மஹிந்த ராஜபக்ஷ உரை இனவாதத்தை பிரதிபலித்ததா? - இலங்கை தமிழர்களின் பார்வை

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஏதுவாக அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை கைவிடுமாறு அந்நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்நாட்டு மக்களுக்கு பதிவு செய்யப்பட்ட காணொளி வாயிலாக நேற்று அவர் ஆற்றிய சிறப்புரையின்போது தற்போதைய சூழலை எதிர்கொள்ள இரவு, பகலாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தத் தொடங்கிய பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்காக இந்த சிறப்புரையை மஹிந்த ராஜபக்ஷா வழங்கினார்.

இந்த உரையின்போது, இலங்கை கடந்த காலங்களில் எதிர்கொண்ட யுத்தம் மற்றும் கலவரங்கள் தொடர்பாக அவர் விரிவாக பேசினார். இன ரீதியாக இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் மற்றும் இனங்களுக்கு இடையில் நடந்த வன்முறைகளை நினைவுகூர்ந்து சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசு தவித்து வரும் வேளையில், அரசுக்கு எதிராக இன, மத மாச்சர்யங்களைக் கடந்து மக்கள் ஒன்று சேர்ந்து போராடி வரும் வேளையில், 2000களில் நடந்த உள்நாட்டுப் போரின்போது நடந்த இனவாத மோதல்களை மேற்கோள்காட்டி, அத்தகைய நிலையை இல்லாது செய்தது தமது முந்தைய அரசாங்கமே என்று ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மஹிந்தவின் இந்த கருத்துக்கள், மக்கள் பரவலான விமர்சனங்களை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது.

"எங்களை பிரிக்க முடியாது"

நாட்டின் இன்றைய பிரச்னைகளை பற்றிப் பேசாமல், பழைய விடயங்களை பிரதமர் தனது உரையில் பேசியதாக கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த அபிக்ஷா கூறுகிறார்.

''எங்களுக்காக போராடுகிறோம். மக்களுக்காக போராடுறோம். நாட்டு பிரச்னைகள பேசாம, பழைய விஷயங்கள எல்லாம் பேசியிருக்காரு பிரதமர். அது எங்களுக்கு தேவையே இல்லை. இன்னைக்கு நாட்டு மக்களுக்கு என்ன பிரச்னையோ அத பத்திதான் அவர் பேசனும். அதற்காக ஒரு தீர்வு தேவை. அதற்காகத் தான் இங்கே போராடுகிறோம்," என அபிக்ஷா தெரிவிக்கின்றார்.

"மக்கள் தெளிவாகி விட்டனர்"

மல்கி போயுள்ள உணர்வுகளை துண்டும் வகையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

உமாச்சந்திரா பிரகாஷ் என்ற பெண்மணி, ''ஒரு நாட்டை இளைஞர்களால் கட்டியெழுப்புவதற்கு இனங்களுக்கு இடையிலான முறுகல்களை நாங்கள் பேசாமல் தவிர்த்து விட்டு, எங்களிடம் இருக்கக்கூடிய ஒற்;றுமைகளை பேசி, எங்களிடம் இருக்க வேண்டிய பொது பண்புகளை பேசி நாட்டை இளைஞர்களால் கட்டியெழுப்ப வேண்டும். ஆனால், அவர்கள் மீண்டும் அதே தவறை செய்கிறார்கள்," என்கிறார்.

"இனத்தால், மதத்தால் மக்களை பிரித்து, அந்த பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தங்களுடைய குடும்ப அரசியலை தாங்கள் வலுவடையச் செய்து, இந்த இலங்கை அரசாங்கத்துடைய கிட்டத்தட்ட 75 வீதத்திற்கும் அதிகமான வரவு செலவுத்திட்ட நிதியை ஒரே குடும்பம் அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு குறுகிய சிந்தனையோடு பயணிப்பதாகவே நான் பார்க்கின்றேன்," என்கிறார் அவர்.

"பிரதமரின் உரையில் இனவாதம் மட்டுமில்லாமல், இனவாத ரீதியிலான உணர்வுகளை துண்டும் கருத்துக்கள் இருந்ததை பார்க்க முடிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றாக போராடும் போது, இவ்வாறான இன, மத ரீதியிலான பிரித்தாளும் சூழ்ச்சியை கைவிட்டு, விட்டு ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு பிரதமர் செயல்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு," என்கிறார் உமாச்சந்திரா பிரகாஷ்.

"நிச்சயமாக இனி இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இடம் இல்லை என்பதை மக்களே சொல்லி விட்டார்கள்,," என்றும் அவர் தெரிவித்தார்.

"இருண்ட உலகில் பிரதமரும் அவரது குடும்பமும்"

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பம் இந்த நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவரது குடும்ப அரசியல் இல்லாமல் போக போகின்ற எண்ணப்பாடு அவரது நேற்றைய உரையிலிருந்து தெளிவாகியதாக அரசியல் ஆய்வாளர் ஜனகன் விநாயகமூர்த்தி கூறுகிறார்.

''மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதே தெரியாத பிரதமராகவே மஹிந்த இருக்கிறார். அது தான் முதலாவது பிரச்னை. எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், நாட்டை கட்டியெழுப்ப எதிர்கட்சி வரவில்லை என பிரதமர் கூறியுள்ளார். எனினும், இந்த ஜனாதிபதியின் கீழ் நாங்கள் பணியாற்ற முடியாது என எதிர்கட்சிகளும், இந்த ஜனாதிபதியின் கீழான ஆட்சி வேண்டாம் என மக்களும் போராடி வருகின்றனர். இந்த விடயத்தை கூட புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் பிரதமர் இருக்கிறார்," என்கிறார் ஜனகன் விநாயகமூர்த்தி.

"பிரதமர் இன்று வரை தனக்கான வரம்புக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இன, மத வேறுபாடின்றி, ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோஷத்திற்காக ஒன்றிணைந்துள்ளார்கள். ஆனால், பிரதமர் இன்னுமே மக்களை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அவரும், அவர் சார்ந்த குடும்பமும் ஒரு வரையறைக்குள் உள்ளனர். இவர்கள் உருவாக்கிய இனவாதத்தை கடந்து மக்கள் இன்று வெளியே வந்து விட்டார்கள். அனைவரும் இலங்கையர்களாக வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கு வந்து விட்டார்கள். மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலைக்குள் அவர்கள் உள்ளனர். இந்த நாடு மற்றும் நாடு சார்ந்தவர்களுடைய, சர்வதேசத்துடைய எண்ணப்பாடுகளை என்னவென்றே விளங்காமல், வாழக்கூடிய ஒரு இருண்ட யுகத்திற்குள் இவர்கள் போய் விட்டார்கள். அவர்கள் இருண்ட யுகத்திற்குள் வாழ்ந்து கொண்டு பார்ப்பதால் தான் தற்போதைய நிலைமை, இருண்ட யுகம் போல அவர்களுக்குத் தோன்றுகிறது. இருட்டுக்குள் இருந்து இருட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் வெளிச்சத்தை நோக்கி வந்து விட்டார்கள். பிரதமரும், அவரது குடும்பமும் இந்த நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்படலாம் என அவருக்குள் இருக்கும் எண்ணம் அவருடைய உரையில் மிகத் தெளிவாகத் தெரிகிறது" என்கிறார் ஜனகன் விநாயகமூர்த்தி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: