You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை அரசுப் பணியாளர்களின் துயரம்: “விலைவாசி அதிகரித்தாலும் ஊதியத்தில் மாற்றம் இல்லை” -
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பொருட்களுக்கான விலை அதிகரிப்பு - இலங்கை மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது. அன்றாட செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 'இன்று எந்த பொருளின் விலை அதிகரிக்கப் போகிறதோ' என்கிற பயத்துடன் அவர்களின் நாட்கள் விடிகின்றன.
எரிபொருள்களுக்கான விலைகள் கடந்த 19ஆம் தேதி அதிகரிக்கப்பட்டன. இதன்படி 254 ரூபாவாக விற்கப்பட்ட ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 338 ரூபாவானது. ஒரு லீட்டர் டீசலின் விலை 176 ரூபாவில் இருந்து 289 ரூபாவாக உயர்த்தப்பட்டது. 2800 ரூபாவுக்கு விற்கப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை, 26ஆம் தேதி 4860 ரூபாவாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே அரிசி, கோதுமை, இறைச்சி வகை, பால்மா, சீனி மற்றும் மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை, அதிகரித்த விலைகளிலேயே வாங்கும் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
90 ரூபாவுக்கு கிடைத்த ஒரு கிலோ அரிசி, தற்போது 200 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கோதுமை 110 ரூபாவிலிருந்து 230 ரூபாவாக உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ 100 ரூபாவுக்குக் கிடைத்த சீனியின் தற்போதைய விலை 230 ரூபா. பாமாயிலின் விலை 350 ரூபாவிலிருந்து 950 ரூபா வரை அதிகரித்திருக்கிறது. பருப்பு ஒரு கிலோ 230 ரூபாவுக்கு சில்லறை விலையில் கிடைத்து வந்தது. இப்போது அதன் விலை 500 ரூபா.
இந்த நெருக்கடிகளை ஈடுசெய்யும் பொருட்டு நாளாந்த கூலி அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் - தமக்கான கூலித் தொகைகளை உயர்த்தியுள்ளனர். முன்னர் நாளொன்றுக்கு 2000 ரூபாவை பெற்றுவந்த சாதாரண கூலித் தொழிலாளிகள் இப்போது 2500 ரூபாவாக தமது கூலியை உயர்த்தியுள்ளனர். முடிதிருத்தும் தொழிலாளர்களும் இவ்வாறு வாழ்க்கைச் செலவுக்கேற்ப தமது கட்டணங்களை அதிகரித்துள்ளனர்.
ஆனால், அரச பணியாளர்களின் ஊதியம், தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப அதிகரிக்கப்படவில்லை என்பது - அந்தத் துறை சார்ந்தோரின் புகாராக உள்ளது.
"இருவரின் வருமானமே போதாமல் உள்ளது"
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கே.எம். கபீர் - ஓர் அரசுப் பணியாளர். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வருகின்றார்.
2012ஆம் ஆண்டு முதல் அரச சேவையில் பணியாற்றி வரும் இவரின் தற்போதைய சம்பளம் 50 ஆயிரம் ரூபா. இதில் ஓய்வூதிய நிதியத்துக்காக 2000 ரூபா கழிக்கப்பட்டு, 48000 ரூபாவை மிகுதியாகப் பெறுகின்றார்.
கபீரின் மனைவியும் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார். அவரின் சேவைக்காலம் கபீரை விடவும் சற்றுக் குறைவு என்பதால், அவருக்கு 46000 ரூபா சம்பளம் கிடைக்கின்றது.
இப்படி தாங்கள் இருவருமாக மாதம் 94 ஆயிரம் ரூபாவை சம்பளமாகப் பெறுகின்ற போதிலும், அந்தத் தொகையானது ஐந்து பேரைக் கொண்ட (கணவன், மனைவி, மூன்று பிள்ளைகள்) தங்கள் குடும்பத்துக்கான செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை என்கிறார் கபீர்.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத் தலைவராகவும் கபீர் பணியாற்றி வருகின்றார். சுமார் 2500 உறுப்பினர்கள் இந்தத் தொழிற் சங்கத்தில் உள்ளனர்.
"இலங்கையில் சுமார் 16 லட்சத்து 50 ஆயிரம் அரசு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் அதிகமானோரின் சம்பளங்கள், தங்கள் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யப் போதுமானவையாக இல்லை" எனக் கூறும் கபீர்; "அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, பொருட்கள் மற்றும் சேவைகளை 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த விலைகளில் வழங்கினாலே போதுமானது" என்கிறார்.
"அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு நீண்ட காலமாக தொழிற் சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வந்தன. அதற்கு அமைவாக, 2022 ஜனவரி 4ஆம் தேதியன்று, அரச ஊழியர்களின் சம்பளத்துடன் 5000 ரூபா கொடுப்பனவு மாதாந்தம் சேர்த்து வழங்கப்படும் என தற்போதைய அரசாங்கம் அறிவித்தது. ஆனாலும் ஒரு கையால் கொடுத்து விட்டு மறு கையினால் பறிப்பது போன்று, அரச ஊழியர்களுக்கு வழங்கிய 5 ஆயிரம் ரூபாவை, பொருட்களுக்கான விலைகளையும் சேவைகளுக்கான கட்டணங்களையும் அதிகரித்தமையின் மூலம் - இந்த அரசாங்கம் பறித்துக் கொண்டது" என கபீர் குற்றஞ்சாட்டுகின்றார்
தூர நோக்கற்ற நடவடிக்கைகள்
"நாடு இவ்வாறான பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குவதற்கு, இந்த ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற நடவடிக்கைகள்தான் காரணமாகும். முன்னர் வருடமொன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுகின்றவர்கள் அனைவரும் - அரசுக்கு வருமான வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 3 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுகின்றவர்கள்தான் வருமான வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்குக் கிடைத்து வந்த பெருந்தொகை வருமானம் இல்லாமல் போனது".
"இதேபோன்று ஒரு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தேறிய சம்பளத்தைப் பெறும் அரச மற்றும் தனியார் ஊழியர்கள், PAYEE TAX எனும் வரியினை 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசுக்குச் செலுத்தி வந்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வரி நீக்கப்பட்டது. இதன் மூலமும் அரசு பெற்றுவந்த பெருந்தொகை வருமானம் இழக்கப்பட்டது" என கபீர் விவரித்தார்.
தமது வாழ்விடங்களை அண்டிய அலுவலகங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள், அவர்களின் சம்பளத்தை வைத்துக் கொண்டு தற்போதைய விலைவாசியில் குடும்பச் செலவுகளை ஈடுசெய்யாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளி மாவட்டங்களில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகின்ற அரச உத்தியோகத்தர்கள் இதை விடவும் மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் எனவும் கபீர் சுட்டிக்காட்டினார்.
வெளி மாவட்டத்தில் பணியாற்றுவோரின் நிலை
அம்பாறை மாவட்டம் பாலமுனையைச் சேர்ந்த ஏ.எல். ஜெஸ்மிர் தனது ஊரிலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருகோணமலையில் - நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வருகின்றார்.
ஊருக்கு ஒவ்வொரு நாளும் வந்து போக முடியாது என்பதால், அவர் அங்கேயே வாடகை இடமொன்றில் தங்கி - அலுவலகம் செல்கிறார்.
"நான் 45 ஆயிரம் ரூபா சம்பளம் பெறுகின்றேன். வெளி ஊரில் தங்குவதால் எனது நாளாந்த சாப்பாடு மற்றும் வாடகைச் செலவு போன்றவற்றுக்காக மட்டும் ஆகக்குறைந்தது 30 ஆயிரம் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது" என்கிறார் ஜெஸ்மிர்.
தனது மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியின் பெற்றோருடன் ஜெஸ்மிர் வசித்து வருகின்றார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் காரணமாகக் காட்டி, 6 மாதங்களுக்கான தற்காலிக இடமாற்றமொன்றினைப் பெற்று, இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது சொந்த மாவட்டத்துக்கு ஜெஸ்மிர் வந்துள்ளார். ஆனாலும் இப்போது கூட, அலுவலகத்துக்குச் சென்று வர சுமார் 45 கிலோமீட்டர் - மோட்டார் சைக்கிளில் அவர் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்காக தினமும் ஒரு லீட்டர் பெட்ரோல் செலவாகிறது என அவர் கூறுகின்றார்.
அரசுப் பணிக்கும் அதனால் வரக்கூடிய ஊதியத்துக்கும் அதிக மவுசு இருக்குபட்சத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அவர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் சூழலே ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்