இலங்கை தேர்தல்: 145 இருக்கைகளுடன் நாடாளுமன்றத்தில் நுழைகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

பட மூலாதாரம், SLPP
இலங்கை நாடாளுமன்றத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி கட்சியாக 128 ஆசனங்களை பெற்றுள்ளது. தேசிய பட்டியல் ஊடாக அந்த கட்சிக்கு மேலும் 17 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மொத்தமாக 145 ஆசனங்கள் இந்த முறை தேர்தலின் ஊடாக கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கூறுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அதன்படி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற, கட்சியொன்று 150 ஆசனங்களை பெற வேண்டியது அவசியம்.
இதில், 145 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், மேலும் சில கட்சிகள் இணையவுள்ளன.
குறிப்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்ட சில கட்சிகள், இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தன.

பட மூலாதாரம், SLPP
இதன்படி, வடக்கு மாகாணத்தில் தனித்து போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 61 ஆயிரத்து 464 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்த்து, யாழ்ப்பாணத்தில் மட்டும் தனித்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கு ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ந்தும் கைக்கோர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்த்து செயற்பட்ட தேசிய காங்கிரஸ், ஒரு ஆசனத்தை இந்த முறை தேர்தலில் கைப்பற்றியுள்ளது.

பட மூலாதாரம், SLPP
ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்ந்து செயற்பட்டுவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியன பெற்றுக்கொண்டுள்ள ஆசனங்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட ஆசனங்களை சேர்க்கும்போது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அந்த கட்சி மிக இலகுவாக பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டுள்ளது இதுவரை இல்லாத சாதனையாக கருதப்படுகிறது.
இலங்கை அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை தனக்கு அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து கோரி வந்தார். இந்த நிலையில், தேர்தலின் மூலம் அந்த பெரும்பான்மையை அவர் பெற்றிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












