இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் மனைவியிடம் ரகசிய விசாரணை

மொஹமட் சஹரான் ஹசீம்
படக்குறிப்பு, மொஹமட் சஹரான் ஹசீம்

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ரகசிய சாட்சியம் அளித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சஹ்ரானின் மனைவி நேற்று மாலை ரகசிய சாட்சியமளித்துள்ளார்.

கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியான ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத் ஆகியோர் தொடர்பான சாட்சி விசாரணைகளின் போதே இவர் சாட்சியமளித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இந்த சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியா மற்றும் அவரது நான்கு வயது மகளான மொஹமத் சஹ்ரான் ருக்ஷியா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மற்றைய தற்கொலை குண்டுத்தாரியான மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமதின் தந்தை மற்றும் சகோதரர்கள் நீதவான் முன்னிலைக்கு நேற்றைய தினம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமுடன் பயிற்சிகளை எடுத்துக் கொண்டதாக கூறப்படும் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹரானின் மனைவியிடம் இரகசிய விசாரணை

பட மூலாதாரம், Getty Images

இந்த சந்தேக நபர்கள் அம்பாறை பகுதியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

அரசப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளிலிருந்த முகாம்களில் பயிற்சிகளை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த மாதத்தில் மட்டும் அம்பாறை பகுதியில் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: