You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் 9 வயது சிறுமி கொலை: நீதி கிடைக்க உறுதியளிக்கிறேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கை அட்டாலுகம பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை (மே 27) முற்பகல் 10 மணியளவில் சென்றுள்ளார்.
இவ்வாறு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த சிறுமி கோழி இறைச்சியை வாங்கிவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பும் காட்சிகள், அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், குறிப்பிட்ட சிறுமியைத் தேடுவதற்காக காவல்துறையின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
பண்டாரகம காவல்துறையினருக்கு மேலதிகமாக, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிறுமியின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சுமார் இருபதுக்கும் அதிகமானோரின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன் ட்விட்டர் பக்கத்தில், "ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன். இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்" என தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதர் - இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த, இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேலைத்திட்டம் இறுதி செய்யப்படும் வரையில், இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு, உயர்ஸ்தானிகர் இந்திய நிதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.
அத்தியாவசிய வர்த்தகப் பொருட்கள் மற்றும் எரிபொருள் உட்பட கொடுப்பனவு துறையில் உள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, இந்தியாவினால் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டத்தை அதிகரித்தல் மற்றும் மறுசீரமைத்தல் என்பன தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு கட்சித் தலைவர்கள் பூரண ஆதரவு
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலத்தை விரைவில் நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக, 'தினகரன் வாரமஞ்சரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மே 27ஆம் தேதி மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அச்செய்தியில், "21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் அவதானிப்பு மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது தற்போதைக்கு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்ட நகலை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கிடையே 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவோர் நீதி அமைச்சரைத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்