You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிக இடங்களை கைப்பற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - ரணில் கட்சிக்கு பின்னடைவு
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மையான இடங்களை பெறும் கட்டத்தில் உள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளன.
வியாழக்கிழமை காலையில் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணணிக்கை தொடங்கியது முதலே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகலிலும் இதே நிலை நிலவியது.
வியாழக்கிழமை இரவு 10 மணி வரையிலான தேர்தல் முடிவுகளின் நிலவரப்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 41 லட்சத்து 5 ஆயிரத்து 602 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தி 16 லட்சத்து 68 ஆயிரத்து 467 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திலும், தேசிய மக்கள் சக்தி 2 லட்சத்து 76 ஆயிரத்து 328 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அத்துடன், இலங்கை தமிழரசு கட்சி 2 லட்சத்து 43 ஆயிரத்து 267 வாக்குகளை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 489 வாக்குகளை இதுவரை பெற்று மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 6.30 வரை வெளியான முடிவுகளின்படி 50 ஆயிரத்தை அண்மித்த வாக்குகளை மாத்திரமே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பெற்று, பின்னடைவை சந்தித்துள்ளது,
இவ்வாறான நிலையில், வடக்கை மையமாக கொண்டு இயங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 43 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையான வாக்குகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுவை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கட்சி பெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாடுகள் இடையே நீண்ட கால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: