You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை?
- எழுதியவர், விமலநாதன் விமலாதித்தன்
- பதவி, ஊடகவியலாளர் - சர்வதேச விவகாரங்கள்
(இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில், ஆசியாவின் பிற நாடுகள் இந்தப் பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது.
இந்தியாவின் செல்வாக்கு இலங்கை அரசியல் தளத்தில் பலகாலமாக இருந்து வந்த போதும், 2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே சீனாவின் கை இலங்கையில் மேலோங்கியது.
சீனாவின் நிதியுதவியுடன் பல்வேறு கட்டுமானத்திட்டங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன.
வருமான மீட்டுவதற்கு பொருத்தமற்ற திட்டங்கள் என அவற்றின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதும், சீனாவின் கால் அந்தக் காலப்பகுதியிலேயே மிக நன்றாக ஊன்றப்பட்டது.
2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால், இந்தியாவின் கை உள்ளதென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.
அந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் கட்சியைப் பிளந்து கொண்டு எதிர்த்தரப்புக்குச் சென்ற மைத்ரிபால சிரிசேனவின் செயற்பாடுகளின் பின்னால், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் இருந்ததாக, மகிந்தவின் தரப்பு விமர்சித்திருந்தது.
எவ்வாறாயினும் சீன சார்பு கொண்டிருந்த இலங்கையின் முன்னைய ஆட்சியாளர் தூக்கியெறியப்பட்டமையானது, இந்தியாவுக்கு மிகுந்த சாதகமாகவே அமைந்தது.
இலங்கை ஜனாதிபதிப் பதவியில் அடுத்து அமர்ந்த மைத்ரிபால சிரிசேனவும், பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் தமக்குள் முரண்நிலை கொண்டிருந்த போதும், இந்தியாவின் நட்புக்கரத்தை மிக உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சீனாவின் கட்டுமானத் திட்டங்களில், ஒரு தேக்கநிலை ஏற்படவே செய்தது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாதக் குண்டுவெடிப்புகளின் பின்னான விசாரணைகளுக்கு, இந்தியாவின் உறுதுணை விரைவாகக் கிட்டியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது இரண்டாவது பதவியேற்பின் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டதும், இந்தக் கோணத்தில் நோக்கப்பட வேண்டிய ஒன்றே.
இந்தக் காலப்பகுதியில், பதவியிறக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ தமது இந்தியத்தொடர்புகளூடாக இந்திய ஆட்சியாளார்கள் தம் மீது வைத்திருந்த பார்வையை மாற்றுவதில் வெற்றிகண்டார் என்றே சொல்லவேண்டும்.
இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் முக்கியஸ்தரும் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமிக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஏற்கனவே நிலவிவந்த நட்பு, இந்த முயற்சியில் வெற்றியடைய பெரிதும் உதவியிருந்தது.
அதேவேளை மகிந்த தமது சீன நண்பனையும் கைகழுவி விடாது இறுகப் பற்றியிருந்தார்.
அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித்தேர்தலில் பெற்ற அபார வெற்றிக்குப் பின்னால், ஈஸ்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் நிலவிய போதும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் ஆசீர்வாதம் உறுதியாக இருந்தது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷவுக்கு புதுடெல்லி வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பிதழ் வைக்கப்பட்டமையும், அதை ஏற்று தனது முதலாவது அயல்நாட்டு விஜயமாக அவர் அங்கு சென்றமையும் பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றன.
கடந்த ஆண்டு இறுதியில் இந்திய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினூடாக, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக, இந்தியா செயற்பட்டிருந்தது.
இதன் மூலம் அந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியத் தலையீடு ஏற்பட்டது.
இலங்கையில் பல காலமாக, பெரும்பான்மை - சிறுபான்மை முரண்நிலை காணப்பட்டு வருகின்ற போதிலும், சிறுபான்மை மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வந்த போதும், இந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையை இந்திய ஆட்சியாளர்கள் உள்ளடக்காமல் விட்டமை, சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியான கோட்டாபயவுடனான நல்லுறவை முறித்துக் கொள்வதற்கும் அதன் மூலம் அவர் முற்றிலுமாக சீனச் சார்பு கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதற்கும், இந்திய அரசாங்கம் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.
இலங்கையின் சிறுபான்மை இன மக்களான தமிழர்கள், பல ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் நிலை காணப்படுகின்றது.
இந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டே வந்திருக்கின்றது.
தமிழ்நாடு மாநிலத்தில் வலுவாக காலூன்ற முனைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, இந்தப் பிரச்சினையை தமிழ் அகதிகளுக்குச் சாதகமாகக் கையாண்டு, அந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையையும் உள்ளடக்கியிருக்க முடியும்.
அதன் மூலம், தமிழ்நாட்டு அரசியலில் தன் மீது சாதகமான அலையொன்றையும் கிளப்பியிருக்க, இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியால் முடிந்திருக்கும். எனினும், இலங்கை அரசினுடனான நல்லுறவை, தனது கட்சியின் எதிர்காலத்தை விடவும் முக்கியமாகப் பார்த்தது இந்திய ஆளுந்தரப்பு.
இந்தியாவுடன் பலகாலமாக நட்புப்பேணி வந்த நேபாளம், தற்போது சீனச்சார்பு நிலையை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவின் வெளியுறவுச் செயற்பாட்டில், இது குறிப்பிடத்தக்க ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் பல நாடுகளும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீள்வதற்குப் போராடி வருகின்ற இச்சுழலில், இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதலில், இருநாட்டுப் படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவு பேணிவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசு, அணிசாரா கொள்கையைப் பின்பற்றவே அதிக சாத்தியங்கள் உள்ளன.
இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழலில், அதில் பாரிய வெற்றி பெறுவதனூடாக, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதையே ஒரே இலக்காகக் கொண்டு செயற்படும் இலங்கையின் ஆளும்தரப்பு, இந்திய - சீன முரண்நிலைக்குள் ஒருதரப்பை மட்டும் சார்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
மேலும், இந்த இந்திய - சீன மோதலானது, பாரிய போராக வெடிக்கும் நிலையும் இல்லாத காரணத்தால், இருதரப்பில் ஒன்றை மட்டும் இலங்கை சார்ந்து நிற்பது, தமக்கு உகந்தது அல்ல என்பதை, இலங்கை ஆளும் தரப்பு தெளிவாக உணர்ந்திருக்கின்றது.
கடந்த காலத்தில் விட்ட பிழையை, ராஜபக்ஷ சகோதரர்கள் மீண்டுமொருமுறை விடப்போவதில்லை என்பதையே, அண்மைய அரசியல் நகர்வுகள் காண்பிக்கின்றன.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த 45 ஆண்டுகளில் இந்திய - சீன இராணுவப் படைகளுக்கு இடையே இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளார் நாயகமான அண்டனியோ குட்டெரெஸ், லடாக் பகுதியிலிருந்து இருநாட்டுப் படையினரும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல், வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த இரு நாடுகளின் சிறந்த நண்பனாகத் திகழும் இலங்கையின் ஜனாதிபதி செயலகமோ அல்லது வெளிவிவகார அமைச்சோ, இது தொடர்பாக எக்கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
பிராந்திய வல்லாதிக்க சக்திகளுடனான இந்தப் பிரச்சினையில் தலையிடாது, நகர்வதற்கு இலங்கை தற்போதைக்கு, மௌனம் என்ற ஆயுதத்தையே கையிலேந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் பாதிப்பு; 5 முக்கிய கேள்வி பதில்கள்
- ”சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்”: கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பதிலடி
- 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர் பழனியின் உடல்
- பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடை: கால்பந்து அளவிலான முட்டை குறித்த மர்மம் விலகியது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: