You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை பொருளாதார நெருக்கடி: பெட்ரோல் தேட ஏற்பட்ட தாமதத்தால் பச்சிளம் குழந்தை பலி
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, தற்போது உயிரை காவுகொள்ளும் அளவிற்கு உக்கிரமடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வரிசைகளில் காத்திருந்த சில வயோதிகர்கள் கடந்த காலங்களில் உயிரிழந்திருந்தனர்.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவொன்று நேற்றைய தினம் திடீரென உயிரிழந்துள்ளது.
சிசுவிற்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தை அடுத்து, குறித்த சிசுவை மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றோர் முயற்சித்துள்ளனர்.
இரண்டு நாட்களேயான அந்த சிசு, தாய் பால் குடிப்பதை தவிர்த்தமையினால், சிசுவின் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சிசுவை மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றோர் முயற்சி செய்துள்ளனர்.
எனினும், உரிய நேரத்தில் சிசுவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிக்கு (ஆட்டோ) பெட்ரோல் இல்லாத காரணத்தால் சிசுவை அழைத்து செல்ல முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர். பெட்ரோல் தேடுவதற்கு ஒரு மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு சிசு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் தியதலாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் சிசு உயிரிழந்துள்ளது.
இந்த உயிரிழப்பு தொடர்பில் தியதலாவை மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி ஷானக்க ரொஷான் பத்திரண, தனது ஃபேஸ்புக்கில் பதிவொன்றை பதிவேற்றியுள்ளார்.
''தியதலாவை மருத்துவமனையில் எனது 86வது பிரேத பரிசோதனை. அது வேதனையளிக்கும் மரணம். இரண்டு நாட்களேயான இந்த சிறு பெண் குழந்தை, தாய் பால் குடிப்பது குறைந்தமையினால், உடல் மஞ்சள் நிறமாகியது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்துள்ளது. ''
''ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு அழைத்து வர தந்தையின் முச்சக்கரவண்டிக்கு பெட்ரோலை தேடுவதற்காக ஒரு மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு 22mg/dl குறைவடைந்தது. தியதலாவை மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது சிசு சிரமப்பட்டு மூச்சு எடுத்தது. தியதலாவை மருத்துவமனையில் சிசு உயிரிழந்தது. அந்த ஒரு மணிநேரம் தாமதம் ஏற்படவில்லை என்றால், சிசுவை காப்பாற்றி இருக்கலாம்.''
''ஒருவருக்கு ஏதாவது ஒன்று ஏற்பட்டால் மாத்திரம், அந்த வேதனையை உணர்ந்துக்கொள்ள முடியும். 9 மாதங்கள் வயிற்றில் சுமந்து, 2 நாட்கள் மடியில் வைத்திருந்த சிசு, பெட்ரோல் ஒரு லிட்டர் இல்லாமையினால் உயிரிழந்தது என்பது வாழ்நாள் முழுவதும் வேதனையானது. சடலத்தை வெட்டுவதற்கும் கவலையாக இருந்தது. அனைத்து உறுப்புகளும் சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்த குழந்தை அது. இந்த அரசியல்வாதிகளுக்கு இடி விழ வேண்டும். இந்த மோசமான நாட்டில் வாழ்வதை விடவும், இந்த சிசு சென்றதை நல்லது என நான் பின்னர் யோசித்தேன்" என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தியதலாவை மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி ஷானக்க ரொஷான் பத்திரண பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தமது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு கூட தற்போது பாரிய சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாடொன்றிற்கு தேவையான அத்தியாவசிய மருந்து வகைகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, உணவு பொருட்களின் விலையேற்றம் என இலங்கை வாழ் மக்கள் நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே, இந்த சிசு உயிரிழந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்