இலங்கை: "தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்"

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (03/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தமிழக அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்கள் எந்த விதமான பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கும் நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் கடந்த மாதம் வந்தடைந்த நேரத்தில், மலையக மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இப்போது வந்துள்ள இரண்டாவது தொகுதியில் வந்துள்ள நிவாரணப் பொருட்களை அத்தகைய குறைபாடுகள் எதுவுமின்றி சரியான முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதோடு, தமிழக அரசியின் நிவாரணப் பொருட்களை வழங்கும் போது, பதுளை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் வாகனப் போக்குவரத்துச் செலவுக்காக சாதாரண மக்களிடம் தலா 50 ரூபா வீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிருந்தன. இது வேதனைக்குரிய விடயம் ஆகும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "சாதாரண மக்களின் ஏழ்மை நிலையை அறிந்து நிவாரணம் வழங்குவதற்காக இலவசமாக வழங்கப்பட்டுள்ள பொருட்களுக்கு "வாகனச் செலவு" என்று கூறி பணம் அறவிட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் ஆகும். இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், ஒரு சிலரின் சமூக விரோத செயல்கள் ஊடாக மலையகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதோடு, தமிழக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே, இலவசமாக வழங்கபப்டும் பொருட்களை இலவசமாகவே விநியோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிலரின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டால் அது எமது சமூத்துக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார் என்கிறது அந்த நாளிதழ் செய்தி.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போலீஸ் அதிரடிப் படை

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்படும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த போலீஸ் விசேட அதிரடிப்படையினர் (Special Task Force) ஈடுபடுத்தப்படவுள்ளதாக நியூஸ் ஃபர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், "அமைதியின்மையில் ஈடுபடுவோர் போலீஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, போலீஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், போலீஸாரின் கடமைகளை இலகுவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக சில விசாரணைகள் மற்றும் களப்பணிகள் தடைபட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகைய நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சோதனையின்போது 'வெடிகுண்டு' எனக் கூறிய பயணி

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 1:30 மணியளவில் வெளிநாடு செல்வதற்கான விமானத்தின் பயணிகளுடைய உடைமைகளை ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, 63 வயதான ஒரு பயணி தனது பையில் என்ன உள்ளது எனக் கேட்ட ஊழியரிடம் 'வெடிகுண்டு' உள்ளது எனக் கூறியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், "கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 1:30 மணியளவில் வெளிநாடு செல்வதற்கான விமானம் தயார் நிலையில் இருந்தது. பயணிகளின் உடைமைகளை ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 63 வயதான நபரும் அவருடைய மனைவியும் அந்த விமானத்தில் பயணிக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் உடைமைகளை விமான ஊழியர்கள் பரிசோதித்தனர். அந்தத் தம்பதியின் பை ஒன்றை விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்துகொண்டிருந்தபோது, ஒரு பையில் என்ன உள்ளது என்று ஓர் ஊழியர் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர் 'வெடிகுண்டு' எனக் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். அந்த நபரின் பையை பாதுகாப்புப் படையினர் பரிசோதனை செய்ததில் அந்தப் பையில் எந்த வித வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு உள்ளது எனப் போலியாக மிரட்டல் விடுக்கும் வகையில் கூறிய நபரையும் அவருடைய மனைவியையும் பாதுகாப்புப் படையினர் போலீஸில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அந்த நபரைக் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணைக்குப் பிறகு, அந்த நபரை ஜாமினில் விடுவித்தனர்," என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

"கோயில் சொத்து வருவாயை முறையாக வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்"

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால் தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டையே தாக்கல் செய்ய முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, கோயில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் 75-க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்திவிட்டதாகவும் 5 உத்தரவுகள் மாநில அரசுக்குத் தொடர்பில்லாதது என்றும் 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. சிலவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும், மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

பின்னர் நீதிபதிகள், கணக்குத் தணிக்கைக்கு ஒரே ஒருவர் தலைமையில் 5 அலுவலர்கள் கொண்ட குழு போதாது என்றும் குறைந்தபட்சம் 15 தணிக்கையாளர்கள் உள்ள குழுவை அமைக்க வேண்டுமென்றும் அரசிடம் தெரிவிக்கும்படி அறிவுத்தினர்.

மேலும் கோயில் நிலங்களை மீட்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்றும் ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றவும் கட்டடங்களைப் பூட்டி சீல் வைக்கவும் தர மறுத்தால் அவர்களின் தனிப்பட்ட சொத்துகளை முடக்கவும் அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, அறநிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்று நீதிபதிகள் உறுதிபடத் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தினமணி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: