You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழர்கள், முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்துவந்த இலங்கை பௌத்த பிக்கு பத்தேகம சமித தேரர் கொரோனாவுக்கு பலி
இலங்கை நாடாளுமன்றத்துக்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பௌத்த பிக்கு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பத்தேகம சமித தேரர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தனது 69ஆவது வயதில் காலமானார்.
மாத்தறையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான இவர், 2001 தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்து வந்தார்.
தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கள் தொடர்பில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வந்த இவர், சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இளமைக் காலம் முதல் - இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியுடன் இணைந்து - சமித தேரர் செயற்பட்டு வந்தார் என்றும், அதனால்தான் அவர் இனவாதத்துக்கு எதிரான தீவிர கருத்துக்களைக் கொண்டவராக இருந்தார் எனவும், மூத்த பத்திரிகையாளர் என்.எம். அமீன் கூறுகிறார்.
"அவர் முற்போக்கான ஒரு பௌத்த பிக்கு. தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்களில் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். இலங்கைக்கான பாலத்தீன தூதுவரை சென்று சந்தித்த இவர், பாலத்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தை தனது காலி மாவட்டத்தில் ஆரம்பித்தார். தென் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இன ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் அவர் முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டார்" என, தேரர் தொடர்பில் தனது நினைவுகளை அமீன் பிபிசி யிடம் பகிர்ந்து கொண்டார்.
களணிப் பல்கலைக்கழகத்தில் தேரர் படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் ஒன்றினை அடுத்து, அவர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அதன் காரணமாக அவரால் பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியவில்லை. இருந்தபோதும் ஜெர்மன் சென்று அவர் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
இலங்கையில் யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து வடக்குக்குச் சென்ற சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளைக் கொண்ட சமாதானத் தூதுக்குழுவில், பத்தேகம சமித தேரர் முக்கிய நபராக இருந்தார் எனவும் அமீன் கூறினார்.
"கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் கலந்து கொள்வதற்காக, தனது சொந்த ஊரான பத்தேகம பிரதேசத்திலுள்ள மாணவர்களை இவர் அழைத்து வருவார். அதற்காக தனது சொந்த செலவில் பஸ் வண்டியை வாடகைக்குப் பெற்றுக் கொடுப்பார்" எனவும் அமீன் தெரிவித்தார்.
பத்தேகம சமித தேரர், பௌத்தத்தைப் பின்பற்றிய சிறந்த பிக்குவாகவும், அரசியல்வாதியாகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் இருந்து, பல நல்ல பணிகளைச் செய்தார் என்கிறார் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறை மூத்த விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர்.
பட்டதாரியான சமில தேரர், 'மதங்களின் ஒப்பீடு மற்றும் மூன்றாம் உலக அபிவிருத்தி' எனும் தலைப்பில் இங்கிலாந்தில் ஆய்வுப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் முபிஸால் குறிப்பிடுகின்றார்.
தமிழ், முஸ்லிம் மக்களை 'சிறுபான்மையினர்' என அழைக்கக் கூடாது என, சமித தேரர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
"சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசும் பௌத்த பிக்குகளுக்கு அநேகமாக ஏனைய பௌத்த பிக்குளிடத்தில் நல்ல பெயர் இருப்பதில்லை. ஆனால், பத்தேகம சமித தேரர் பற்றிய நல்லெண்ணம் ஏனைய பௌத்த பிக்குகளிடத்தில் இருந்தது" எனவும் முபிஸால் தெரிவித்தார்.
"சிறுபான்மையினருக்காக சமித தேரர் தொடர்ச்சியாக உரத்துப் பேசியும் பெயற்பட்டும் வந்த போதிலும், சிறுபான்மை மக்களிடத்திலிருந்து அவரின் அரசியலுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பது கவலைக்குரியதொரு விடயமாகும்" எனக் கூறும் முபிஸால்; அதனை ஒரு குறையாகவோ விமர்சனமாகவோ ஒருபோதும் சமித தேரர் சுட்டிக்காட்டியதில்லை எனவும் கூறினார்.
கொரோனா தொற்றுக்கு ஏற்கனவே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த தேரர் அண்மையில் தனது விகாரைக்குத் திரும்பியிருந்தார். இந்த நிலையிலேயே, மீண்டும் அவர் சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் சேர்கப்பட்ட நிலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தேகம சமித தேரரின் மறைவு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தனது கவலைகளையும், நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடி