You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை கடலில் எரிந்து மூழ்கும் கப்பல்: மிக ஆபத்தான அமிலங்கள் சிந்தும் அபாயம்
இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்துக்கு சில மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற எண்ணெய் கப்பல், தீ விபத்து காரணமாக மூழ்கி வரும் வேளையில், அதனால் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
இரு வாரங்களாக கப்பலில் எரிந்துவந்த தீ இரு தினங்களுக்கு முன்பு அணைக்கப்பட்டது. இருப்பினும், அந்த கப்பலின் எரிபொருள் தொட்டியில் டன் கணக்கில் உள்ள எரிபொருள் மற்றும் கன்டெய்னர்களில் உள்ள ரசாயனம் கடலில் கலந்தால் அந்த பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் அழியும் ஆபத்து இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த கப்பல் உடைந்து மூழ்காமல் இருக்க அதில் ஏற்பட்ட தீயை அணைக்க கடந்த சில நாட்களாக இலங்கை கடற்படையுடன் சேர்ந்து இந்திய கடற்படை தொடர் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அந்த கப்பலின் சில பகுதிகள் உடைந்ததால் அது மூழ்கத்தொடங்கியது.
மேலும், கடல் அலை சீற்றம் மற்றும் மழைக்கால காற்றின் வேகம், கப்பலை மீட்டெடுக்கும் முயற்சியில் தொய்வை ஏற்படுத்தியது.
முன்னதாக, கடந்த புதன்கிழமை கப்பல் சிதைவுகளை மீட்கும் நிபுணர்கள், கடலோர பகுதியில் அந்த கப்பலால் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் முயற்சியாக அதை ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால், கப்பலின் பின்பகுதி, கடல் படுகையில் முட்டியிருந்ததால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கப்பலின் உரிமையாளரான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ், கப்பலின் பின் பகுதி, 69 அடி ஆழத்தில் உள்ள கடல் படுகையில் தட்டி நிற்பதாகவும் முன் பகுதி மெதுவாக கடல் படுகை நோக்கி அழுந்தி வருவதாகவும் தெரிவித்தது.
இதேவேளை, இலங்கை கடற்படையின் செய்தித்தொடர்பாளர், அந்த கப்பலின் நங்கூரமிடும் முன் பகுதி மேல் நோக்கி இருப்பதாக கூறுகிறார்
"கப்பலின் பின் பகுதி கடல் படுகையில் முட்டியிருந்தாலும், அதன் மேல் அடுக்கு மற்றும் மேடைப் பகுதி மேல்நோக்கியே உள்ளது."
"இதுவரை கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை. ஆனால், அத்தகைய நிலை ஏற்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன," என்று கடற்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஒருவேளை கடலில் எண்ணெய் கலக்க நேரிட்டால், அது பரவாமல் தடுக்க எண்ணெய்யை பிரித்தெடுக்கும் ரசாயனத்தை தூவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கடல்சார் உயிரின பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பிபிசியிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆய்வாளர் டாக்டர் அஜந்தா பெரேரா, கடலில் கப்பல் மூழ்கும் சம்பவம் மிக மோசமான சுற்றுச்சூழல் நிகழ்வு," என்று கூறினார்.
"அந்த கப்பலில் உள்ள நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட சரக்குகள் அனைத்தும் ஆபத்தானவை. அது கசியும்பட்சத்தில் கடல் பரப்பு முழுமையாக பாதிக்கப்படும்," என்று அஜந்தா தெரிவித்தார்.
இந்த கடலோர பகுதி, நீர்கொழும்பு நகருக்கு அருகே உள்ளது. எழில்கொஞ்சும் கடற்கரைகள் இந்த கடலோர பகுதியிலேயே உள்ளன. இந்த இடம் ஏற்கெனவே, எண்ணெய் கசிவு மற்றும் கப்பல் சிதைவுகளை இதற்கு முன்பும் பார்த்துள்ளது.
இந்த நிலையில், நீர் கொழும்பு மற்றும் அதைச்சுற்றியுள்ள கடலோர பகுதி வளத்தை பாதுகாக்க அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மீன் வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக, நீர் கொழும்பு முதல் பாணந்துரை வரையிலான பகுதியில் மீன்பிடி தொழில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய வாழ்வாதாரமாக விளங்கும் கடல் பகுதியில் எண்ணெய்க் கப்பல் மூழ்கும் சம்பவம் இந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய இடியாக இருக்கும் என்று உள்ளூர் மீனவ சங்க தலைவர் ஜோஷ்வா ஆண்டனி தெரிவித்தார்.
"'கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்லக்கூடாது என்றால், நாங்கள் பிழைக்க முடியாது என்றுதானே அர்த்தம்," என்று அவர் கூறுகிறார்.
கடல் பகுதியில் கடந்த மாதம் 11ஆம் தேதி கப்பலில் நைட்ரிக் அமில கசிவால் தீ விபத்து ஏற்பட்டது பற்றி அதில் இருந்த மாலுமிகளுக்கு தெரியும் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர். அந்த அமிலம், உரம் மற்றும் வெடிபொருட்களுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
அந்த கப்பலின் உரிமையாளர்கள், தங்களுடைய குழுவுக்கு கசிவு பற்றி தெரியும் என உறுதிப்படுத்துகின்றனர். ஆனால், தீ பற்றி எரியும் முன்பு கத்தார் மற்றும் இந்திய துறைமுகங்களில் கப்பலை நங்கூரமிட முயன்றதாகவும், ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச்சூழலில்தான் அந்த கப்பல் தங்கள் நாட்டு கடல் பகுதிக்குள் நுழைய இலங்கை அனுமதி அளித்தது. இந்தியா, கத்தார் ஆகிய நாடுகள் மீதான இலங்கை மக்களின் கோபத்துக்கும் அதுவே காரணமாகியிருக்கிறது.
இந்த விவகாரத்தில், கடந்த வாரம் மீட்கப்பட்ட மாலுமிகளுடன் இருந்த கப்பல் கேப்டன் மீது காவல்துறையில் அதிகாரிகள் புகார் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை அந்த கேப்டன் மற்றும் பொறியாளரிடம் இலங்கை காவல்துறை அதிகாரிகள் 14 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அந்த கப்பலின் கேப்டன், தலைமை பொறியாளர் மற்றும் கூடுதல் பொறியாளர் நாட்டை விட்டு வெளியே செல்ல இலங்கை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
610 அடி நீளம் கொண்ட இந்த கப்பல், கடந்த மே 15ஆம் தேதி 1,486 கன்டெய்னர்களுடன் இந்தியாவின் குஜராத்தில் உள்ள ஹசீரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. நைட்ரிக் அமிலம், பல்வேறு வகை ரசாயனம், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கு தேவைப்படும் ரசாயன பொருட்கள் அந்த கன்டெய்னர்களில் இருந்துள்ளன.
பிற செய்திகள்:
- இஸ்ரேல் அரபுக் கட்சி ஆதரவுடன் அகற்றப்படும் நெதன்யாகு ஆட்சி
- உ.பி அரசியல்: மோதி - அமித் ஷாவுக்கு நேரடி சவால் விடுக்கத் துணிந்தாரா யோகி ஆதித்யநாத்?
- சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி - என்ன காரணம்?
- மோதி அரசுக்கு எதிர்பாராத நல்ல சேதியைச் சொல்கிறதா ஜிடிபி புள்ளிவிவரம்?
- "பாஜக வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது" - பாஜகவின் புதிய தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்