இலங்கை பொருளாதார நெருக்கடி: ''மலையக மக்களுக்கு இந்த பிரச்னை பழகி போச்சு, கொழும்பில் உள்ளவர்களுக்கு இது புதுசு"

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியும் மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை கடந்த மாதம் 31ம் தேதி சுற்றி வளைத்த ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

அன்று முதல் தொடர்ந்தும் நாடு முழுவதும் பல்வேறு வகையிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த 9ம் தேதி ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்ட இளைஞர், யுவதிகள் தன்னெழுச்சி போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், போராட்டத்திற்கு வருகைத் தந்த மலையக இளைஞர்கள், அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்திற்கு வலு சேர்த்திருந்தனர்.

போராட்டத்தில் கலந்துக்கொண்ட மலையக இளைஞர்கள், பிபிசி தமிழிடம் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து பேசினர்.

"சாப்பிடுவதே கேள்விக்குறி"

மலையக மக்களுக்கு உணவு கிடைப்பதே இன்று கேள்வியாகியுள்ளதாக மலையகத்திலிருந்து போராட்டத்தில் கலந்துக்கொண்ட திவிஷேக் தெரிவிக்கின்றார்.

''இன்றைக்கு இலங்கையில் விலைவாசி எல்லா விதத்திலும் உயர்வாக உள்ளது. இன்றைய அளவில் இலங்கை நாட்டு மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கையில் எத்தனையோ துறைகள் கொண்டு மிக இலகுவாக வருமானம் ஈட்ட முடியும். ஆனாலும் வருமானம் ஈட்ட முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. மலையகத்தில் நிறைய போராட்டங்கள் மூலம் நிறைய விஷயங்களை பெற்றெடுத்தோம். இது எங்களின் உரிமை. நாங்கள் கேட்பது வெறும் சலுகைகள் அல்ல. எப்படி உணவளிப்பது என்பது மலையகத்தில் மிகப் பெரிய கஷ்டமாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் ரஷ்யா - யுக்ரேன் போரால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி குறைந்துள்ளது,

இலங்கை நாட்டின் மொத்த ஏற்றுமதியில் மலையகத்தின் தேயிலை மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், மலையகத்தின் அரசியல்வாதிகள், மலையகத்தின் பிரதிநிதிகள் இதை எந்த இடத்திலும் பதிவு செய்வது இல்லை. இப்ப இந்த 5 ஆண்டுகளாகதான், சுற்றுலாத்துறை தலைதூக்கி உள்ளது. கொரோனா காலத்தில்கூட தேயிலை தொழிற்சாலைகள் எந்த நேரத்திலும் மூடாமல் இயங்கிக் கொண்டே இருந்தது ஆனால் அப்படிப்பட்ட மலையக மக்கள் இன்றைக்கு மாபெரும் துன்பத்தை எதிர்கொள்கிறார்கள். மழை வெயில் பார்க்காமல் வேலை செய்தும், சம்பள பிரச்னை உள்ளது. எப்படி சாப்பிடுவது என்பதே இன்று மலையக மக்களுக்கு கேள்வியாக இருக்கு" என திவிஷேக் தெரிவிக்கின்றார்.

"மலையக மக்களுக்கு பழக்கப்பட்ட பிரச்னை"

கொழும்பில் உள்ளவர்களுக்கு இப்போது தான் இந்த பிரச்னை ஆரம்பித்து இருக்கு, ஆனால், மலையக மக்களுக்கு இது எல்லாம் பழக்கப்பட்ட பிரச்னை என மலையகத்தைச் சேர்ந்த கெவின் பிரசாந்த் தெரிவிக்கின்றார்.

''நாட்டில் விலைவாசி அதிகரித்து கொண்டு வருகிறது. மலையக மக்கள் அந்தளவுக்கு கஷ்டப்படுறாங்க. இங்க உள்ளவங்களுக்கு தெரியாது. இப்ப தான் கொழும்புல உள்ளவங்களுக்கு இது எல்லாம் பிரச்னையா தெரியுது. இது மலையக மக்களுக்கு எப்பவோ பழகிப் போன ஒரு விசியம். இத அவங்க பழகிட்டு தான் இருக்காங்க. இன்னமும் இது ஒரு பெரிய பிரச்னையா அவங்களுக்கு தெரியாது.

மாவு விலை கூடி இருக்கு. அரிசி விலை கூடி இருக்கு. ஆனால் அங்க உள்ளவங்களுக்கு சம்பளம் அப்படியே தான் இருக்கு. இங்க உள்ளவங்களுக்கு இப்ப தான் பிரச்னையே தொடங்குது. அங்க உள்ளவங்களுக்கு பிரச்னை தொடங்கி எத்தனையோ வருசமாச்சி. அதுக்கான முயற்சிய அங்கவுள்ள அமைச்சர் எடுக்கவே இல்ல. அங்கவுலுள்ள அமைச்சர் இதை கண்டுக்கொள்ளவே இல்லை. ஆனா கொழும்பில் உள்ளவர்களுக்கு இப்ப தான் பிரச்னை. அதுக்கு எல்லாரும் ரோட்டுக்கு எறங்கிட்டாங்க.

மலையக மக்களுக்கு பிரச்னை ஆரம்பித்து பல வருடமானது. இன்னும் அதை யாரும் கண்டுக்கவே இல்லை. இது எல்லாம் அவங்களுக்கு பிரச்னையா தெரியாது. ஏனா அதை அவங்க பழகுனவங்க. பல நாள் கஷ்டத்துலயே வாழ்ந்து பழகுனவங்க." என கெவின் பிரசாந்த் கூறுகின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :