You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் எதிர்கட்சிகள்
இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் இலங்கை பிரஜைகள் பலர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம், நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அந்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் தனி நபர்கள் என பலரும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
1978ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இலங்கை அரசியலமைப்பில் இதுவரை 19 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை குறைத்தல், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரங்களை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய சரத்துக்களை உள்ளடக்கிய வகையில் 19ஆவது திருத்தம் கடந்த ஆட்சியாளர்களினால் கொண்டு வரப்பட்டது.
எனினும், 19ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பல்வேறு தடைகள் காணப்படுவதாக தெரிவித்து, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 20ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய நிலையில், அது தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தற்போது உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, இதுவரை 12 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களில் பிரதிவாதியாக, சட்ட மாஅதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார, மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து, முன்னாள் ஆளுநரும் கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருமான கீர்த்தி தென்னக்கோன், ட்ரான்பெரன்ஸி இன்டர்நெஷனல் இலங்கை அமைப்பு, மனித உரிமை செயற்பாட்டாளரான கீம் அப்துல் சனுத், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.சி.சி.இளங்கோவன் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன், இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் அனில் காரியவசம், நாகானந்த கொடிதுவக்கு, மரின் லொஹினி பெர்ணான்டோ, லக்மால் ஜயகொடி ஆகியோரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள சரத்துக்களினால், இலங்கை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதனால், 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் மாத்திரம் நிறைவேற்ற முடியாது என்ற வகையில் தீர்ப்பை வழங்க வேண்டும் என மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக 20ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பொன்றை நடத்தி, அதனூடாகவே 20ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
- "அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்: இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
- ’நீட் தவறு என்றால் பாஜக அரசு அதனை ஏன் நீக்கவில்லை?`: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பிரத்யேக பேட்டி
- கொரோனா வைரஸ்: காணாமல் போன சீன பத்திரிகையாளர் 6 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: