இலங்கை நெருக்கடி: ரணில் விக்ரமசிங்க அரசின் பொருளாதார முன்னேற்ற திட்டங்களுக்கு முக்கிய கட்சிகள் ஆதரவு

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமைக்கு முதலில் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டாலும், தற்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களில் சிலர், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, துஷ்மந்த மித்ரபால ஆகியார் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது குறித்து இன்றைய சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு அந்த சுயாதீன குழுக்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

புதிய வரவு செலவுத்திட்டமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''நாடு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், நாட்டை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கட்சி பேதங்களை ஒரு புறம் வைத்து விட்டு, ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்பதை பிரதமர் எம்மிடம் கூறியிருந்தார். சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனையை நாமே கொண்டு வந்தோம் என்பதை நாம் நினைவுப்படுத்தினோம். இதன்படி, கட்சித் தலைவர்களுடனான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். எமக்கு அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு எண்ணம் கிடையாது. எனினும், நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதனால், அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது, நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு எமது ஒத்துழைப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம். நாட்டின் நிலைமையை அவதானித்து புதிய வரவு செலவுத்திட்டமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான திட்டமொன்று விரைவில் கொண்டு வரப்படவுள்ளது." என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிடுகின்றார்.

21வது திருத்தத்தை விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

''21வது திருத்தத்தை விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பில் எமது குழு 21வது திருத்த சட்டமூலமொன்று சமர்ப்பித்துள்ளது. அந்த சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்களை நடத்த அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்" என உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

இதேவேளை, நாட்டில் தட்டுப்பாடு நிலவும் எரிவாயு, எரிபொருள், மருந்து மற்றும் மின்சாரம் ஆகிய நான்கு விடயங்கள் குறித்தும், பிரதமருடனான சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை வழமை போன்று தடையின்றி மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தாம் தயார் என பிரதமருக்கு அறிவித்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்களுக்கு பூரண ஆதரவை வழங்க பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஏகமனதாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

எனினும், அரசாங்கத்தில் பதவிகளை எதையும் பெறாமல், நாடாளுமன்ற செயல்முறையின் கீழ் பூரண ஆதரவை வழங்கவே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் சாதகமாக்கிக் கொள்ள மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு புறம்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் செயற்பாடுகள் எடுக்கப்பட்டால் குறித்த ஆதரவை நிபந்தனையின்றி இடைநிறுத்துவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பெரும்பான்மை உறுதியாகியது

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற நிலையில், எதிர்கட்சிகள் முதலில் எதிர்ப்பை வெளியிட்டன.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவின் நலன் சார் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் பொருளாதார நலன்சார் திட்டங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு தற்போது கிடைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: