கொரோனா வைரஸால் வரலாறு காணாத அளவு சரிந்த இலங்கை ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டாலரின் விற்பனை விலை 200.46 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற பின்னணியில் இலங்கையின் வழமையான நடவடிக்கைகள் கடந்த 20ஆம் தேதி முதல் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் பிரதான வர்த்தகங்கள் உள்ளிட்ட அனைத்;தும் முடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட அன்றைய தினம் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 181.44 ரூபாயாக காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 11ஆம் தேதியே இலங்கையில் இரண்டாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதன்படி, மார்ச் மாதம் 11ஆம் தேதி இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 182.44 ரூபாயாகும்.

சுமார் ஒன்றரை மாத காலத்திற்கு அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி ஒரு ரூபாய் மாத்திரமே வீழ்ச்சி கண்டிருந்தது.

எனினும், மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரையான 27 நாட்களில் மாத்திரம் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி ஏறக்குறைய 18.02 ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது.

இலங்கை நாணய பரிமாற்று வரலாற்றில் இதுவரை காலம் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இவ்வாறான வீழ்ச்சியை சந்தித்திருக்கவில்லை என பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால், வெகுவிரைவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் பெருமளவில் வீழ்ச்சியடையும் சாத்தியம் காணப்படுவதாக பொருளியலாளர்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: