இலங்கை தாமரை கோபுரம் கட்டியதில் முறைகேடு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு

இலங்கை தாமரை கோபுரம்: 'முறைகேடு நடந்துள்ளது' - மைத்திரிபால சிறிசேன

பட மூலாதாரம், Getty Images

தெற்காசியாவிலேயே மிக பெரிய கோபுரமான தாமரை கோபுரத்தை இலங்கையில் நிர்மாணிக்கும் திட்டத்தின் போது பில்லியன் ரூபாய் சீனாவினால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அடிக்கல் நாட்டி தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த காலப் பகுதியில் சீன நிறுவனத்திற்கு வழங்கிய பணம் தொடர்பிலான தகவல்கள் எதுவும் கிடையாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை தற்போது இலங்கையில் பாரிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது.

தாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு வழங்கிய 2 பில்லியன் ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான எந்தவித தகவல்களும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை தாமரை கோபுரம்: 'முறைகேடு நடந்துள்ளது' - மைத்திரிபால சிறிசேன

தாமரை கோபுரத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

தாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்கு உத்தேச மொத்த செலவினமாக 19 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சீனாவினால் 16 பில்லியன் ரூபாய் கடனுதவியாக வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்படி, 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி சீனாவின் இரண்டு நிறுவனங்களுக்கும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்று கையெழுத்தானதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை ஆரம்பிக்கும் போது, இலங்கை அரசாங்கத்தினால் 2 பில்லியன் ரூபாய் நிதி சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட போதும், அந்த நிதித் தொகைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்த அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, நிதி வழங்கிய சீன நிறுவனத்தின் முகவரி போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், குறித்த சம்பவத்தை அடுத்து, சீன வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 16 பில்லியன் ரூபாய் கடனுதவி, 12 பில்லியன் ரூபாய் வரை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கடன் தொகைக்காக இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 240 கோடி ரூபாய் பணத்தை சீனாவிற்கு செலுத்தி வருவதுடன், எதிர்வரும் 10 வருடங்களுக்கு இவ்வாறே இந்த கடன் தொகையை செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டின் முதல் தவணையாக 120 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதுடன், தாமரை கோபுரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக இன்னும் 300 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பஷில் ராஜபக்ஷவின் பதில்

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் வினவப்பட்டது.

பஷில் ராஜபக்ஸ

பட மூலாதாரம், Getty Images

சீனாவிற்கு வழங்கப்பட்டு காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிதி தொடர்பில் அரசாங்கம் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கிறார்.

இந்த விடயம் தொடர்பில் போலீஸ் நிலையத்தில் உரிய முறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்து, விசாரணைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பஷில் ராஜபக் கூறுகின்றார்.

Presentational grey line

எழுக தமிழ்: இலங்கை தமிழர்களை இந்தியாதான் காக்க வேண்டும்

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :