குடும்பம் அறிந்தது.

மீண்டும் ஒரு முறை, அவர் கைது செய்யப்பட்டால், அங்குள்ள பலரைப் போல முஹமத் மீள முடியாத நிலை ஏற்படும்.

கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்றவுடன், சிரியா அகதிகளை கனடா ஏற்றுக் கொள்ள ஆரம்பித்த பின்னர், சிரியாவை விட்டு வெளியேறும் வாய்ப்பு முஹமத் குடும்பத்துக்கும் கிட்டியது.

ஐந்து ஆண்டுகளாக போர் நடந்து வந்த சிரியாவில் இருந்து வெளியேறும் வாய்ப்பு கிடைத்தவுடன் முஹமத் குடும்பத்தார் அந்த வாய்ப்பை பயன்படுத்தினர்.

குழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் தந்தை முஹமத்

பட மூலாதாரம், FACEBOOK/MUHAMMAD BILAN

படக்குறிப்பு, குழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் தந்தை முஹமத்

கிழக்கு மாகாணமான குயூபக்கில் உள்ள மான்ட்ரல் நகரில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்த இக்குடும்பம், இறுதியாக மேற்கு மாகாணத்தின் கால்காரிக்கு இடம்பெயர்ந்தனர்.

''கனடா மிகவும் பாதுகாப்பான நாடு. இங்கு எந்தப் போரும் நடைபெறவில்லை'' என்று பிபிசியிடம் தொலைபேசியில் தெரிவித்த ஆஃப்ரா பிலான், மேலும் கூறுகையில், ''எல்லாமே மாறியுள்ளது. எல்லாமே இங்கு நன்றாக உள்ளது, சிரியாவை போல அல்ல'' என்று தெரிவித்தார்.

கனடா வந்த புதிதில், தாங்கள் சில துயரங்களை சந்தித்ததாக ஒப்புக் கொண்ட ஆஃப்ரா, அங்குள்ள சூழல்களுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள, குறிப்பாக கடும் குளிரை தாக்குப் பிடிப்பது சிரமமாக இருந்தது என்று தெரிவித்தார்.

குழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'

பட மூலாதாரம், FACEBOOK/SAM NAMMOURA

படக்குறிப்பு, குழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'

தற்போது, ஆஃப்ரா சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். மேலும், அவரது கணவர் முஹமத் ஒரு மளிகைக் கடையில் பகுதி நேர பணியாளராக பணிபுரிகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் பெயரை தாங்கிய தங்களின் குழந்தை ஒருநாள் தனது பெயரை கொண்ட கனடா பிரதமரை சந்திப்பான் என்று இத்தம்பதியர் நம்புகின்றனர்.

''ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் நல்லவர்'' என்று தெரிவித்த ஆஃப்ரா, ''அவர் எங்களுக்கு மிகவும் உதவுகிறார். கனடாவில் எங்களை வாழ அனுமதித்த பிரதமருக்கு சிறிய அளவில் நன்றி தெரிவிப்பதற்கே அவரது பெயரை எங்களின் குழந்தைக்கு வைத்துள்ளோம். அவருக்கும், கனடா மக்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்'' என்று மேலும் தெரிவித்தார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த ஜனவரி மாதத்தில், 7 பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்த போது, துன்புறுத்தல், பயங்கரவாதம் மற்றும் போர் ஆகியவற்றால் தங்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்பவர்களுக்கு உதவ தனது அரசு உறுதி பூண்டிருப்பதாக சமூகவலைத்தளத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

பிற முக்கிய செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்