சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

தமிழகத்தை உலுக்கிய ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்பை முழுவதுமாக இந்திய உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலா நடராஜன் மற்றும் அவரது மைத்துனி இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹாவால் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்றவர்களுக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பின் மீதான மேல் முறையீட்டில் 2015ம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை தள்ளுபடி செய்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாயக் சந்திர கோஷ் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் , இன்று செவ்வாய்க்கிழமை, அளித்த தீர்ப்பில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ச்சிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

மேலும், அவர்கள் அனைவரும் விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட நான்காண்டு கால சிறைத்தண்டனையையும், 10 கோடி ரூபாய் அபராதத் தொகையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜெயலலிதாவுக்கு என்ன தீர்ப்பு ?

ஜெயலலிதாவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டவராக இருந்தும், அவர் இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு நின்று போகிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது.

ஆனால் அவருக்கு விசாரணை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூபாய் 100 கோடியை அவரது சொத்துக்களிலிருந்து எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு செய்ததாக செய்திகள் கூறுகின்றன.

தமிழக அரசியல் குழப்பத்தில் 2 மத்திய அமைச்சர்களுக்கு பங்கு: சுப்ரமணியன் சுவாமி

மேலும் தகவல்களுக்கு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க :பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்