You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் நாளை முதல் பயண கட்டுப்பாடு - ராணுவ தளபதி அறிவிப்பு
இலங்கையில் கோவிட்-19 வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, வியாழக்கிழமை (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணி வரை இந்த பயணத் தடை அமலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 31ம் தேதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணத் தடை விதிக்கப்படும் என இன்று முற்பகல் இராணுவ தளபதி அறிவித்திருந்த பின்னணியிலேயே, முழு பயணத் தடை குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட்டது.
இந்த காலப் பகுதியில் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு எதிர்வரும் 30ம் திகதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் நேற்றைய தினம் முதல் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, வியாழக்கிழமை முதல் 17ம் தேதி அதிகாலை வரை முழுப் பயணத் தடைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் சடுதியாக அதிகரித்து வருவதுடன், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கடந்த காலங்களை விட அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாளொன்றில் சுமார் 2500ற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதுடன், கோவிட் தொற்றில் உயிரிழந்தோரின் விபரங்கள் தொடர்பிலான அறிவிப்பில் நாளாந்தம் 20ற்கும் மேற்பட்ட மரணங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், கடுமையான சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தருவோரை தனிமைப்படுத்துவதற்கான கால எல்லை மீண்டும் 14 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, டென்மார்க், பிரித்தானியா, தென்ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவிவரும் வீரியம் கொண்ட கோவிட் வைரஸ் இனங்கள் அடையாளம் காணப்பட்டதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்திருந்தது.
இலங்கையில் கோவிட் தொற்றினால் 850 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இலங்கையில் கோவிட் 3வது அலை ஆரம்பித்திருந்ததாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
பிற செய்திகள் :
- திருப்பதியில் ஆக்சிஜன் இல்லாமல் இறந்த 11 கொரோனா நோயாளிகள்
- காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜெருசலேம் தாக்குதலுக்கு பதிலடி; அல்-அக்சா மசூதியில் வன்முறை
- இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை - கவலை தரும் தொற்று தரவுகள்
- கொரோனா நோயாளிகளை தாக்கும் மியூகோர்மைகோசிஸ்: தற்காப்பது எப்படி?
- பிகாரை தொடர்ந்து உ.பி காஸிபூர் நதிக்கரையிலும் ஒதுங்கிய சடலங்கள்
- கும்பமேளா திருவிழா கொரோனா சூப்பர் ஸ்பிரெட்டரா? பதற வைக்கும் களத்தகவல்
- 'இந்திய கொரோனா திரிபு சர்வதேச கவலைக்குரியது' - தடுப்பூசி, மருந்துகள் வேலை செய்யுமா?
- ரஷ்ய பள்ளி துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், ஆசிரியர் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்