இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

    • எழுதியவர், யூ.எல். மப்றூக்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பாலியல் ஊக்க மருந்துகளைப் பாவிப்பதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார்.

"பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது" எனக் கூறும் அவர், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

"மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவது, தரமற்ற மருந்துகளின் பயன்பாடு மற்றும் தவறான அளவுகளில் மருந்துகளைப் பயன்படுத்துகின்றமை இந்த உயிரிழப்புக்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன" எனவும் அவர் குறிப்பிட்டார்.

20 தொடக்கம் 25 வயதுகளுக்கு இடைப்பட்டோரும், 40 தொடக்கம் 45 வயதுகளுக்கு இடைப்பட்டோருமே, இந்த நிலைமையை அதிகமாக எதிர்கொள்வதாகவும் இரேஷா ஷோனி கூறினார்.

பல இளைஞர்கள் இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்துகளை பரிசோதனைக்காக அருந்தியுள்ளனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்துகளைப் பயன்படுத்துவதனால், மாதமொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று மரணங்கள் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது அதிக எண்ணிக்கை என்றும், இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவிக்கின்றார்.

தவறான தகவல்களைப் பரப்பும் ஆபாசப் படங்கள், பாலியல் விளம்பரங்கள்

இது தொடர்பில் மனநல மருத்துவர் யூ.எல். சரப்டீனிடம், பிபிசி தமிழ் பேசிய போது, பாலியல் தொடர்பான அறிவு சமூகத்தில் குறைவாகக் காணப்படுகின்றமை பாரியதொரு பிரச்னையாக உள்ளது என்கிறார். இதன் காரணமாகவே, பாலியல் உணர்வைத் தூண்டும் மருந்துகளை சிலர் தான்தோன்றித்தனமாக பெற்றுப் பயன்படுத்துவதாவும் கூறுகிறார்.

குறிப்பாக பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகின்றவர்கள் மத்தியில், தெளிவான அறிவின்மை காணப்படுகின்றமை பிரச்னையாக உள்ளது என்றும், இதனாலேயே பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்துகளை இவர்கள் நாடுகின்றனர் எனவும் அவர் விவரித்தார்.

"ஆபாசப் படங்கள் (Pornography) இலகுவில் இப்போது கிடைப்பதால் அதனை கணிசமானோர் பார்க்கின்றனர். இதன்போது நீண்ட ஆண்குறிகள், அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுதல் தொடர்பில் தவறான தகவல்கள் பரவுகின்றன. நீளமான ஆண்குறிகளைக் கொண்டவர்கள்தான் பாலியல் நடத்தையின் போது, பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பது தவறான நம்பிக்கை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீண்ட நேரம் உடலுறவுகொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் தவறான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் மனநில மருத்துவர் சரப்டீன் சுட்டிக்காட்டினார்.

"இவ்வாறான விளம்பரங்களைக் காண்பவர்களில் சிலர், ஆண்குறி விறைப்படைவதற்கான மருந்துகளை நாடுகின்றனர்".

"சில ஆண்களுக்கு ஆண்குறி விறைப்படையும் தன்மை குறைவாக இருக்கும். அதற்கு நோய்தான் காரணமாக இருக்கும் எனக் கூற முடியாது. சிலவேளைகளில் பய உணர்வு உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளும் இருக்கக் கூடும்" என அவர் விளக்கமளித்தார்.

ஆண்குறி விறைப்படைவதற்கு நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களின் செயற்பாடுகள் சீராக இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடும் அவர்; "இவற்றில் பிரச்னைகள் உள்ளபோது ஆண்குறி விறைப்படைவதில் கோளாறு ஏற்படலாம்" என்கிறார்.

"எனவே, ஆண்குறி விறைப்புத் தன்மையில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவ உதவியை நாடவேண்டும். அதன்போது குறித்த நபர் தொடர்பில் மருத்துவ பரிசோதகள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் மருந்துகள் தேவைப்படும் என்றால் மட்டுமே மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்".

"சில ஆண்களுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறுவதுண்டு. அவர்களுக்கும் நீண்ட நீரம் விறைப்படையும் தன்மையைப் பேண முடியாத நிலை காணப்படும். இவ்வாறானவர்கள்தான் பார்மசிகளில் தான்தோன்றித்தனமாக மருந்துகளை வாங்கிப் பாவிக்கின்றனர் என டொக்டர் சரப்டீன் குறிப்பிட்டார்.

இவர்கள் தவிர பாலியல் பிரச்னைகள் எதுவுமற்ற சிலர், பாலியல் நடத்தையில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பார்மசிகளில் மருந்துகளைப் பெற்றுப் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் கூறுகின்றார்.

"இவ்வாறானவர்கள் ஒரு விடயத்தைத் தெரிந்து கொள்தல் வேண்டும். பாலியல் நடத்தையில் உச்ச நிலையை அடைவதற்கு ஒப்பீட்டு ரீதியில் பெண்களுக்கு அதிக நேரம் எடுக்கும். ஆண்களுக்கு குறைவான நேரமே எடுக்கும். இது தொடர்பான கல்வி சார் அறிவு ஆண்களுக்கு இருக்குமானால், பாலியல் நடத்தையின் போது, உச்ச நிலையை ஒரே நேரத்தில் இருவரும் அடைந்து கொள்ள முடியும்" என்கிறார் மனநல மருத்துவர் சரப்டீன்.

"ஆண்களுக்கு விந்து வெளியேறிய பின்னர் அல்லது உச்ச நிலையை அடைந்த பின்னர், அவர்கள் மீண்டும் உடலுறவுக்குத் தயாராகுவதற்கு ஒப்பீட்டு ரீதியில் பெண்களை விடவும் அதிக நேரம் எடுக்கும். ஆனால் பெண்கள் இரண்டு, மூன்று முறைகள் தொடர்ச்சியாக உச்ச நிலையினை அடைவதுண்டு".

"பாலியல் நடத்தையின் போது உச்ச நிலையை அடைவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம், ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருக்கும். உச்ச நிலையை அடைவதற்கு குறைவான நேரத்தை எடுத்துக் கொள்வோர், தாம் குறைபாடுள்ளவர்கள் என நினைத்துக் கொள்வதுண்டு".

"இவ்வாறானவர்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெறாமலும், பிரச்னைகள் அடையாளங் காணப்படாத நிலையிலும் பார்மசிகளில் இதற்காக மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் கூறினார்.

"பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்துகள் - இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, இரத்தம் செல்லும் அளவை அதிகரிக்கிறது. இதனால் ஆண்குறிகளில் ரத்தம் தேக்கமடையும். அதனாலேயே ஆண்குறி விறைப்படைகிறது".

"இவ்வாறான மருந்துகளைப் பாவிப்பவர்களுக்கு ஏற்கனவே மாரடைப்பு வரக்கூடிய சாத்தியங்கள் இருக்குமானால், இந்த மருந்துப் பாவனை - மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும். இந்நிலைமை மரணத்தை ஏற்படுத்தும் நிலையினையும் உருவாக்கி விடும்" எனவும் அவர் எச்சரித்தார்.

மருத்துவ ஆலோசனையின்றி இவ்வாறான மருந்துகளைப் பாவிப்போர், அவ்வாறான மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை அல்லது வேறு அறிகுறிகளை உதாசீனம் செய்து விடுவதாகவும் மனநல மருத்துவர் சரப்டீன் சுட்டிக்காட்டினார்.

உளவியல் காரணங்கள்

இதேவேளை, பாலியல் நடத்தையின் போது சிக்கல்களை எதிர்கொள்வதற்கு உளவியல் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

"ஆண்குறி விறைப்படையாமைக்கு உளவியல் பிரச்னைகளும் காரணமாக இருப்பதுண்டு. பயம், தமது செயற்பாடுகளை ஊன்றிக் கவனிக்கும் தன்மை உள்ளிட்ட விடயங்கள் - உளவியல் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவதுண்டு. விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதிலும் உளவியல் ரீதியாக பிரச்னைகள் ஏற்படுவதுண்டு" எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, பாலியல் நடத்தையில் சிக்கல் உள்ளமைக்கு - உடல் சார்ந்த பிரச்சினைகளா? அல்லது உளவியல் பிரச்னைகளா காரணம் என்பதை அறிந்து கொள்ளாமலேயே, கணிசமானோர் தன்னிச்சையாக பார்மசிகளில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்கின்றனர் எனக் குறிப்பிடும் சரப்டீன்; "இது மிகவும் ஆபத்தானது" என எச்சரிக்கின்றார்.

இவ்வாறான மருந்துகள் ஆரம்பத்தில் பாலியல் நடத்தையில் வீரியத்தை அதிகரித்தாலும், அவற்றின் பக்க விளைவுகள் காலப்போக்கில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் எனவும் மனநல மருத்துவர் சரப்டீன் தெரிவிக்கின்றார்.

மருத்துவர்களிடம் செல்வதற்கு வெட்கம்

பாலியல் உணர்வைத் தூண்டும் மருந்து விற்பனை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சில தனியார் பார்மசி விற்பனையாளர்களிடம் பிபிசி தமிழ் சில தகவல்களை கோரிய போது, தமது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது எனும் உறுதிமொழியைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்கள் பேசினார்கள்.

பாலியல் உணர்வைத் தூண்டும் மருந்துகளை தம்மிடம் பெற்றுச் செல்வோரில் மிக அதிளவானோர், மருத்துவர்களிடம் செல்வதில்லை என்றும், "மருந்துச் சீட்டு இன்றி வருவோர், தமது பிரச்சினைகளை எம்மிடம் கூறும்போது அதற்கான குளிசைகளை நாங்கள் வழங்குவோம்" எனவும் பிபிசியிடம் பேசிய தனியார் பார்மசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று வகையான 'பொதுப் பெயர்'களைக் கொண்ட, 15 - 20 வகையான வர்த்தகப் பெயர்களுடைய, பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மாத்திரைகள் தமது பார்மசியில் உள்ளதாக பிபிசியிடம் பேசிய விற்பனையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த மாத்திரைகள் 100 ரூபா தொடக்கம் 283 ரூபா (இலங்கைப் பெறுமதியில்) விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தம்மிடம் இவ்வாறான மாத்திரைகளைக் கொள்வனவு செய்வோரில் அதிகமானோர் 45 வயது தொடக்கம் 50 வயதுக்கு உட்பட்டோர் என, அந்த விற்பனையாளர் கூறினர்.

மருத்துவரின் பரிந்துரையின்றி இவ்வாறான மாத்திரைகளை சுயமாகக் கொள்வனவு செய்து அவற்றினைப் பயன்படுத்தியவர்களில் சிலர், தமக்கு அந்த மாத்திரைகள் பயனளிக்கவில்லை என்றும், அவற்றினைப் பாவித்த பின்னர் தலைவலி போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும் தம்மிடம் கூறியதாக, பிபிசியுடன் பேசிய தனியார் பார்மசி விற்பனையாளர்கள் மேலும் கூறினர்.

மருத்துவர்களிடம் சென்று தமது பிரச்னைகளைக் கூறுவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான், பார்மசிகளில் இவ்வாறான மருந்துகளை இவர்கள் கொள்வனவு செய்கின்றனர் எனவும் பிபிசி தமிழுடன் பேசிய பார்மசி விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: